Thursday, January 26, 2006

இறுதிப் புயல் வீசும்- சுபவீ

ஈழத்தில் எந்த நேரத்திலும் போர் மூளக்கூடும் என்பது இங்கு பலருக்கு ஒரு செய்தி மட்டுமே. வேறு பலருக்கு அது ஒரு செய்தி கூட இல்லை. ஆனால் ஈழ மக்களுக்கு அது வாழ்வின் ஓலம், உயிரின் வலி.

"18 வயது இளைஞர்கள்
பழகிக் கொண்டார்கள்
ஈழத்தில் களமாடவும்
இங்கு வாக்களிக்கவும்''

என்று ஒரு கவிதையை நீண்ட நாட்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். இன்றைக்கும் அவ்வரிகள் பொருத்தமாக உள்ளன. போர் என்பது பேரழிவு. வாழும் நிலத்தைக் சுடுகாடாக்கும் வன்முறை, உலகின் எந்த மூலையில் உள்ள மக்களும் போரை விரும்ப மாட்டார்கள். ஆனால் தங்கள் மீது திணிக்கப்படும் போரை, ஈழத்துப் போராளிகளும், தமிழீழ மக்களும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்திற்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர்.

17122005 அன்று யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாக தர்சணி என்ற இளம்பெண் இலங்கைக் கடற்படையினரால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு உள்ளார். கல்லோடு கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நிலையில் அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இலங்கை ஆயுதப்படையினரால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் பொதுமக்களுக்கு எதிராகக் காட்டுமிராண்டித் தனமான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதை எதிர்த்து அங்கு உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமயில் இலங்கை மானிடரிங் மிஷன் என்ற அமைப்பிடம் மனுக் கொடுக்க ஊர்வலமாகச் சென்றார்கள். ஆனால், அவர்கள் இலங்கை இராணுவத்தால் தடுக்கப்பட்டு பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பேராசிரியர்களும், மாணவர்களும் இரத்தம் கொட்டும் அளவுக்குத் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தாங்கள் எச்சரிக்கை செய்வதற்காக வானில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை இராணுவம் கூறினாலும், பேராசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் துப்பாக்கிச் சூட்டால் காயம் எற்பட்டு உள்ளது என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவில் தேவாலயத்தில், சீறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர், மிகச் சிறந்த தமிழின உணர்வாளர், மனித நேயர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவி உட்பட 8 பேர் படுகாயப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்குப் பின்னால் சிங்கள இராணுவமும், துரோகக் கூட்டமும் ஒளிந்திருப்பதை எவராலும் எளிதில் உணரமுடியும்.

புலிகளை இடறும் முயற்சியில் இராணுவம் இறங்கி இருக்கிறது. அரசு அதற்குத் துணை போகிறது. விரைவில் அங்குப் போர் மூண்டால் அதற்குச் சிங்கள இனவெறியே காரணம் என்பதை அனைத்துலகச் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். போருக்கான நாளை, சிங்களர்கள் குறிக்கட்டும். வெற்றிக்கான நாளை, தமிழர்கள் குறிப்பார்கள்.

"விரைவில் இறுதிப் புயல் வீசும்
வேங்கைகள் ஆள்வார் தமிழ்த் தேசம்.''

3 comments:

இரா.சுகுமாரன் said...
This comment has been removed by a blog administrator.
இரா.சுகுமாரன் said...

வணக்கம்,
தங்களின் வலைப்பதிவை இன்று பார்வையிட்டேன். அறிவுமதி அவர்களின் தை 09-02-2006 அன்று தமிழ் மணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்மணம் பகுதியில் சிலர் கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கையில் உங்கள் வருகையாலும் அறிவுமதி போன்றோரின் வருகையாலும் “தமிழ்மணம்“ மேலும் மணம் வீசும். என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அடிக்கடி எழுதுங்கள்.
இரா. சுகுமாரன் புதுச்சேரி

Unknown said...

//தாங்கள் எச்சரிக்கை செய்வதற்காக வானில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை இராணுவம் கூறினாலும், பேராசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் துப்பாக்கிச் சூட்டால் காயம் எற்பட்டு உள்ளது என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவில் தேவாலயத்தில், சீறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர், மிகச் சிறந்த தமிழின உணர்வாளர், மனித நேயர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவி உட்பட 8 பேர் படுகாயப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்குப் பின்னால் சிங்கள இராணுவமும், துரோகக் கூட்டமும் ஒளிந்திருப்பதை எவராலும் எளிதில் உணரமுடியும்.//

உரத்த குரலாக தமிழகத்தில் ஈழ கொடுமைகள் ஒலித்தாலும், தமிழகத்தில் கண்டு கொள்ள ஆள் ஏது?. எங்கேணும் உண்டா இக்கொடுமை?., பாகிஸ்தானில் பிறந்த அரசியல் தலைவர்கள் அங்கு சென்று உருகலாம்., இங்கு பிறந்த பாகிஸ்தானி தலைவர்கள் இங்கு வந்து மகிழலாம்., பின்புறம் வெடிச் சத்தமும் விடாமல் கேட்கும். ஆனால் ஈழம் பற்றிப் பேசக் கூட முடியவில்லை!!.