Sunday, December 31, 2006

ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிக்கும் நிலைக்கு நாம் இன்னும் வந்துவிடவில்லை

சுப. வீரபாண்டியன்

அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படும் சுப. வீரபாண்டியன்.

உண்மைதான். அதற்காக தலித் அரசியல் போன்றவைகளை மறுக்க முடியாது. காரணம் இந்த ஒடுக்குமுறை பிறப்பின் அடிப்படையில், சாதியின் அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பது இந்தியா முழுமைக்கும் பொதுப்படையாகவே இருக்கிறது. எனவே அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்ப்பு என்பதும் ஒரு பொதுத் தன்மையோடு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அம்பேத்காரை மராட்டியத்தில் பிறந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. பூலேயும் மராட்டியத்தை சார்ந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. சாகுமகராஜ், அம்பேத்கர், பூலே போன்றவர்கள் மராட்டியத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள்.பார்ப்பன ஆதிக்கமும் மராட்டியத்திலேதான் துளிர்த்தது. சித்பவன் பார்ப்பனர்கள் தான் இந்தியாவின் அரசியலை நெடுகவே கையாண்டு வந்து இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ன் தோற்றம் மராட்டியத்தில்தான் இருக்கிறது. திலகரிலிருந்து அது தொடங்குகிறது. வீரசவார்க்கரின் வழியில் வருகிறது. ஹெட்சுவாரிடமிருந்து அது தோற்றம் பெறுகிறது. எனவே இந்த ஒடுக்குமுறை என்பது பொதுவாக இருக்கிறபோது அதற்கான எதிர்ப்பு என்பதும் பொதுத்தன்மை உடையதாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் இதனை இந்திய தன்மை கொண்டதாகவே கொண்டு போக வேண்டும் என்ற தேவை இல்லை.

எதிர்ப்பில் ஒரு பொதுத்தன்மை இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒடுக்குமுறைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. தலித்திய சாதிகளுக்குள்ளும் வேறுபாடுகள் இருக்கின்றன. அம்பேத்கர் பிறந்த மகர் என்ற சாதி இங்கே இல்லை. இங்கே இருக்கிற சாதிகளின் பெயர்கள், தன்மைகள் வேறாக இருக்கின்றன. ஆகையால் இந்த தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவகையில் அந்தத் தலித்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை எடுத்துச் செல்வது சரியாக இருக்கும்.

தலித் என்ற சொல்லுக்கு தமிழில் பொருள் என்ன?

தலித் என்பது மராட்டியச் சொல், தலித் என்றால் மண்ணின் மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள் சிலர். எனக்கு சரியான பொருள் விளங்கவில்லை. இது அம்பேத்கரிடம் வந்த சொல் என்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அம்பேத்கர் இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அம்பேத்கர் அட்டவணைச் சாதி, தீண்டப்படாதவர்கள், ஒடுக்கப்பட்டோர் என்ற சொற்களைத்தான் பயன்படுத்துகிறார். பின்னால்தான் இந்த சொல் வந்திருக்கிறது. அந்த சொல்லின் சுருக்கம் கருதி இந்தியா முழுவதும் புகழ் பெற்றுவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நாம் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்ற சொல்லைத்தான், நீண்ட சொல்லாக இருந்தாலும் பயன்படுத்துகிறோம். அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று பயன்படுத்தலாம். ஆதி திராவிடர் என்ற சொல் இருக்கிறது. இனி ஆதி தமிழர்கள் என்ற சொல்லை பயன்படுத்தலாம்.

திராவிடம் என்ற சொல் இனி வேண்டாம் என்று கருதுகிறீர்களா?

பொதுவாக என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் தளங்களில் தமிழன் என்ற சொல்லை கூடுதலாகவும் சமூக நீதி தளங்களில் திராவிடன் என்ற சொல்லை கூடுதலாகவும் பயன்படுத்துகிறேன். திராவிடம் என்ற சொல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மக்களை உள்ளடக்கியதாக நான் கருதவில்லை. அவர்கள் யாரும் தங்களை திராவிடன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. திராவிடன் என்ற சொல்லே பார்ப்பனீய கருத்து நிலைக்கு எதிரான ஒரு போர்க் குணம் கொண்ட சொல்லாக இருக்கிறது. திராவிடம் தான் இந்த மண்ணில் பார்ப்பனீயத்தை எதிர்த்து இந்த நூற்றாண்டில் எழுந்த முதல் குரல் என்பது என் கருத்து.

சித்தர்களின் காலத்திலிருந்து அந்தப் பார்ப்பனீயர் எதிர்ப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தைத் தேடிப் பார்த்தால் கூட இருக்கிறது. அது ஒரு இயக்கமாகக் கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. வள்ளலாரிடமும் அடிகளாரிடமும் பார்ப்பன எதிர்ப்பு இருந்த போதிலும் கூட அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கட்டமைத்த பெருமை திராவிடத்திற்கு உண்டு. அதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் உருவாகி விட்டாலும் கால்டுவெல் காலத்திலிருந்து ஒரு பாரம்பரியமான வரலாற்று தொடர்ச்சியிருந்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பை கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. எனவே திராவிடம் என்ற சொல் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டும்.

இராகவ அய்யங்கார், கோபால அய்யர் போன்ற தமிழறிஞர்களின் பங்கை என்னவென்று சொல்வீர்கள்?

தமிழ்மொழியின் முன்னேற்றத்தில், இனத்தின் முன்னேற்றத்தில் கூட பார்ப்பனர்களின் பங்கு இருப்பதை மறுக்கவில்லை. எப்போதும் விதியை வைத்துத்தான் நாம் பேச முடியுமே தவிர விதி விலக்கை வைத்து அல்ல. எத்தனை பார்ப்பன அறிஞர்கள் அப்படிப் பாடுபட்டார்கள்? திரும்பத் திரும்ப உ.வே. சாமிநாதய்யரைப் பற்றிச் சொல்வார்கள். உ.வே.சாவுக்கு முன்பு பதிப்புத்துறையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த நாவலரும், சி.வை. தாமோதரம் பிள்ளையும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். அந்த வரலாறு மெதுவாக மறைக்கப்படுகிறது. உ.வே.சா. பதிப்பாசிரியர் என்பது உண்மைதான். ஆனால் இறுதி வரையில் அவர் பார்ப்பனீயக் கருத்துக்களை விடாதவராகவே இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களையும் தாண்டி இலக்கியத்துறையில் மட்டுமில்லாமல் பகுத்தறிவுத் துறையில் A.S.K. அய்யங்கார் போன்றவர்கள் இருந்து இருக்கிறார்கள். விதிவிலக்குகளை வைத்துக் கொண்டு விதிகளை வகுக்க முடியாது.

வேத மொழி சமஸ்கிருதம்தான் என்று கருதுவதோடு இன்னமும் அவர்கள் தங்களுடைய தாய்மொழி சமஸ்கிருதம் என்கிற மனோ நிலையிலிருந்து விடுபடவில்லை.

ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்தால் பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுவார்கள் என்று பெரியார் எச்சரிக்கை செய்து இருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் தமிழ்க் கல்வி வலியுறுத்தப்படுகிறதே...
அன்றைய பெரியாரின் எச்சரிக்கை என்பது மிகுந்த கவனத்துக்குரியது. பெரியார் தமிழைப் பற்றிக் கவலைப்பட்டதை காட்டிலும், தமிழனைப் பற்றிக் கூடுதலாகக் கவலைப்பட்டார். தமிழனின் முன்னேற்றத்திற்குத் தடையாக தமிழாகவே இருந்தாலும் பெரியார் அதனை எதிர்த்து இருக்கிறார். எனவே தமிழன் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில்தான் அவர் ஆங்கிலம் படிபடி என்று திரும்பத் திரும்ப சொன்னார். அவருடைய பழக்கம் ‘ஓங்கிச் சொல்லுதல்’. கொஞ்சம் ஓங்கிச் சொன்னால்தான் பத்துக்கு நாலு பழுதில்லாமல் போகும் என்று கருதினார்.

எனக்குத் தமிழ் மீது எந்த விரோதமும் இல்லை. நான் தமிழில்தான் பேசுகிறேன். தமிழில்தான் எழுதுகிறேன். எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். நான் தமிழ் மக்களுக்காகத்தான் பேசுகிறேன். அதை அறிவியல் மொழி ஆக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும் சொல்கிறேனே தவிர எனக்கு வேற ஒன்றும் கோபம் இல்லை என்று பெரியாரே எழுதி இருக்கிறார். ஆகையால் அன்றைக்கு அவர் சொன்ன அந்தச் சூழலில் நிச்சயமாக 60 களிலும் 70 களிலும் ஆங்கிலம் கற்காமல் தமிழர்கள் இருந்து இருந்தால் பார்ப்பனர்கள் மட்டுமே முன்னேறி இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. இன்றைக்குச் சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது.

இன்றைக்குக் கணிப்பொறி மொழி என்பது தமிழும் அல்ல. ஆங்கிலமும் அல்ல. எந்த மொழியும் அல்லாமல் தனி மொழியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே இன்றைக்கு நாம் பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கி இருக்கிறோம். ஆகையினால் ஆங்கிலம் படித்தால்தான் முன்னேற முடியும் என்ற நிலையிலிருந்து மாற்றமில்லை. ஆனால் ஆங்கிலத்தை புறக்கணித்து விடுகிற நிலைக்கு நாம் முன்னேறி விடவில்லை என்பதையும் ஏற்க வேண்டும்.

தமிழ்நாட்டில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில், நீதிமன்றங்களில், வழிபாட்டுத் தலங்களில், இசை அரங்குகளில் அனைத்தும் தமிழே இருக்க வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். அதே நேரத்தில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்றுக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறது.

தேசியம் என்பது கற்பிதமா?

தேசியம் என்பதே ஒரு கற்பிதம்தான் என்று தோழர் அ. மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த நூலில் கூட ஒரு இடத்தில் அது தேவையான கற்பிதம் தான் என்று கூறுகிறார். நீங்கள் கற்பிதம் என்று எடுத்துக் கொண்டால் குடும்பம் கூட கற்பிதம்தான். இயற்கையின் விளைபொருளல்ல. எந்த மனிதனும் குடும்பத்தினுடைய உள் அடக்கத்தோடு இயற்கையின் விளைபொருளாக உருவாக வில்லை. எந்தக் கற்பிதமும் இல்லாமல் இயற்கையாகவே இந்த உலகம் அமைய வேண்டும் என்றால் மீண்டும் குகைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் நேரும்.

கற்பிதங்கள் சில நேரங்களில் ஒழுங்கமைவுகளாகின்றன. புது ஒழுங்குக்காகச் சில தேவைகள் ஏற்படுகின்றன. அதிலும் மொழி எந்த விதத்திலும் கற்பிதம் அல்ல. அது இயற்கையின் விளை பொருள். எனவே மொழி சார்ந்த, மொழியின் அடிப்படையில் கட்டப்படுகிற ஒரு தேசியம் என்பது ஒரு ஒழுங்கமைவாகவும், தேவையாகவும் சரித்திரத்தில் சரியானதாகவும் இருக்கும்.

தேசியம் என்பது முதலாளித்துவ கருத்தின் வெளிப்பாடு என்கிற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. தமிழ்த் தேசிய சிந்தனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய இலக்கியங்களிலே இருக்கின்றன. ஆனால் பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகுதான் ஐரோப்பிய நாடுகளில் அப்படி ஒரு வடிவம் உருவானது. என் கருத்தில், குழந்தை எப்போதோ பிறந்து விட்டது, பெயர் வைப்பதற்கு 19 நூற்றாண்டுகள் ஆகி இருக்கலாம். ஆகையால் அது அப்படியே முதலாளித்துவத்தின் இறக்குமதி என்று நாம் கொள்ள வேண்டியதில்லை. இருந்தாலும் பிழை இல்லை. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு அந்தச் சிந்தனை வந்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்த எவ்வளவோ நல்ல விஷயங்களை நாம் பயன்படுத்தி இருக்கிறோம். தேசியம் என்பது அப்படிப்பட்ட நல்ல தேவையானவைகளில் ஒன்று.

தமிழ்த் தேசியம் என்பது....

தேசியங்களில் பல வகைகள் இருக்கின்றன. மதவழித் தேசியம், நிலவழித் தேசியம் மொழி வழித் தேசியம் எல்லா வழித்தேசியமும் உலகில் இருக்கின்றன. பாகிஸ்தான் மதவழி தேசியமாகத்தான் பிரிந்து போனது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் ஏன் பிரிந்து போனது என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் அங்கு மதவழி தேசியம் தோற்றது. எல்லோருக்கும் மதம் ஒன்றாக இருந்தாலும் உங்கள் மொழி வேறு. எங்கள் மொழிவேறு என்றுதான் முஜிபுர் ரகுமான் எழுந்தார். எனவே அங்கு மதவழித் தேசியத்தை மொழிவழித் தேசியம் வென்றது.

பொதுவாக நிலவழித் தேசியம்தான் சரி அல்லது மொழிவழித் தேசியம்தான் சரி என்று நான் குறிப்பிடவில்லை. மொழிவழித் தேசியம் தான் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது என்று நான் கருதினாலும் ஒரு மொழிக்கு ஒரு நாடு என்று ஆதித்தனார் சொன்னதைப் போல உலகத்தை எளிதாக வரையறுத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு மதத்துக்கு ஒரு நாடு என்றால் பத்து நாடுகள் தாம் இருக்க முடியும். நிலத் தொடர்ச்சியை ஒட்டி நாடுகள் பிரிக்கப்படால் ஐந்து அல்லது ஏழு நாடுகள்தான் பிரிக்க முடியும். மொழிக்கு ஒரு நாடு என்றால் குறைந்தபட்சம் ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாகும். ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாவதில் நமக்கு மறுப்பு இல்லை. அதற்கான காலம் தொலைவில் இருக்கிறது.

ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.

தமிழ்த் தேசியம் எந்த மாதிரி கட்டமைக்கப்பட வேண்டும்?

ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படும்போது அங்குச் சாதி செத்துப் போகும். வர்க்க அடிப்படையிலும், பால் அடிப்படையிலும், சமத்துவமும், சாதி அற்ற சமூகமான ஒரு தமிழ்த் தேசியமே நாம் விரும்புகிற கட்டமைப்பு.
இந்திய தேசியம் என்பது இந்துத்துவ தேசியம் என்ற கருத்து உண்டு. தமிழ்த் தேசியத்திற்கு எதை முன் மாதிரியாக வைத்துக் கொள்கிறீர்கள்....
இந்தி தேசிய இனம்தான் நம்மை ஒடுக்குகிறது என்கிற கருத்து இருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தேசியம் இனம் ஒடுக்கும் இனமாகவும், தமிழ் இனம் ஒடுக்கப்படுகிற இனமாகவும் இலங்கையில் இருப்பதைப் போல இங்கே இல்லை. இங்கே கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை structural oppression இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். எனவே தமிழ்த் தேசிய விடுதலை என்பது இந்துத்துவ பார்ப்பனீயத்திற்கு எதிரான ஒரு இலக்கைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

தமிழ்ச் சமூகம் சாதிய சமூகமாக பிரிந்து கிடக்கிறது. சாதியை எதிர்க்காமல் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க முடியாது. எனவே முதல் பகை சாதியியம். இன்னொரு பகை ஆணாதிக்கம். இப்பின்புலத்தில் இரண்டு இலக்குகள் உள்ளன. ஒன்று இந்திய இந்துத்துவ தேசியம். இன்னொன்று விரைந்து வளர்ந்து கொண்டிருக்கிற உலகமயமாக்கல். உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் போன்றவை தேசிய இனங்களை அழிக்க புறப்பட்டு இருக்கிற எதிர் பகைகள்.
இந்திய இந்துத்துவ தேசியத்தையும் உலக மயமாக்கலையும் எதிர்க்க வேண்டியது தமிழ் தேசியத்தின் அடிப்படை. இவைகளை எதிர்த்துக் கட்டமைக்கப்பட இருக்கிற தமிழ்த்தேசியம் எதனையும் முன் மாதிரியாகக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதல்ல. உலகில் பல தேசியங்கள் சரியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை சாதிகளற்ற, பால்வேறுபாடு இல்லாத, வர்க்க வேறுபாடு இல்லாத உலகமயமாக்கலிருந்த விடுபட்டு நிற்கிற ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தில் வழிபாடு, சமயம் போன்றவைகள் இருக்குமா?

சமயம் வழிபாடு போன்றவைகள் தனிமனித நம்பிக்கைகளையும், தனி மனித அனுபவங்களையும், தனி மனித உரிமைகளையும் சார்ந்தவை. ஒரு அரசு அதில் தலையிட வேண்டியதில்லை. ஒரு அரசுக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களாகவோ, கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. அது அவரவர் தனிப்பட்ட விஷயம். லெனின் சொன்தைப் போல it is a private affair. ஆனால் எந்த விதத்திலும், எந்த மதத்திற்கும் அரசு ஊக்கமளிக்க வேண்டியதில்லை. எல்லா மதத்திற்கும் சார்பாக ஒரு அரசு இருக்கிறது என்பதுதான் secular என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த மதத்தையும் சாராமல் இருப்பது என்பதே சரி. எல்லாருக்கும் பொதுவானது என்பது எல்லோருக்கும் ஊக்கமளிப்பது ஆகும். அது அரசினுடைய வேலை அல்ல.
எந்த மதத்தையும் சாராமல், எந்த மதத்திற்கும் சலுகை காட்டாமல் எந்த மதத்தினுடைய விழாவையும் அரசு அங்கீகரிக்காமல் அது அந்த அந்த மதத்தின் அந்த அந்த மனிதர்களின் தனிப்பட்டவை என்று தலையிடாமல் இருக்கலாமே தவிர அதை ஆதரிக்க முடியாது. எனவே சமயம் வழிபாடு ஆகியவைகளைத் தமிழ்த் தேசியம் ஊக்குவிக்காது. தலையிடாது.

அம்பேத்கர் மதத்துக்குள் சமரசத்தை தேடினார். அதுபோலவே தமிழ்த் தேசியம் இருக்கிறதே?

நான் குறிப்பிடுகிற தமிழ் தேசியம் சமரசமானது அல்ல. நான் எல்லா மதத்தையும் ஏற்றுக் கொண்டே மதத்துக்குள் சீர்திருத்தம் என்றோ வரவில்லை. தமிழ் தேசியம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது. தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடாது என்பதுதானே தவிர அது சமரசம் இல்லை. தனிப்பட்ட நபர்களின் உரிமையை போற்றுகிற செயல். அதைத் தவிர எந்த விதமான சமரசமான தமிழ்த் தேசியத்தையும் முன் வைக்கவில்லை.
அம்பேத்கர் சமரசம் செய்து கொண்டார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்துத்துவத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் அவர் எதிர்த்தார் என்பதுதான் உண்மை. அவர் பௌத்த மார்கத்திற்கு மாறியது சமரசம் அல்ல. பௌத்தம் என்பது மதம் அல்ல. மார்க்கம் என்பதை உணர்ந்தார். அது மனித வாழ்க்கைக்கு தேவையான அறிவு மார்க்கம் என்று கருதினார். உண்மையில் புத்தன் சொன்ன நெறிகள் அத்தகையானவைதான். பிறகு நாகார்ஜூனன் என்ற பார்ப்பனன் உள்ளே நுழைந்த பிறகு அது இந்து மயமாக்கப்பட்டதே தவிர, அம்பேத்கர் சமரசமற்ற முறையில் இந்துத்துவத்தை எதிர்த்தார் என்பதே உண்மை.

இந்தச் சமூக அமைப்பில் உள்ள குறைகளைப் போராடிப் பெற முடியும் என்கிற மாதிரிதான் பெரியாரின் செயல்பாடுகள் இருந்தன...

ஒரு நிலவுடைமைச் சமுதாயம் வீழ்ச்சியுறும்போது முதலாளித்துவ சமூகம் தானாகவே எழும் என்பதுதான் மார்க்சியக் கோட்பாடு. பெரியார் நிலவுடைமை சமூகத்தோடு அதன் கொள்கையோடு எந்தச் சமரசமும் செய்துக் கொள்ளவில்லை. மதம், சாதி எல்லாம் நிலவுடைமை சமூகத்தின் எச்சங்கள். ஆணாதிக்கம் உட்பட அனைத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்தார். முதலாளித்துவச் சிந்தனையோடு பெரியார் முழுமையாக முரண்பட்டார் என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் அறிவியல் என்பது முதலாளித்துவ சமூகத்தின் விளைபொருளாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நவீனச் சமூகத்திற்குத் தேவையான பலவற்றை முதலாளித்துவச் சமூகம் ஈன்றெடுத்திருக்கிறது. எனவே முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சமன்மைச் சமூகம் (சோசலிச சமூகம்) நோக்கிப் போகிறபோதுதான் முதலாளித்துவ சமூகத்தின் குறைபாடுகளிலிருந்து முற்றிலுமாக விடுபடமுடியுமே தவிர, அரைநிலவுடைமை, அரை முதலாளித்துவச் சமூகமாக இருக்கிற ஒரு காலக்கட்டத்தில் முதலாளித்துவச் சமூகத்தோடு ஒரு சாய்வு தொடக்கத்தில் ஏற்படத்தான் செய்யும். அதுதான் பெரியாரிடத்திலே இருந்தது. அது காலத்தின் தேவை. சரியானது. அது ஒரு பிழையான பார்வை அல்ல.

மொழி என்பது கருத்து பரிமாற்றத்திற்கான கருவி என்ற மார்க்சியர்கள் கருத்து பற்றி...

இன்றைக்கு மார்க்சியத் தோழர்களிடம் கூட இந்தக் கருத்துப் பற்றி மாற்றங்கள் ஓரளவுக்கு வந்திருக்கின்றன. முன்பு அவர்கள் சொன்னதைப் போல மொழி ஒரு கருவி என்று சொல்லவில்லை. மொழிப் பற்றிய சிந்தனையில் மார்க்சியத் தோழர்களிடையே கருத்துக்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இருப்பினும் இன்னமும் அப்படிச் சொல்லுகிற தோழர்கள் இருக்கவேச் செய்கிறார்கள். மொழி ஒரு கருவி என்றும் அது சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் இருக்கிறது என்றும் கருதுகிற தோழர்கள் இருக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரைக்கும் இரண்டு கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை. அதாவது சாதி, மொழி என்பவையெல்லாம் மேல் கட்டுமானத்தைச் சார்ந்தவை என்பது ஒரு காலக்கட்டத்தில் பார்வை. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அவை அடித்தளத்திலும், மேற்கட்டுமானத்திலும் இரண்டிலுமாக இயங்குகின்றன. ஆலமரத்தின் விழுதுகள் மேலிருந்து கீழிறங்கும். கீழே இறங்கின பிறகு அடிமரம் ஆடிப்போன பிறகு விழுதுகள் தான் தாங்கி நிற்கும். மொழி என்பது இன்றைக்கு அடிமரமாக இருந்து கொண்டு இருக்கிறது. மொழி அடித்தளத்திலே இயங்குகிறது. சாதி அடித்தளத்திலும் மேற்கட்டுமானத்திலும் இயங்குகிறது. எனவே மொழி மேற்கட்டுமானத்தை சார்ந்ததல்ல. அடித்தளத்தைச் சார்ந்தது. ஏன் அடித்தளத்தைச் சார்ந்தது என்றால் பொதுவாக உற்பத்தி கருவிகள், உற்பத்தி உறவுகளை வைத்துதான் மார்க்சிய தோழர்கள் சொல்வார்கள்.

குரங்கிலிருந்து மனிதனாக மாறியபொழுது உழைப்பு வகிக்கிற பாத்திரத்தில் மொழிக்கு இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஏங்கெல்ஸ் சொன்ன கருத்தில் நாம் மொழியையும் சேர்க்க வேண்டும். மொழி ஒரு கருவி என்பது மொழியைச் சிறுமைப்படுத்துகிற கருத்தாகவே தோன்றுகிறது. கருவி எப்பொழுதும் உடலின் புறத்தே இருப்பது. ஒரு முறை இன்குலாப் கூட கூறினார். அது கருவியாகவே இருக்கட்டும். முகம் சவரம் செய்கிற கருவியைக் கூட நாம் சுத்தமாக வைத்திருக்கிறோம். கருவி கூர்மையாக இருக்க வேண்டாமா என்று சொன்னார். அடிப்படையில் மொழி என்பது வெளியிலிருப்பது அல்ல. உங்கள் மூளையில் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைக்கப்பட்டதாகவே மொழி இருக்கிறது. மொழி செயற்கையன்று. இயற்கை. மொழியில்லாமல் ஒரு மனிதனால், ஒரு சமூகத்தால் வாழ முடியாது. சிந்தனை என்பது மொழியின் பாற்பட்டது. எனவே மூளை இயங்குகிற வரையில் மொழி இயங்கும். ஆகையால் மொழி என்பது உள்ளும், புறமுமாக இயங்கிக் கொண்டிருக்கிற மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு கூறு. மொழியை ஒரு கருவி என்று சொல்வது அதனைக் கொச்சைப் படுத்துவதாகும்.

இடது சாரி தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று பெரியாரைக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இடது சாரிகளான சிங்காரவேலர், ஜீவா ஆகியோர்கள் பெரியாரோடு முரண்பட்டனரே?

தலைவர்கள் பலர், அவரோடு இணைந்து பணியாற்றிய காலமும், பிரிந்து போன காலமும் உண்டு. அவர்களுக்குள் குறிப்பிடத்தகுந்தவர்கள் சிங்காரவேலரும் ஜீவாவும். பெரியாரின் சுயமரியாதை சமதர்ம திட்டத்தினுடைய சிற்பிகள், சிங்காரவேலரும், ஜீவாவும். சுயமரியாதை வரலாற்றில் சிங்காரவேலருக்கு ஓரிடம் உண்டு. அவர்கள் பிரிந்து போனது ஒரே ஒரு கட்டத்தில்தான். 1932-ல் சோவியத் யூனியனுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளைப் பெரியார் முன் எடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் கொண்டு வந்ததும், மே தினத்தைக் கொண்டாடச் சொன்னதும், பிள்ளைகளுக்கு லெனின் ஸ்டாலின் என்று பெயர் வைக்கச் சொன்னதும் பெரியார்தான்.
1936க்கு பிறகு சர்.ஏ.டி. பன்னீர் செல்வத்தின் அறிவுரைப்படி ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டாம் என்கிற கணக்கில் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிங்காரவேலர் ஜீவா போன்றவர்கள் வெளியேறினார்கள் என்று படித்து இருக்கிறேன்.

அன்றைய முதன்மையான தேவையாக சம உரிமையை, பொது உரிமையைக் கருதுகிறார் பெரியார். ஆனால், சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் பொதுவுடமையைக் கருதுகிறார்கள். இது பற்றிய விவாதம் நீண்ட நெடிய விவாதமாக நடந்து கொண்டே இருக்கிறது. எனினும் பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னாரே தவிர, பொதுவுடமைக் கொள்கைகளை இறுதி வரை எதிர்க்கவில்லை. இறுதி வரை பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவே இருந்ததைப் பார்க்க முடிகிறது. 1948, 1949 ஆண்டுகளில் பொதுவுடமைத் தோழர்கள் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் மிகக் கொடுமையாக ஒடுக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம்தான். பெரியாருக்கு சிறையிலிருந்து வெளிவந்த எம். கலியாணசுந்தரமே இது குறித்து நீண்ட கடிதத்தை எழுதி இருக்கிறார்.

நீங்கள் செய்த உதவியைப் போல யாரும் செய்ததில்லை என்று பெரியாருக்கு எழுதி இருக்கிறார். பல தோழர்களுக்கு மறைமுகமாகத் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் திராவிடர் கழகத்தாரும் திராவிட இயக்கப் பற்றாளர்களும்தான். தோழர் ஜீவாவே நாகர்கோவிலில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டில்தான் தலைமறைவாக இருந்தார் என்பது பின்னாளில் அறியப்பட்ட செய்தி. அதே போல் சிங்காரவேலரும், ஜீவாவும் அவரிடமிருந்து பிரிந்து போனார்களே தவிர சுயமரியாதைக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. எதற்கு முன்னுரிமை என்பதிலேதான் கருத்து வேறுபாடு இருந்தது.

உங்களுடைய வாழ்க்கை போராட்டம், சிறை என்றே இருக்கிறது. உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பலன் கிடைத்து இருக்கிறதா?

என்னுடைய பொதுவாழ்க்கை போராட்டமும் சிறையுமாக இருந்தது என்பது மிகையான கூற்றுதான். ஒப்பிட்ட அளவில் நாம் இந்த சமூகத்திற்கு செய்திருக்கிற செயல்கள் குறைவானவை என்பது தன்னடக்கமான சொற்கள் அல்ல. இயல்பானவை. யதார்த்தம் அதுதான். ஆனாலும் கூட உழைப்பிற்கான பலன் இந்தச் சமூகத்தில் விளைந்திருக்கிறதா என்ற வினா சரியானது. ஆனால் கூட்டி கழித்து கணக்குப் பார்க்கிற இடத்திற்கு இன்னமும் நாம் வந்து விடவில்லை என்றே எனக்கு படுகிறது. சரியாய் சொல்ல வேண்டும் என்றால் முன்னேற்றமே இல்லை என்று சொல்லி விட முடியாது. நான் குறிப்பிடுவது நம்முடைய உழைப்பிற்கு ஏற்ற விளைபயன் இல்லை என்பதுதான்.
எந்த ஒரு தனி மனிதனுடைய உழைப்பும் குறிப்பிடத்தக்கதல்ல. தமிழ்த் தேசிய இயக்கங்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் இது வரை ஆற்றி இருக்கிற பணிக்கு ஈடாக சமூகத்தில் முன்னேற்றங்கள் விளைந்து விட்டன என்று கூறமுடியாது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும் சரியான பார்வை இல்லை. நாங்கள் செய்திருக்கும் செயல்கள் ஓரளவுக்குச் சரியானதுதான் என்றாலும் கூடுதல் அர்ப்பணிப்பு தேவையாக இருக்கிறது. நம்மிடம் தான் குறைகள் இருக்கின்றன. மக்களிடம் இல்லை.

Friday, December 29, 2006

"நான் தி.மு.க ஆதரவாளன் தான்"

"நான் தி.மு.க ஆதரவாளன் தான்" Print E-mail
சுப.வீரபாண்டியன் நேர்காணல்

தமிழகத்தில் இயங்கிவரும் தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் ஒருசிலத் தமிழ்த்தேசியவாதிகளில் சுப.வீரபாண்டியனும் ஒருவர். பேராசியராகக் கல்லூரியில் பணியாற்றியபோதே விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டவர். சென்ற ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர். பகத்சிங்கும் இந்திய அரசியலும், பெரியாரின் இடதுசாரித்தமிழ்த்தேசியம் ஆகியவை இவரது முக்கியமான நூல்கள் இனி, நந்தன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய சுபவீ தமிழ் தமிழர் இயக்கம், தமிழர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் ஆகிய இயக்கங்களிலும் களமாற்றியவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். அவரை நமது தமிழ்மணப்பூங்காவிற்காகச் சந்தித்தோம்.

ஆண்டன்பாலசிங்கத்தின் மறைவால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தொய்வு ஏற்படுமா?

ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவு உண்மையிலேயே ஈடுசெய்யமுடியாத இழப்பு. அது புலிகள் அமைப்புக்கு மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழ் மகக்ளுக்கான இழப்பு.
ஒரு போராட்ட இயக்கத்திற்கு ராணுவத்தளம் மட்டும் போதாது, அரசியல் தளமும் அவசியம். அத்தகைய தளத்தை அமைத்துத் தந்தவர் ஆண்டன் பாலசிங்கம்.
ஆனாலும் பாலசிங்கத்தின் மறைவால் விடுதலைப்போராட்டம் பின்னடைவைச் சந்திக்காது என்றே கருதுகிறேன். தொடக்ககாலமாக இருந்தால் ஒருவேளை அத்தகைய பின்னடவைச் சந்தித்திருக்கக் கூடும். ஏனென்றால் உலகநாடுகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியவர் பாலசிங்கம். அதனால் அவ்வாறு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் இப்போது உலகமெங்கும் புலிகள் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். உலக அரங்கில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவாகியிருக்கிறார்கள். எனவே விடுதலைப்போராட்டத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பே இல்லை.

முல்லைப்பெரியாறுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில், உலக அளவில் நதிநீர்ப்பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அவைகள் நதிநீர்த்தாவாச் சட்டத்திற்குட்பட்டுத் தீர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இங்கு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கூட போதுமான தீர்வு ஏற்படவில்லை. மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ நம் பக்கமுள்ள நீதியை உறுதி செய்யத் தயாராக இல்லை.

அண்டை மாநிலத்தோடு நாம் முரண்படமுடியாதுதான். ஆனால் இத்தகைய போக்குகள் தொடர்ந்தால் அநீதிக்கு எதிராக தமிழகமே திரண்டு குரல் கொடுக்கவேண்டி நேரிடும். காவிரிப்பிரச்சினையை விட முல்லைப் பெரியாறு பிரச்சினையில் வேறுசில தீர்வுகள் இருக்கின்றன. இங்கிருந்து கேரளத்திற்குச் செல்லும் உணவுப்பொருட்களைத் தடுத்தாலே கேரளம் அடிபணியும். ஆனால் அத்தகைய முடிவுக்கு நம்மைக் கேரளம் தள்ளிவிடக்கூடாது.

இப்போது நடக்கும் பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றால் நீதிமன்றத்தைத்தான் அணுகவேண்டும். நீதிமன்றம் நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதி வழங்கினால்தான் இந்தியா என்பது ஒரே நாடு என்ற எண்ணம் நமக்குத் தோன்றும்.

ராஜிவ்படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 26 தமிழர்களுக்காக தமிழ்த்தேசிய இயக்கங்கள் மரணதண்டனை ஒழிப்பு இயக்கம் நடத்தின. ஆனால் அதுபோல அப்சல் போன்றவர்கள் பாதிக்கப்படும்போது நடத்தவில்லையே?
அது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இப்போது அப்சலுக்காக குரல் கொடுக்கும் இஸ்லாமிய அமைப்புகளும் கூட அப்போது ராஜிவ் கொலைக்குற்றவாளிகளுக்காக குரல் கொடுக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் இரண்டு பிரச்சினைகளுக்குமே குரல் கொடுக்கவேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு. த.மு.மு.க நடத்திய கருத்தரங்கில் அப்சலுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்து ஒருமணிநேரத்திற்குமேல் பேசினேன். அது தமிழன் தொலைக்காட்சியில்கூட ஒளிபரப்பானது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரை அப்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையைத் தான் எதிர்க்கிறார்களே தவிர ஒட்டுமொத்த தூக்குத்தண்டனையை அல்ல. ஆனால் அவர்களும் ஒட்டுமொத்தமாக மரணதண்டனையை எதிர்க்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

இப்போது நீங்கள் ஆரம்பித்திருக்கும் இயக்கம் பற்றிச் சொல்லுங்களேன்..
திராவிட இயக்கங்கள் என்பவை காலத்தின் தேவை. ஆனால் இப்போது தமிழ்த்தேசிய அமைப்புகளிலும், தலித் அமைப்புகளிலும் ஒருசாரார் திராவிட இயக்கம் தேவையில்லையென்றும், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இது கிளைமரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. திராவிட இயக்கங்களே எல்லாம் செய்துவிட்டன, வேறு இயக்கங்கள் தேவையில்லை என்று நான் கருதவில்லை. ஆனால் திராவிட இயக்கம்தான் அடித்தளம். தமிழின மேம்பாடு என்பது அதன் மேல்மட்டத்தின் மீது எழுப்பப்படவேண்டியது. திராவிடம் என்பது வெறுமனே மொழி சார்ந்ததோ, நிலம்சார்ந்ததோ மட்டுமில்லை, அது சாதி ஒழிப்பிற்கான, பார்ப்பன எதிர்ப்பிற்கான அரசியல் குறியீடு.

தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.
எங்கள் அமைப்புக்கு மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.

1. தமிழின, தமிழ் மொழி மேம்பாடு
2. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை
3. உலகத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குக் குரல்
கொடுப்பது.


சனவரி 22 அன்று திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் தொடக்கவிழா சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. பேராசிரியர் அன்பழகன் கலந்துகொள்கிறார்.

தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி, நீங்கள் தி.மு.கவின் ஆதரவாளராக மாறிவிட்டீர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறதே..?
(சிரிக்கிறார்). ஆமாம். நான் எதையும் வெளிப்படையாகச் செய்பவன். மறைத்துப் பழகியவனில்லை. நான் தி.மு.க ஆதரவாளன் தான். இன்னும் சொல்லப்போனால் கலைஞர் ஆதரவாளன் தான். திமுகவையும் கலைஞரையும் கூட நான் ஒருகாலத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் இப்போது திமுக சரியான அமைப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. திமுகவில் குறைபாடுகளே இல்லையென்று சொல்லமுடியாது. கோட்பாடு இல்லாமல் நிறுவனமில்லை. ஆனால் நிறுவனமாகும்போது சில பிரச்சினைகள் வரும்.

அதேபோல திமுகவிற்கும் சில சறுக்கல்கள் வந்திருக்கின்றன. நாளை எங்கள் இயக்கத்திற்கும் கூட அப்படிப்பட்ட நிலை வரலாம். ஆனால் இப்போதுள்ள கட்சிகளில் திமுக சிறந்ததாக எனக்குத் தோன்றுவதால் நான் தி.மு.கவை ஆதரிக்கிறேன்.
சந்திப்பு : சுகுணாதிவாகர்