Thursday, June 28, 2007

அது ஒரு பொடா காலம்! (12)

அது ஒரு பொடா காலம்! (12)

சுப.வீரபாண்டியன்

அந்த இளைஞனைப் பக்கத்து அறையில் அடைத்துவிட்டு, என்னிடம் வந்த காவலர்கள், ‘‘சார், வழக்கம் போல கொசுவத்தி எதுவும் அவனுக்குக் கொடுத்தனுப்பாதீங்க. கொசுவத்தியைச் சாப்பிட்டு செத்துக்கித்துப் போயிட்டான்னா, அப்புறம் நாங்க, நீங்க எல்லாருமே மாட்டிக்குவோம்’’ என்று சிறிதாக அச்சுறுத்திவிட்டுப் போனார்கள்.

புதிதாகச் சிறைக்கு வருபவர்-களுக்குப் பழைய சிறையாளி என்ற முறையில் கொசுவத்தி கொடுத்து அனுப்பி ‘விருந்தோம்புவது’ என் வழக்கமாக இருந்தது. அந்த இளைஞனுக்கு அதுவும் கூடாது என்று கூறிவிட்டனர். ஏனெனில் அது ‘பயங்கரமான கேஸாம்’. அந்த இளைஞனின் பெயர் ராஜாராம்.

கொலை வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டுத் ‘தமிழ்த் தீவிரவாதி’ என்று காவல் துறையினரால் பெயர் சூட்டப்பட்டவன். குடியரசு நாள், விடுதலை நாள், காந்தியார் பிறந்த நாள் ஆகியவை வந்துவிட்டால் எங்காவது ஒரு குண்டு வெடிக்கும். குண்டு வைத்தவன் ராஜாராம்தான் என்று காவல் துறை அறிவிக்கும். ஆண்டுகள் பலவாகத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. நாளேடுகளில் ராஜாராம் படம் (சின்ன வயதில் எடுத்தது) அடிக்கடி வரும்.

ராஜாராமுக்கும் எனக்கும் ஒரு வேடிக்கையான தொடர்பு உண்டு. தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக என்னையும் காவல் துறை இரண்டு முறை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளது. ஒரு -முறை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்; இன்னொரு முறை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில்.

சைதாப்பேட்டையில் சற்று மிரட்டலாகவே விசாரணை நடைபெற்றது. ‘‘அவன் இருக்குமிடம் உங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைக்கிறோம். மறைக்காமல் உண்மையைச் சொல்லிவிடுங்கள்’’ என்றனர்.

எனக்கு உள்ளூரச் சிரிப்பாக இருந்தது. எனக்கும் ராஜாராமுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அந்த மனிதனைப் பார்த்ததுகூட இல்லை. எனக்குத் தொடர்பே இல்லாத வழக்கில், என்னை ஏன் இப்படித் துன்புறுத்து-கிறீர்கள்?’’ என்று நான் கேட்டதற்கு, அவர்கள் சொன்ன விடை, மீண்டும் எனக்குச் சிரிப்பையே வரவழைத்தது.

ராஜாராம் எழுதிய நாட்குறிப்பு ஒன்று, காவல் துறையிடம் சிக்கியுள்ளதாகவும், அதில் என்னையும் என் மேடைச் சொற்பொழிவையும் பாராட்டி எழுதியுள்ளதோடு, என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலையும் பதிவு செய்துள்ள-தாகக் கூறினர். அவர்கள் சொல்வது உண்மை-யாக இருக்குமா என்பதிலேயே எனக்கு ஐயம் இருந்தது. அப்படியே இருந்தாலும் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் என்று கேட்-டேன். இறுதியில் என்னை விடுவித்து-விட்டனர்.

2003 ஜனவரி 2 அன்றுதான், முதன்முதலாக ராஜாராமை நான் சிறையில் நேரில் பார்த்தேன். மறு நாள் அறிமுகமானோம். பகல் முழுவதும் ராஜாராம் என்னுடன் பேசிக்கொண்டே இருந்ததைக் காவலர்கள் கவனித்துக்கொண்டு இருந்தனர். நான்காம் தேதி காலை எட்டு மணிக்கெல்லாம், அந்த இளைஞனை வேறு தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.

அதன் பின்பு மனுப் பார்க்கவும், வழக்குரை-ஞர்களைப் பார்க்கவும் போய் வரும்போது, எதிரெதிராகச் சந்தித்துக்கொள்வோம். இரண்-டொரு சொற்கள் பரிமாறப்படும். ஒரு முறை, கூடுதல் கண்காணிப்பாளர் என்னைத் தன் அறைக்கு அழைத்திருந்தார். அங்கு ராஜா-ராமைப் பார்த்தேன். ‘‘வாங்க, இந்தப் பையன், சிறையில இருந்தபடியே, தமிழ்ல மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுறாரு. ஜெயில்ல அதுக்கு அனுமதி உண்டு. தொல்காப்பியம்னு ஒரு பாடத்துல ஒங்ககிட்ட சந்தேகம் கேட்டுக்கிறேன்னு சொல்றார். ஒங்களுக்குச் சம்மதம்னா சொல்லிக்-குடுங்க’’ என்றார் அதிகாரி.

‘‘அதுக்கென்ன, சிறையில் சும்மாதானே இருக்கேன். நல்லா சொல்லிக் குடுக்க-லாம்’’ என்றேன்.

‘‘யாராவது ஒரு ஏட்டு கூட்டிக்கிட்டு வருவாங்க. அவுங்க முன்னாடி, வாரத்-துக்கு ஒரு நாள் ஹெல்ப் பண்ணுங்க’’ என்றார்.

என் புன்முறுவலைக் கண்ட அவர், ‘‘ஏட்டு முன்-னால’’ என்பது ஒரு நடை-முறை என்றார். ‘‘தாராளமா! அவருக்கும் கொஞ்சம் தொல்காப்பியம் போகட்-டுமே’’ என்றேன். இருவரும் சிரித்தனர்.

ஆனால், என்ன காரணத்-தினாலோ, அப்படி ஒரு வகுப்பு நடைபெறவே இல்லை. எப்போதேனும் சந்திப்பதோடு சரி.

அப்படித்தான் 25.03.2003 அன்று மாலையும் ராஜா-ராமைச் சந்தித்தேன். அப்-போது என் நண்பர் தமிழ் முழக்கம் சாகுல் அமீதும் பொடாவில் கைதாகி உள்ளே வந்து-விட்டார்.

நான், பரந்தாமன், சாகுல் அமீது மூவரும், வழக்குரைஞர்களைப் பார்த்துவிட்டுத் தொகுதிகளுக்குத் திரும்பியபோது எதிரில் ராஜாராமைப் பார்த்-தோம்.

சாகுலும், ராஜா-ராமும் மூன்றாவது தொகுதியில் இருந்-தனர். நானும், பரந்தாம--னும் முதல் தொகுதி.

‘‘கோர்ட்டுக்குப் போறேன்’’ என்றார் ராஜாராம்.

‘‘சாயந்திரம் ஆயி-டுச்சு. இப்ப என்ன கோர்ட்டு?’’ என்றார் பரந்தாமன்.

‘‘காலையில இருந்து காத்திருந்தேன். இப்ப-தான் வழிக்காவல் வந்திருக்கு.’’

கையில் பழமும், ரொட்டியும் வைத்தி-ருந்தார். ‘‘திரும்பி வர நேரமாச்சுன்னா, இதை வெச்சுக்க. சாப்பிடு’’ என்று சொல்லி சாகுல் கொடுத்தாராம்.

என்னைப் பார்த்து, ‘‘நாளயில இருந்து, நீங்க படிச்சு முடிச்சதும் தினமணி பத்திரிகையை அனுப்பி-வைங்க’’ என்றார்.

‘‘அதிகாரிகிட்ட சொல்லிடு. காலையிலயே அனுப்பிவைக்கிறேன்’’ என்றேன்.

‘‘நேத்தே சொல்லிட்டேன். மறக்காம நாளைக்கி அனுப்பிடுங்க.’’

ராஜாராம் வெளியேற, நாங்கள் உள்நோக்கி நடந்தோம்.

அந்த நிமிடத்தில் அது எங்களுக்கு ஒரு சாதாரண சந்திப்பாகவும், மிகச் சாதாரண நிகழ்வாகவுமே இருந்தது. அவரவர் தொகுதியில், அவரவர் அறையில் வழக்கம் போல் மாலை ஆறு மணிக்கு பூட்டப்பட்டோம்.

அறை பூட்டப்படும் நேரத்தில், உயரே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்து, தன் அறைக்கு அருகில் மோகன் வைத்துக்கொள்வார். நள்ளிரவு வரை, ஒலியைக் குறைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவருக்கு அந்தப் பெட்டிதான் தோன்றாத் துணை என்று சொல்ல வேண்டும்.

அந்தப் பெட்டியில் பொதிகை மற்றும் அரசுத் தொலைக்காட்சிகள் மட்டும்தான் தெரியும். அவற்றை அவர் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார். ஏதேனும் முக்கியமான செய்தி என்றால் எங்களையும் அழைத்துச் சொல்வார்.

அப்படித்தான் அன்று இரவு 8.30 மணிக்கு, மேலே இருந்து அவர் ‘சார்... சார்’ என்று அழைக்கும் குரல் கேட்டது. ‘‘என்ன மோகன்?’’ என்றேன்.

‘‘மூணாம் பிளாக்குல இருந்த ராஜாராமை போலீஸ் சுட்டுடுச்சு சார். செத்துப்போயிட்டான். தப்பி ஓட முயன்றபோது சுடப்பட்டான்னு சொல்றாங்க’’ என்றார்.

எனக்குப் பகீரென்றது!

Friday, June 22, 2007

அது ஒரு பொடா காலம்! (11)

அது ஒரு பொடா காலம்! (11)

சுப.வீரபாண்டியன்

கவலை காரணமாக, பரந்தாமனின் மூல நோய் மிகுதி-யாகிவிட்டது. உடலாலும், உள்ளத்தாலும் அவரைத் துன்புறுத்திய அன்றைய அரசின் மீது எனக்கு அடங்காச் சினம் எழுந்தது. ‘கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிய வேண்டும்’ என்று கருதினேன்.

21.11.2002 காலை, உடல் நலிவுகளைப் பொருட்படுத்தாமல், காவல் துறையினரின் காவலுக்குப் பரந்தாமன் அழைத்துச் செல்லப்பட்டார்.

டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், மதியம் வரை நீதிமன்றம் நடக்கும் என்று வழக்கறிஞர் கூறியதும், மகன் இலெனினிடம் சொல்லி, அன்று நீதிமன்றத்துக்கு வீட்டி-லிருந்து மதிய உணவு கொண்டு வரும்படி கூறினேன். சிறை உணவுகளைச் சாப்-பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போயி-ருந்தது.
அந்த நாள் வந்தது. நீதிமன்றத்தில் ‘கேஸ்காரர்கள்’ அனைவரும் சந்தித்துக் கொண்டோம். கடலூரிலிருந்து, நெடுமாறன் ஐயாவும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனும், சேலம் சிறையிலி ருந்து மருத்துவர் தாயப்பனும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
தாயப்பனிடம் மெதுவாக, வீட்டிலிருந்து உணவு வரவிருக்கும் செய்தியைச் சொன்னேன். உமாவும் வீட்டு உணவு கொண்டுவர இருக்கும் செய்தியை அவர் சொன்னார். அதன் பின் இருவரும் நீதிமன்ற நடவடிக்கை-களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை.

மதியம் 2 மணியளவில் நீதிமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு, நீதிபதி கீழ் இறங்கி விட்டார்.

வீட்டிலிருந்து என் மனைவியும், மருமகள் விஜியும் எனக்கு எது பிடிக்கும் என்று எண்ணி எண்ணிச் சமைத்துக் கொண்டு வந்திருந்தனர். உமாவும் ஐயாவுக்குப் பிடித்த எலுமிச்சைச் சோறு, தேங்காய்ச் சோறு எனப் பலவித உணவைக் கொண்டு-வந்திருந்தார்.

பாவாணனும் தாயப்பனும் ‘பணி-’யைத் தொடங்கி-விட்டனர். ஐயாவுக்-கும் எனக்கும் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டது. முதல் வாய் உணவை நான் கையில் எடுத்தது-தான் தாமதம்... வழிக் காவலாக வந்த ஓர் உதவி ஆய்வாளர் மிக விரைந்து என்னிடம் வந்தார். ‘‘வீட்டுச் சாப்பாட்டுக்கெல்லாம் அனுமதி கிடையாது’’ என்றவர், என் மனைவியை நோக்கி ‘‘அம்மா, அந்தத் தட்டை வாங்கிக்குங்க’’ என்றார்.

அன்று நீதிமன்றத்துக்கு என் அண்ணன் எஸ்.பி.முத்து ராமனும் வந்திருந்தார். ‘‘உங்க கண்ணு முன்னாடிதானே சாப்பாட்டையெல்லாம் எடுத்துவெச்சாங்க. அப்பெல்லாம் ஒண்ணும் சொல்லாம, இப்படி சாப்பிடப் போற நேரத்துல வந்து தடுக்கிறீங்களே?’’ என்றார் அவர்.

‘‘அதோ, அங்கே நிக்குற ஏ.சி.யோட உத்தரவு. நாங்க ஒண்ணும் செய்ய முடியாது’’ என்றார் காவலர்.

‘‘நாங்க எல்லாம் வழக்கமா சாப்பிட்டுக்கிட்டு-தானே இருக்கோம்?’’ என்றார் தாயப்பன்.

‘‘அது ஒங்க எஸ்கார்ட்ஸைப் பொறுத்த விஷயம். ஆனா, எங்க ஏ.சி கூடாதுங்கறார். நாங்க அனுமதிக்க மாட்டோம். அவ்வளவுதான்!’’

பாவாணன் சற்று கோபக்காரர். அவர் என் பக்கம் திரும்பி, ‘‘நீங்க சாப்பிடுங்க. என்ன செய்யுறாங்கன்னு பார்த்துடுவோம். அதென்ன ஊருக்கு ஒரு சட்டம்..!’’ என்று பொரிந்தார்.

அதுவரை பொறுமையாக எல்லா-வற்றையும் பார்த்துக்கொண்டு இருந்த நெடுமாறன் ஐயா, அந்த உதவி ஆய்வாளரை அருகில் அழைத்தார். ‘‘என்ன, ஒங்க அதிகாரத்தைக் காட்டு-றீங்களா?’’ என்று தொடங்கிப் பல கேள்விகளைக் கேட்டார். எதற்கும் பதில் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்த அவர், பிறகு உதவி ஆணை யர் (ஏ.சி.) இருக்குமிடம் நோக்கி நகர்ந்தார். அவரிடம் ஏதோ பேசி-விட்டு மீண்டும் நெடுமாறன் ஐயா-விடம் வந்து, ‘‘ஸாரி சார், ஏ.சி. அனு-மதிக்க முடி-யாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு’’ என்றார்.

அவ்வளவுதான்... ஐயா சட்டென எழுந்து, காவல் ஊர்தியை நோக்கி விரைந்தார். கடலூரிலிருந்து வந்த வழிக் காவலர்கள், ‘‘ஐயா! நீங்க சாப்பிட்டுட்டு வாங்க’’ என்றனர். ‘‘ஓ! அவர் சாப்பிடக் கூடாது. நாங்க மட்டும் சாப்பிடலாம். நல்லா இருக்குய்யா ஒங்க சட்டம்’’ என்று சொல்லி-விட்டு, ஊர்தியில் ஏறி அமர்ந்துவிட்டார்.

அண்ணன்கூட அருகில் சென்று சொல்லிப் பார்த்தார். ஐயா எதையும் கேட்கவில்லை. எனக்காகக் கடலூர் வரை அவரும் பட்டினி-யாகவே பயணப்பட்டார். பாவாணனும் தாயப் பனும்கூடப் பாதியில் உணவை நிறுத்திவிட்டுப் புறப்பட்டுவிட்டனர். என் அண்ணன், மனைவி, மகன், மருமகள் எல்லோர் முகத்திலும் ஒரு வாட்டம்.

உணவு பெரிதில்லை; ஆனால், உணர்வு பெரிதல்லவா! சிறையிலும், வெளியிலும் அன்று யாருமே மதிய உணவு உண்ணவில்லை.

காவல் துறைக் காவல் முடிந்து, பரந்தாமன் சிறை திரும்பினார். நாங்கள் அஞ்சியதைப் போல அங்கு எதுவும் நடைபெறவில்லை. மிரட்டல்களோ, சித்ரவதைகளோ எதுவும் இல்லை என்றும், மதிப்புடனேயே நடத்தினார்கள் என்றும் கூறினார். ஆறுதலாக இருந்தது.

வெடிகுண்டு குச்சிகளின் விவரம் காவல்துறைக்குத் தெரியும்தானே! அதனால்தான் வேறு வகையில் நெருக்கி விசாரிக்கவில்லை போலும் என்று பேசிக்கொண்டோம். எந்த ஒரு கூற்றின் கீழும், வெள்ளைத் தாளிலும் கையப்பமிடவில்லை என்ற செய்தியையும் கூறினார்.

எனினும், அவருடைய உடல்நலம் மேன்-மேலும் கெடத் தொடங்கியதால், சிறைக்-குள்ளேயே இருக்கும் மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டார்.

வெளியில் இருக்கும் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது துன்ப மானது. ஆனால், சிறையில் அதற்குப் பெரிய போட்டியே நடக்கும். கைதிகளில் பலர், சிறை மருத்துவரிடம், ‘‘ஐயா! என்னை ஒரு வாரமாவது ஆஸ்பத்திரிக்கு அனுப்பணும்னு எழுதிக் கொடுங்கய்யா’’ என்று கெஞ்சுவார்கள். நேர்மையான மருத்துவர்கள், உண்மையான நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். மற்றவர்கள் ‘பார்த்து’ அனுப்புவார்கள்.

சிறையைக் காட்டிலும், சிறை மருத்துவ-மனையில் சில வசதிகளும் சில சுதந்திரங்களும் உண்டு. மாலை 6 மணிக்கு அறையில் அடைத்துப் பூட்டுவது என்பது அங்கு கிடையாது. வெளியிலிருக்கும் ஒரு பெரிய கதவை மட்டுமே பூட்டுவார்கள். எனவே, நடமாட்டம் தடைப்-படாது. வரிசையாகப் படுக்கைகள் இருக்கும். சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கலாம். இரவில் ரொட்டியும், பாலும் கொடுப்பார்கள். எல்லாவற்றையும்விட, அங்கே மின் விசிறி உண்டு. அப்பாடா.... கொஞ்சம் காற்று வாங்கலாம். மருத்துவமனையில் மாடிப்பகுதி கிடைத்துவிட்டால், எதிரேயுள்ள சென்னை மாநகராட்சிக் கட்டடம் தெரியும். வாகனப் போக்குவரத்தைச் சற்று வேடிக்கை பார்க்கலாம். இவ்வாறு பல வாய்ப்புகள் உண்டென்று மோகனும், செல்வராஜும் சொன்னதைக் கேட்டு பரந்தாமனும் மகிழ்ச்சியாக மருத்துவ மனைக்குப் புறப்பட்டார். மருத்துவமனைக்கு மகிழ்ச்சியாகப் புறப்படும் முரண், எங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

முதல் வகுப்புக் கைதிகள் என்பதால், எங்களுக்கு நாற்காலியும், மேசையும் வழங்கப்பட்டன. ஓர் இரவில், வெளியில் எரியும் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், மேசை மீது புத்த கத்தை வைத்துச் சிரமப்பட்டுப் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது காவலர்கள், ஓர் இளைஞனை எங்கள் தொகுதிக்குள் அழைத்து வந்தனர். ‘ஏதோ புது வரவு’ என்று நினைத்துக் கொண்டேன். என் அறையைத் தாண்டி, அந்த இளைஞனை அழைத்துச் சென்றபோது, அவனை எங்கோ பார்த்திருப்பது போன்று எனக்குப் பட்டது. சட்டென்று ஒரு மின்னல் வெட்டு! கண்டுபிடித்துவிட்டேன். ‘அட, அவன்-தானா இவன்!’ என்ற ஆர்வத்தில் மீண்டும் அந்த இளைஞனை உற்றுப்பார்க்க முயல்வதற்-குள், பக்கத்து அறையில் அவன் அடைக்கப்பட்டுவிட்டான்!

\ (தொடரும்)

Friday, June 15, 2007

அது ஒரு பொடா காலம்! (10)

அது ஒரு பொடா காலம்! (10)

சுப.வீரபாண்டியன்

அந்த அதிர்ச்சிச் செய்தியை அன்றைய மாலை நாளேடுகள் வெளியிட்டு இருந்தன.

‘நெடுமாறன் கட்சிப் பிரமுகர் வீட்டுக் கோழிப் பண்ணையில் ஜெலட்டின் குச்சிகள்!’ என்று தலைப்பிட்டு, காவல்துறை கொடுத்த செய்தி அது. எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், புருசோத்தமன் இருவரும் அது பற்றி விரிவாகக் கூறினர்.

நவம்பர் 6&ம் தேதி அதிகாலை, மானாமதுரையில் உள்ள பரந்தாமன் இல்லத்துக்குச் சென்ற உளவுத்துறைக் காவல் பிரிவினர், கோழிப் பண்ணையைச் சோதனை யிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வீட்டிலிருந்த அவருடைய மகன் ரகுராமனை அழைத்துக்கொண்டு அங்கே போய், பல இடங்களைச் சோதனையிட்டுள்ளனர். ஒரு பிரிவினருடன் ரகு நின்றுகொண்டு இருக் கும்போது, இன்னொரு பிரிவினர், ‘வாங்க... இங்கே வாங்க’ என்று கூவியுள்ளனர்.

‘இதோ... இங்கே பாருங்க, ஜெலட்டின் குச்சிகளும் டெட்டனேட்டர்களும் மறைத்து வைக்கப்பட்டுள்-ளன’ என்று, எல்லாவற்றையும் வீடியோ படம் எடுத்து, அவர் மகனையே சாட்சியாக ஆக்கிவிட்டனர்.

எனினும், அவர்கள் கவனத்தில் கொள்ளாமல்போன சில சட்ட நுணுக்கங்களை எங்களுக்கு வழக்குரைஞர்கள் தெளிவுபடுத்தினர்.

‘‘ஒண்ணும் கவலைப்படாதீங்க... இதெல்லாம் கோர்ட்டில் நிக்காது” என்று பரந்தாம-னுக்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் மொழிகள் அவ்வளவாக வேலை செய்யவில்லை. கடுமையான மன உளைச்சலில் இருந்தார் பரந்தாமன். குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று கவலைப்பட்டார்.

‘‘ஏன் சுபவீ... டெட்டனேட்டர்னு ஏதோ சொல்றாங்களே, அப்படின்னா என்ன..?’’ என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தார். ‘‘ஏன் அண்ணாச்சி, நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி வெடிகுண்டா வெச்-சுக்கிட்டு இருந்தேன்?’’ என்று நான் கேலியாகக் கேட்க, இருவரும் சிரித்தோம்.

மறுபடியும் கடும் மழை தொடங்கியது. இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்றும், புயல் சின்னம் தோன்றியிருப்பதாகவும் செய்தியில் சொன்னார்-களாம். மழையில் நனைந்தபடி, பரந்தாமன் மாடிக்கு ஓடினார். இரவு கடுமையாகக் காற்று வீசியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டதால், சிறிது நேரம் முழுமையான இருட்டு, தனிமை, காற்று மழையின் இரைச்சல் என்று புதிய அனுபவமாக இருந்தது.

மின்சாரம் வந்து வந்து போய்க்-கொண்டு இருந்த அந்த இரவில், கடுங்குளிர் தாக்கத் தொடங்கிவிட்டது. கம்பிக் கதவு-களுக்குள் சாரல் விழுந்து விழுந்து, தரை ஏறத்தாழ ஈரமாகிவிட்டது. படுக்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல்... அது ஒருவிதமான சோகம்!

சிறையில் கொடுக்-கப்படும் போர்வை, ஒன்றுக்கும் பயன்படவில்லை. உள்ளேயிருந்து ஒரு ‘ஜீன்ஸ்’ முழுக்கால் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டேன். ஒரு சட்டைக்கு மேல் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டேன்.


அந்த நேரம் பார்த்து மழைக்கோட்டு, கையில் விளக்குடன் வந்த ஒரு அதிகாரி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். நள்ளிரவில் உடைமாற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘என்ன, இந்த ஆள் புறப்படுறானா?’ என்று எண்ணியிருக்கக் கூடும்.

‘‘ஒண்ணுமில்லே, ரொம்பக் குளிரா இருக்கு’’ என்றேன்.

‘‘அப்படியா!’’ என்றார் சந்தேகம் தீராமல்.

அன்று, நவம்பர் 13. செய்தித் தாளில் மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நண்பர் வண்ணமுத்து வின் படம் இருப்பதைப் பார்த்துவிட்டு, செய்தியைப் படித்தபோது வலித்தது. மாரடைப்பு காரணமாகப் பேராசிரியர் வண்ணமுத்து மறைவு என்ற செய்தி என்னைத் துயரில் ஆழ்த்தியது.

நல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பர். 1976&ம் ஆண்டு, சென்னை எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் நான் பயிற்றுநராக வேலையில் சேர்ந்த-போது, வண்ணமுத்துவும் பாலசுந்தரமும்தான் எனக்கு நேர் மூத்த ஆசிரியர்கள். இரண்டு பேருமே பக்திப் பழங் களாக இருந்தார்கள். சைவ இலக்கியங்களில் இருவருக்கும் நல்ல தோய்வு. சிவன், சக்தி, முருகன் என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, பெரியார், அண்ணா, பாரதி தாசன் என்று நான் பேசிக்கொண்டு இருப்பேன். அவர் கள் இருவரும் பட்டை பட்டை யாகத் திருநீறு பூசியிருப்பார்கள். நானோ, ‘கோயில் இல்லா ஊரில் குடியிருப்போர் வாழ்க! குழைத்துநீறு பூசாக் கொள்கையினர் வளர்க! ஆயிரமாம் பகைகள் அணி வகுத்தபோதும் அயராத பெரியார் அருந்தொண்டு வெல்க!’ என்று 1972&ம் ஆண்டி லேயே கவிதை எழுதி யவன். ஆனாலும் எங்க ளுக்குள் நல்ல நட்பு இருந்தது. எப்போதும் என்னைத் ‘தம்பி, தம்பி’ என்று வாய் நிறைய அழைப்பார் வண்ண முத்து. இன்று அவர் போய்விட்டார்.

சிறையில் இருந்த நாள்களில் அடுத்தடுத்து எழுத்தாளர் சு.சமுத்திரம், கவிஞர் மீரா போன்ற-வர்களையும் காலம் விழுங்கிவிட்டது.

சமுத்திரம் ஓர் அரிய எழுத்தாளர். பன்னீர்ப் பூக்களைப் பற்றிப் பலர் பாடிக்கொண்டு இருந்த வேளையில், வியர்வை மலர்களின் வேதனையை வெளிப்படுத்தியவர் அவர்.

இன்றைய இளைஞர்கள் ‘ரசிகர்’களாக மட்டுமே நின்று, தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் அவலத்தை ‘மேய்ச்சல் நிலம்’ என்னும் பெயரில், நான் சிறப்பாசிரியராக இருந்த நந்தனில் தொடர்கதையாக எழுதினார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன.

கவிஞர் மீரா, எனக்கு மிகவும் மூத்தவர். நேரடிப் பழக்கம் குறைவு. ஆனாலும், எங்கள் கல்லூரி நாள்களில் அவர் எழுதிய ‘கனவுகள்+ கற்பனைகள் = காகிதங்கள்’ என்னும் கவிதை நூல்தான் எங்களின் வேதப் புத்தகம். காதல் சுவை நனி சொட்டச் சொட்டக் கவிஞரால் எழுதப்பட்ட நூல்.

காரைக்குடிக் கல்லூரி வகுப்பறையில் ஒரு நாள், ஒரு நண்பன், ‘‘ஏன் மச்சி... இந்தக் கவிதையைப் படிச்சியா..?


‘உனக்கென்ன
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்...
என் உள்ளமல்லவா
வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது...’

அடடா! எப்படியிருக்கு?’’ என்று வகுப்புத் தோழிகள் காதில் விழுகிற மாதிரி உரத்துப் படிக்க, ‘‘தீயணைப்பு நிலையத்துக்குப் போன் பண்ணச் சொல்லுடி’’ என்று ஒரு மாணவி சொல்லிவிட்டுப் போனார்.

இப்படி அன்று ஏராளமான இளைஞர்களை ஈர்த்த, தன் சமூகக் கவிதைகளால் அண்ணாவின் பாராட்டைப் பெற்ற கவிஞர் மீராவின் இறப்புச் செய்தியும், எங்களைச் சிறையில்தான் வந்து எட்டியது.

துக்கமோ, இன்பமோ தூரத்திலிருந்துதான் பங்கேற்க முடியும் என்ற நிலையைச் சிறை உருவாக்கி-விட்டது.

சிறையில், கண்காணிப்பாளர் அழைத்து வரச் சொன்னதாக யாரேனும் வந்து கூப்பிட்டால், நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு செய்தி உள்ளது என்று பொருள்.

அன்று பரந்தாமனுக்கு அப்படி ஓர் அழைப்பு வந்தது. அவர் திரும்ப வரும் வரை, எதற்காக அழைத்திருப்பார்கள் என்று இங்கே யூகங்கள் ஓடும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த அவரிடம், மீண்டும் பழைய துயரம் குடிகொண்டு இருந்தது. கெட்ட செய்திதான் என்று முடிவாகிவிட்டது. அவராகச் சொல்-லட்டும் என்று காத்திருந் தேன்.

‘‘போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பச் சொல்லி கோர்ட் உத்தரவாம்’’ என்றார்.

எனக்கும் அதிர்ச்சியாக இருந் தது. ஏன் அவருக்கு இப்படிச் சோதனை மேல் சோதனை என்று தோன்றியது. சிறை என்பது நீதி-மன்றக் காவல். அப்படி இல்லாமல் காவல் நிலையத்திலேயே வைத்து விசாரிப்பதைக் காவல் துறைக் காவல் என்பார்கள்.

காவல் துறைக் காவலில் பல சித்ரவதைகள் நடக்கும் என்று கேள்விப்பட்டுள்ளோம். இப்போது அது போன்ற காவல் பரந்தாமனுக்கு எதற்காக என்று புரியவில்லை. என்ன ஆகுமோ என்ற கவலை எல்லோரையும் பற்றிக்-கொண்டது!


\ (தொடரும்)


மிக்க நன்றி: ஆனந்த விகடன்

Friday, June 08, 2007

அது ஒரு பொடா காலம்! (9)

அது ஒரு பொடா காலம்! (9)

சுப.வீரபாண்டியன்

நவம்பர் மாதத் தொடக்கத்தில் சில நல்ல செய்திகள் வந்தன. எந்த காஷ்மீரைக் காட்டி, இந்தியா முழுமைக்கும் பொடா சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ, அந்த காஷ்மீரில் பொடா விலக்கிக் கொள்ளப்பட்டது. பொடாவின் கீழ் அன்று சிறையில் அடைக்கப் பட்டு இருந்த ஜே.கே.எல்.எஃப். அமைப்புத் தலைவரான யாசின் மாலிக் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

‘‘என்னங்கய்யா இது, காஷ்மீர்லேயே பொடா கைதிகளை விடுதலை செய்யுறப்போ, உங்களை ஏன் விட மாட்டேங்குறாங்க?’’ என்று மோகன் கேட்டார். ‘‘எங்க மேல அம்மாவுக்கு அபாரமான அன்பு. அதான் விட மாட்டேங்குறாங்க’’ என்று வேடிக்கையாகச் சொன்னாலும், அந்த வினா ஆழமானது என்பதை நான் அறிவேன். அதற்கு விடை சொல்லத் தொடங்கினால், அது மிக நீளமானதாக அமையும்.

பொடா சட்டத்தை நடுவண் அரசு கொண்டுவந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுகளிடமே உள்ளது. எனவே, ஒருவரைப் பொடாவில் கைது செய்வதும் செய்யாமல் இருப்பதும் மாநில அரசுகளின் விருப்பு வெறுப்பை ஒட்டியதாக அமைந்துவிட்டது.

குஜராத்தில், 2002 பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே ஏறத்தாழ 2,000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலை-களுக்காக எவர் ஒருவரும் பொடாவின் கீழ் கைது செய்யப்படவில்லை. மாறாக, 200&க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள், வேறுவேறு சிறு காரணங்களுக்காகப் பொடாவில் உள்ளே தள்ளப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 60&க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பொடாவில் கைது செய்யப்பட்டனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவியான மயந்திரகுமாரி, பொடாவில் கைதான ‘பயங்கரவாதி’களில் ஒருவர். சிறுவர்களைத்தான் கைது செய்தார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அம்மாநிலத்தில் ராஜ்சரத் என்ற 81 வயது முதிய-வரையும் பொடா கைதி ஆக்கி-னார்கள். அவரால் நடக்கவே முடியாது. ஆனாலும் ‘நடமாட முடியாத பயங்கரவாதி’யாக அவர் ஜார்கண்ட் அரசின் கண் களுக்குத் தெரிந்தார். அதே மாநிலத் தில், நக்ஸலைட் ஒருவருக்குத் தேநீர் கொடுத்ததற்காக, பன்சிதார் சாகு என்பவரும் நக்ஸ-லைட்டாகக் கருதப்பட்டு, பொடா சிறைக்கு வந்து சேர்ந்தார்.

இவ்வாறு, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை வேறுவேறாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற இன்னொரு நிகழ்வும் எங்கள் சிந்தனையைத் தூண்டியது.

தாய்லாந்து நாட்டில், சிறீலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாகச் செய்தித்தாள்கள் கூறின.

சிறீலங்காவில் புலிகள் அமைப்புக்குத் தடை இல்லை. அவர்களோடு அதிகாரபூர்வமாகப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஆனால், இந்தியாவில் புலிகளுக்குத் தடை. அவர்களை ஆதரித்துப் பேசியவர்களுக்குப் பொடா. இந்த அரசியல் விந்தைகளையெல்லாம் சொல்லிச் சிரிப்பதற்குக்கூட எங்க ளுக்கு யாரும் இல்லை.

தமிழக அரசியலில் எப்போதுதான் மாற்றம் வரும் என்று நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்த வேளை யில், அந்தச் செய்தி வெளியானது.

திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவர் கலைஞர், வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்தார் என்பதும், இருவரும் நெகிழ்ந்துபோனார்கள் என்பதும் நல்ல செய்தியாக இருந்தது.

இதனை, வெறும் தலைவர்களின் சந்திப்பாக மட்டும் நான் பார்க்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியிலிருந்து, திராவிடக் கட்சிகள் விலகி வரக்கூடிய தொடக்கமாகவே அது தெரிந்தது.

இந்த இரு கட்சிகளுக்குள் ஏற்படுகிற நெருக்கம், காலப் போக்கில் பொடாவுக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் எதிரான ஒன்றாக அமைய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பம், பிறகு நிறைவேறி யது என்பதே உண்மை.

ஒரு நாள் காலையில், கண்விழிக்கும்போது நல்ல மழை. அறைக்கதவைத் திறக்க வந்த காவலர், ‘‘என்ன சார், மேல தூறல் விழுகிறதுகூடத் தெரியாம நல்லாத் தூங்குறீங்களே?’’ என்றார். சிரித்துக் கொண்டே எழுந்தேன்.

இந்த ‘சார்’ மரியாதை எல்லாம் இது போல் ஒரு சில தொகுதிகளுக்கும், குறிப்பிட்ட ஒரு சிலருக்கும் மட்டுமே உரியது. மற்றபடி ‘பள்ளி எழுச்சிப் படலம்’ வேறு மாதிரி இருக்கும்.

தூக்கம் கலைந்த நான், மழை நன்றாகவே பெய்வதை அப்போது-தான் கவனித் தேன். மாடியிலிருந்த அவர்கள் நான்கு பேரும் கீழே வர முடியாமலும், நான் மேலே போக முடியா மலும் மழை எங்களைப் பிரித்துவிட்டது. ஏறத்தாழ இரண்டு, மூன்று மணி நேரம், அன்றைய மழை என்னைச் சிறைக்குள் சிறை வைத்து விட்டது.

அன்று காலை பரந்தாமன், நீதி மன்றம் செல்ல வேண்டும். மழை இன்னும் விடவில்லை என்பதோடு, அவருக்குச் சிறிது உடல் நலமில்லாமலும் இருந்தது. சிறைக்கு வந்ததி லிருந்தே அவ்வப்போது அவரை மூலநோய் சிரமப்படுத்திக்கொண்டு இருந்தது.

உதவிச் சிறை அதிகாரியை அணுகி, இன்று நீதிமன்றம் செல்ல உடல்நலம் இடம் தரவில்லை என்றும், மருத்துவரைச் சந்தித்துக் கடிதம் பெற்று, நீதிமன்றத் துக்கு அனுப்ப விரும்புவ தாகவும் கூறினார். அப்படி ஒரு நடைமுறை உண்டு. மருத்துவர் பரிந்துரை செய்தால், சிறை அதிகாரி கள் அவருக்கு ஓய்வு கொடுக்க முடியும்.

ஆனால், அந்த நடை முறையைப் பொடா கைதிக்குப் பின்பற்ற, சிறை அதிகாரிகள் தயங்கினர். ‘மருத்துவரை வரவழைக்கிறோம்; உரிய மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்று வந்து விடுங்கள்’ என்று கூறிவிட்டனர்.

அவ்வாறே, பாதிக்கப்பட்ட உடல் நலத்தோடு, காலை 10 மணி அளவில் பரந்தாமன் நீதிமன்றத்துக்குப் புறப் பட்டுப் போனார்.

ஒருவர் நீதிமன்றம் சென்றால், திரும்பி வரும்போது வெளியுலகச் செய்தி ஏதேனும் கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அன்று நானும் அப்படி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

மதியம் இரண்டு மணியளவில், பரந்தாமன் சிறைக்குத் திரும்பி வந்தபோது, அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டது. ‘‘என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?’’ என்று கேட்டேன். ‘‘நீதிமன்றத்துக்கு வந்த கதிரவன் அதிர்ச்சியான செய்தி ஒண்ணு சொன்னாரு’’ என்றார்.

கதிரவன் அவருடைய இரண்டா வது மருமகன். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக இருக்கிறார்.

‘‘இன்னிக்கு அங்கே போனவுடனே, ‘ரகுராமன்கிறது யாரு?’ன்னு நீதிபதி கேட்டார். ‘என் மகன்தான்’னு சொன்னேன். அப்புறம், ‘கலைமகள் கோழிப் பண்ணை யாருடையது?’ன்னு கேட்டார். ‘என்னுடையதுதான்’னேன். வேற ஒண்ணும் கேக்கலை. அடுத்த வாய்தா கொடுத்து அனுப்-பிட்டார்’’ என்றார் பரந்தாமன்.

‘‘பிறகென்ன?’’ என்றேன்.

‘‘இதையெல்லாம் ஏன் நீதிபதி கேக்குறார்னு, அங்கே வந்திருந்த என் மாப்பிள்ளைகிட்ட கேட்ட போதுதான், அவர் அப்படி ஓர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னாரு!’’

\ (தொடரும்)

Friday, June 01, 2007

அது ஒரு பொடா காலம்! (8)

அது ஒரு பொடா காலம்! (8)

சுப.வீரபாண்டியன்

அவ்வப்போது நாங்கள் பிணைக்கு மனுப் போடுவதும், அதனை நீதிமன்றம் மறுப்பதும் வழக்கமாகி-விட்டது.ஒவ்வொரு முறையும், நெடுமாறன் ஐயாவின் மகள் உமா எங்களைப் பார்க்க வரும்போது, ‘‘இன்னிக்கு நம்ம சந்துரு சார் (எங்கள் வழக்குரைஞர்) கடுமையா வாதங்-களை வெச்-சாரு. நீதிபதியும் நல்லா கேட்டாரு’’ என்று நீதிமன்றத்தில் நடந்தவற்றை எடுத்துச் சொல்வார். பரந்தாமனுக்கு அதில் நம்பிக்கை முழுமையாகப் போய்விட்டது. ‘‘ஆமா, தெனமும்-தான் நீதிபதிகள் நம்ம வாதங்களைக் கேக்குறாங்க. அப்புறம் ஜாமீன் இல்லேங்கிறாங்க. இதானே நடக்குது’’ என்பார்.

உமாவைப் போல ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது. தன் அப்பாவுக்காக மட்டுமின்றி, பொடாவில் அடைபட்ட எங்கள் அனைவருக்காகவும் உமா பட்ட துன்பங்கள் அதிகம். தினந்தோறும் வழக்குரைஞர்களைப் பார்ப்பது, வழக்கு நாள்-களில் நீதிமன்றம் செல்வது, சிறைக்கு வந்து எங்களைப் பார்ப்பது, பிறகு, எங்கள் குடும்பத்தினருக்குச் செய்திகள் சொல்வது என ஒன்றரை ஆண்டு காலமும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று அவர் ஆற்றிய பணிகளை எங்கள் வாழ்-நாளில் மறக்க முடியாது.

ஒருநாள், நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் பொடா மறு ஆய்வுக் குழு ஒன்றை அரசு அமைத்திருக்கும் செய்தியை உமா கொண்டுவர, சற்று மகிழ்ந்தோம். ஆனால், அந்தக் குழு இயங்கவே தொடங்கவில்லை. அந்தக் குழுவுக்கென்று ஓர் அறைகூட ஒதுக்கப்படாத செய்தியைச் சில நண்பர்கள் கூறினர். பிணை எதிர்-பார்ப்பு எங்களை விட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது.

ஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்து-விடமிருந்து கடிதம் வந்தது. ‘சிறை உங்களைச் சிதைக்காது; செதுக்கும்!’ என்று தன் கைப்பட எழுதியிருந்தார். சிறைத் துன்பங்களுக்கிடையிலும் அவர் தமிழ் இனித்தது.

கவிஞர் சிற்பிக்கு விருது கொடுக்-கப்படும் செய்தியை ஒருநாள் நாளேடு-களில் பார்த்துவிட்டு, ஒரு அறுசீர் விருத்தத்தை மட்டும் மடலில் எழுதி அனுப்பினேன்.


‘விருது ஓர் தமிழன் பெற்றான்
விரிந்தது மகிழ்வில் உள்ளம்
அருகிலே வந்து வாழ்த்த
அவாவினன் என்ற போதும்
இரும்பிலே செய்த கம்பி
ஏழெட்டு தடுப்ப தாலே
தருகிறேன் மடலில் வாழ்த்தை
தமிழ்மானம் வாழ்க வென்றே’ என்று நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தி கண்டு மகிழ்ந்து, உடன் அவரும் கவிதையிலேயே ஒரு விடை எழுதினார்.

‘தன்மானத்துக்குத் தடைகள் உண்டோ?
தமிழைத் தடுக்கச் சுவர்கள் உண்டோ?
அன்புக்கு ஏதும் தாழ்கள் உண்டோ?
அணையா நெருப்பே வாழ்க! நன்றி!’
என்று அவர் தந்த விடை, என் நெஞ்சை நெகிழச் செய்தது.

இலக்கிய வேட்கைக்குக் கிடைத் தது சில இரை இப்படியும் இலக்கியம் வளர்த்தது சிறை!
சிறைக்குப் புதிய புதிய ‘விருந்தாளிகள்’ வருவதும் போவதுமாக இருப்பர். எப்போதாவது சில முக்கிய விருந் தாளி-களை எங்கள் தொகுதிக்கு அனுப்புவார்கள். அப்படி வந்தவர் களில் ஒருவர்தான் ‘பங்க் குமார்.’

ஒருநாள், இரவு எட்டு மணி இருக் கும்... தொட்டியில் இருக்கும் நீரை ஒருவர் அள்ளிக் குளிக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார்குளிப் பது என்ற வியப்பில் எட்டிப் பார்த்தேன். உருவம் சரியாகத் தெரிய வில்லை. அருகில் இரண்டு காவலர் கள் நின்றனர்.

குளித்து முடித்ததும், அந்த மனிதரை என் பக்கத்து அறைக்கு அழைத்து வந்தனர். அவர் என்னை ஒரு மாதிரி யாக ஏற இறங்கப் பார்த்தார். அடுத்த அறைக்குப் போனதும், ‘‘ம்ஹ¨ம்... இங்க காத்தும் வரலை, ஒண்ணும் வரலை. பேசாம, என்னை மாடியில வெச்சுப் பூட்டுங்க’’ என்றார். அவர் கேட்டபடி, மாடிக்கு அழைத்துச் சென்று காலியாக இருந்த ஓர் அறையில் பூட்டிவிட்டுத் திரும்பினர்.

ஒரு காவலர் என் அறைக்கு அருகில் வந்து, ‘‘ஆளு எப்பிடி ஜம்முனு இருக்கான் பார்த்தீங்களா சார், இவன்தான் பயங்கர ரவுடி பங்க் குமார்’’ என்றார்.

‘பங்க் குமார்’ என்ற பெயரை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். நீதிமன்ற வாசலிலேயே பட்டப் பகலில் ஒருவரை வெட்டிக் கொன்றதாக அவர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளது. மேலும் பல வழக்குகளும் உள்ளன-வாம். இப்போது ஒரு குண்டு வெடிப்பு வழக்கு!

மறுநாள் காலையில் அறிமுகப்படலம். மோகனுக்கும் செல்வராஜுக்கும் பங்க் குமாரை நன்றாகவே தெரிந்திருந்தது. எங்கள் இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தனர். பார் வைக்கு மிகவும் சாதுவா கத் தெரிந்த குமாரை, ‘சாமி, சாமி’ என்று செல்வராஜ் அழைத்ததைப் பார்த்ததும், எனக்கு வியப்பாக இருந்தது. பிறகு தனியாகக் கேட்டேன்... ‘‘அது என்ன சாமி?’’

‘‘அவருக்கு ரொம்பப் பக்தி சார்! பாருங்க, இன்னும் கொஞ்ச நாள்ல இங்கேயே பெரிய பூஜை எல்லாம் ஆரம்பிச்சிடுவாரு. அதனால ‘சாமி’ன்னுதான் கூப்பிடு-வோம்!’’

எனக்கும் பரந்தாம-னுக்கும் உள்ளூரச் சிரிப்-பாக இருந்தது. அவருக்-கும் அறவே கடவுள் நம்பிக்கை கிடையாது. ‘‘என்னய்யா... குத்து, வெட்டு, கொலைனு அலையுறீங்க. அப்புறம் சாமி, கடவுள் பூஜை வேற பண்றீங்க’’ என்றார் பரந்தாமன்.

‘‘அது வேற, இது வேற நயினா’’ என்று விடை வந்தது செல்வராஜிடமிருந்து.

சில நாள்களுக்குப் பிறகு, பங்க் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் சதுரங்க விளையாட் டில் கெட்டிக்காரர் என்று மோகன் சொல்ல, ஒருநாள் குமாருடன் சதுரங்கம் விளையாடி னேன்.

பள்ளி, கல்லூரி நாள்களிலிருந்தே அந்த விளையாட்டில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதில் பல பரிசுகளையும் வாங்கியுள்ளேன். எனவே, குமாரை எளிதாக வென்றுவிடலாம் என்று விளை யாடத் தொடங்கினேன். ஆனால், குமார் வெற்றி பெற்றுவிட, அதிர்ச்சிக்குள்ளானேன். கவனமில் லாமல் விளையாடிவிட்டோமோ என்று எண்ணி, மறுபடியும் விளையாடினேன். தொடர்ந்து பல தடவை குமாரே வெற்றி பெற, எப்போதாவதுதான் எனக்கு வெற்றி கிடைத்தது.

அவ்வளவு புத்திசாலித்தனமும் நல்ல வழியில் திருப்பப்பட்டிருந்தால், பங்க் குமார் மட்டுமல்ல, நாடும் பயன்பெற்றிருக்கும்.

இரண்டு மாதங்களுக்குப் பின், பிணை கிடைத்து பங்க் குமார் விடுதலையானார். பிரியும்போது, மனம் மாறி வெளியில் செல்வதாகவும், படிக்க-வேண்டிய சில நல்ல புத்தகங்களின் பெயர்களை எழுதித் தருமாறும் கேட்டார். கொடுத்தேன்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சில மாதங்களுக்கு முன் நாளேடுகளில் ஒரு நாள், ‘ரவுடி பங்க் குமார் சுட்டுக் கொலை’ என்று செய்தி வந்திருந்தது.

நல்லவரோ, கெட்டவரோ... பழகிய அந்த நாள்கள் இப்போதும் என் நினைவில்!
\ (தொடரும்)

Friday, May 25, 2007

அது ஒரு பொடா காலம்! (7)

அது ஒரு பொடா காலம்! (7)
சுப.வீரபாண்டியன்

நான் நந்தன் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபோது, தாயப்பன் எனக்கு அறிமுகமானார்.

அப்போது அவர், சென்னை பல் மருத்துவக் கல்லூரி மாணவர். துடிப்பான இளைஞர். தமிழில் சிறந்த சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர். எனவே, அவரைப் பொது மேடைகளில் அறிமுகப்-படுத்துவதில், நானும் நண்பர் சாகுல் அமீதும் மிக விருப்பமாக இருந்தோம். அதன் விளைவாகவே, சிக்கலுக்குக் காரணமாக இருந்த சென்னைக் கூட்டத்துக்கும் அழைத்திருந்தோம்.

ஆனாலும், அன்றைய நிலைமைகள் குழப்பமாக இருந்த காரணத்தால், நான் அவரை வரவேற்புரை மட்டும் நிகழ்த்துமாறு சொன்னேன். பொடாவில் கைது செய்வதற்கு வரவேற்புரை மட்டுமேகூடப் போதுமானது என அன்றைய அரசு கருதிவிட்டது.

துன்பத்திற்கிடையில், தாயப்பனை எப்போது இங்கு அழைத்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்-பு எங்களுக்கு இருந்தது. ஆனால், இரவு வரை தாயப்பன் வரவில்லை. மறுநாள் காலைச் செய்தித்தாள்களைப் பார்த்தபோதுதான், அவரை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்-கள் என்பது தெரிந்தது.


அருகில் உள்ள சிறையில் அடைப்பதன் மூலம் நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ‘நல்ல எண்ண’த்தில் தொலைதூரச் சிறைகளில் கொண்டுபோய் அடைக்-கும் பழக்கம் அன்றிருந்தது. சென்னையில் கைது செய்யப்-பட்ட தாயப்பனை சேலத்திலும், மானாமதுரையில் கைது செய்யப்பட்ட பரந்தாமனை சென்னையிலும், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட பாவாணனை கோவையிலும், ஈரோட்டில் கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தியை மதுரையிலும் சிறைகளில் அடைத்து மகிழ்ந்தது ஜெயலலிதா அரசு. என்னைப் போன்ற ஒரு சிலருக்கு விதிவிலக்கு என்றே கூற வேண்டும். சென்னையில் கைது செய்து, சென்னையிலேயே சிறை வைத்ததால், ‘மனு பார்க்க’ வருவோரின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். அதற்கும், இடையில் தடை விதிக்கப்பட்டது. வாரத்துக்கு மூன்று நாட்கள், குறிப்பிட்ட எண்ணிக்-கையில் மட்டும் மனு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர்.

அக்டோபர் 16&ம் நாள், மனுவுக்கு அழைப்பு வந்தபோது, மனம் மகிழும் வாய்ப்பு ஒன்றும் வந்தது.

வழக்கம் போல் காலை 11 மணியளவில், கூடுதல் கண்காணிப்பாளர் அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்ட-போது, யாரெல்லாம் என்னைப் பார்க்க வந்துள்ளனர் என்று தெரி-யாது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு கொண்டுசெல்லப்பட்ட பின் சிறிது நேரத்தில், எங்களைப் பார்க்க வருவோர் வலைக்கம்பிகள், தடுப்புகளுக்கு அந்தப் பக்கத்தில் உள்ளே அனுப்பப்படுவர். அப்போது-தான் யார் யார் வந்துள்ளனர் என்பதை நாங்கள் அறியமுடியும்.

ஆனால் அன்றோ, எனக்கு முன்பே அவர்கள் அழைத்து வரப்-பட்டு இருந்தனர். அதுமட்டு-மல்லாமல், சிறைக்கு உள்ளே, கூடுதல் கண்காணிப்பாளர் அறையின் உள்ளேயே அவர்கள் அமர்த்திவைக்கப்பட்டு இருந்தனர்.

என் மூத்த அண்ணன் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து-ராமன், என் மனைவி, என் மகள் மூவரும் அமர்ந்திருக்க, மகளின் மடியில் புத்தம் புது மலராக ஒரு குழந்தை. வியப்பி- லிருந்தும் மகிழ்விலிருந்தும் மீள முடியாமல் அந்தக் குழந்தையை நான் உற்றுப் பார்க்க, ‘‘நம்ம பேரன்தாங்க’’ என்று என் மனைவி சொன்னதும், மகிழ்ச்சி, அப்படியரு மகிழ்ச்சி!

அவர்கள் அருகில் அமர, அன்று சிறை என்னை அனுமதித்தது. கண்காணிப்பாளர் ஒப்புதலுடன் இப்படிச் சில சிறப்புச் சலுகைகளைச் சிறையில் வழங்குவார்கள். அன்று காலை என் அண்ணன், கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் பேசியதன் விளைவாக, அவர்கள் உள்ளே அனுமதிகப்பட்டுள்ளனர் என்று அறிந்துகொண்டேன்.


இரண்டு மாதங்கள்கூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தையை என் மடியில் வைத்துவிட்டு, என் தோளில் சாய்ந்து மகள் இந்து அழுத அழுகை இப்போதும் என் நினைவில் உள்ளது.


அண்ணன் அதட்டினார்... ‘‘அழக் கூடாது! பெரியப்பா என்ன சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தேன், மறந்துட்டியா?’’ என்றார்.


என் மனமும் இளகத் தொடங்-கியது. ஆனாலும், அது கண்ணீராய்க் கரைந்துவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

குழந்தையை என் முகத்தருகில் தூக்கி, அதன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தேன். ‘‘அப்பா, நாங்க அமெரிக்கா போறதுக்குள்ள வந்துடுவீங்களா?’’ என்று இந்து கேட்க, ‘‘ஜாமீன் கேட்டு போட்ட மனுவில் இன்னிக்-குத் தீர்ப் பாம். சாயங்காலம் தீர்ப்புச் சொல் லிட்டா, நாளைக்கே அப்பா வந்துடப் போறான். எதுக்கு அழுவுற?’’ என்று அண்ணன் ஆறுதல் சொன்னார்.

10, 15 நிமிடங்கள் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். சட்ட விதிப்படி, இரண்டு காவலர்கள் இரண்டு பக்கமும் நின்று, எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். வழக்கு பற்றிய ரகசியங்களைப் பேசிக்கொள்கிறோமா, மறைமுக மாகக் கடிதங்கள், பொருள்-களைப் பரிமாறிக்கொள்கிறோமா என்றெல்லாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கடமை.


பார்வையாளர்கள் புறப்-பட வேண்டிய நேரம் வந்து-விட்டது என்பதைக் காவலர்-கள் உணர்த்-தினர். புறப்படுவதற்கு முன், அண்ணன் ஒரு பழைய செய்தியை நினைவு கூர்ந்தார். ‘‘உன் பேரனை மட்டுமில்லப்பா... நீ குழந்தையா இருந்தப்போ, உன்னையும் நான் சிறைக்-குத் தூக்கிட்டுப் போயிருக்-கேன்’’ என்று அவர் சொல்ல, மனைவியும், மகளும் விழித்தனர்.


எங்கள் அப்பா காரைக்குடி இராம.சுப்பையா, கல்லக்குடிப் போராட்டத்தில் ஈடுபட்டு, 1953&ம் வருடம், கைதாகி திருச்சி சிறையில் இருந்தார். கல்லக்குடிப் போராட்-டத்தில் முதல் அணிக்குக் கலை-ஞரும், இரண்டாவது அணிக்கு அப்பாவும், மூன்றாவது அணிக்குக் கவிஞர் கண்ணதாசனும் தலைமை ஏற்றிருந்தனர்.


அப்போது கலைஞரின் நெருக்க-மான தொண்டராக, அவர் கூடவே அப்பா சிறையில் இருந்தார். அந்த வேளையில், ஒரு வயதுக் குழந்தை-யான என்னைப் பார்க்க அவர் ஆசைப்பட, அம்மாவும், அண்ணன் முத்துராமனும் என்னைச் சிறைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அன்று, இந்த அளவுச் சலுகை-கூட வழங்கப்படாமல், கம்பி வலை-களின் வழியாக விரலைவிட்டு, என்னைத் தொட்டு அவர் முத்தம் கொடுத்துள்ளார்.

அந்தக் காட்சியைத்தான் அண்ணன் இப்போது நினைவுபடுத்-தினார். 50 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, அதே காட்சி மீண்டும் எங்கள் குடும்-பத்தில் அரங்கேறியது. இரண்டு காட்சி-களிலும் அண்ணனுக்கு இடம் இருந்தது.


பேரனின் பிஞ்சு விரல்களில் நான் மீண்டும் ஒரு முறை முத்தமிட, ‘பிரிவென்னும் ஒரு பாவி’ இடையில் வந்தான்.


மாலை வழக்குரைஞர்கள் வந்தனர். சற்று நேரம் மௌனமாக இருந்தனர். அவர்களின் மௌனம் எனக்குச் சத்தமாகச் செய்தி சொல்லியது.

‘‘என்ன, பிணை கிடைக்க வில்லையா?’’


‘‘ஜாமீன் குடுக்க முடியாதுன்னு நீதி-மன்றம் சொல்லிடுச்சு. மறுபடியும் ஜாமீன் கேட்டு மனுப் போடக் கொஞ்ச நாளாகும்!’’

\ (தொடரும்)

அது ஒரு பொடா காலம்! (6)

அது ஒரு பொடா காலம்! (6)


சுப.வீரபாண்டியன்சிறையில் சில வேடிக்கையான விதிகள் உண்டு. காவலர் அனுமதியோடு கொசுவத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், தீப்பெட்டி வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் தீக்குச்சி வாங்கிக் கொசுவத்தி ஏற்றினாலும், அந்தச் சிறைக் கொசுக்கள் அதையெல்லாம் மதிப்பதே இல்லை. உள்ளே விளக்கும் கிடையாது. வராந்தாவில் கண்சிமிட்டும் சின்ன விளக்கின் வெளிச்சம் மட்டும்தான், நம் ஒரே நண்பன். அந்த வெளிச்சத்தில் புத்தகங்கள் படிப்பதும் மிகவும் கடினம். கம்பிகளின் நிழல்கள், புத்தகத்தின் மேல் கோடுகளாக விழும்.

அன்று கொஞ்சம் புழுக்கமாகவும் இருந்தது. வியர்வையைத் துடைத்தபடி இருந்தபோது, பக்கத்து அறையில் பரந்தாமன் பூட்டப்பட்டார். ஒரு காவலர் மூலம் கொசுவத்திச் சுருள் ஒன்றை அவருக்கு அனுப்பிவைத்தேன். ‘‘என்ன சுபவீ, எதுக்கு இது?’’ என்றார். ‘‘கொஞ்ச நேரத்தில் தெரியும்’’ என்றேன்.

ஆனால், அதையும் மீறிய கொசுக்கடியாலும், மிகக் கடுமையான புழுக்கத்தினாலும், அன்று அவரால் சரியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் காலை, இருவரும் சந்தித்துப் பேசி னோம். வெளியே நிலைமைகள் எப்படி உள்ளன என்று நானும், உள் நிலவரம் பற்றி அவரும் ஒருவரையருவர் கேட்டு அறிந்து கொண்டோம். இரண்டுமே மகிழ்ச்சி தருவதாக இல்லை.

அவரை பொடாவில் கைது செய்ததற்கான காரணம், எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெற முடியாத ஒன்றாக இருந்தது. 25.08.2002 அன்று, கட்சி அலுவலகத்தை மூடுவதாகச் சொல்லி, ‘தென் செய்தி’ இதழ் அலுவலகத்துக்குச் ‘சீல்’ வைத்தபோது, திருச்சி சௌந்தரராசன், பரந்தாமன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் சிலர் அங்கு இருந்துள்ளனர். அப்போது தொலைக்காட்சியினர் பரந்தாம னிடம் கருத்து கேட்டுள்ளனர். அதற்கு விடையாக அவர் சொன்ன நான்கு வரிகள் தொலைக்காட்சிகளிலும், மறுநாள் நாளேடுகளிலும் வெளிவந் துள்ளன.

‘ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசியதைத் தமிழக அரசு தவறு என்று கருதினால், அதைத் தொடர்ந்து செய்யத் தயங்க மாட்டோம். தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது’ என்பதுதான் அவருடைய கூற்று. இந்தப் ‘படு பயங்கரவாதச் சொல்லாட’லுக்காகவே அவரை அன்றைய அரசு பொடாவில் கைது செய்தது.


மீண்டும் 24.09.2002 அன்று, நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டேன். கடலூர் சிறையிலிருந்து நெடு மாறன் ஐயாவையும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனையும் அழைத்து வந்திருந்தனர்.

சிறையிலிருந்து புறப்படும்போதே மோகன் சொன்னார்... ‘‘ஐயா, இன்னிக்கு நீங்க உங்க கேஸ்காரங்க எல்லாரையும் பார்க்க வாய்ப்பிருக்கு’’ என்று. ‘‘அது என்ன ‘கேஸ்காரங்க’?’’ என்று கேட்டேன். ‘ஊர்க்காரங்க, உறவுக்காரங்க’ என்பது போல், ஒரு குறிப்பிட்ட வழக்கில் குற்றம்சாட்டப் பெற்றுள்ள அனைவரும் ‘கேஸ்காரங்க’ ஆகிவிடுவார்கள் என்று விளக்கினார். அந்தச் சிறை மொழியின்படி ‘கேஸ் காரங்க’ மூவரும் ஒருவரையருவர் அன்று சந்தித்துக்கொண்டோம். பரந்தாமன் வேறு ‘கேஸ்காரர்’ என்பதால், அன்று நீதிமன்றம் அழைத்து வரப்படவில்லை.


எங்கள் மூவரையும்கூட ஒரே சிறையில் வைத்திருந்தால், ஒன்றாகவே அழைத்துச் சென்றுவிடலாம். அரசுக் குச் செலவும் மிச்சம். ஆனால்,மூலைக் கொருவராக ஆளுக்கொரு சிறையில் அடைத்து வைக்கப்பட்டோம். ‘‘ஐயா எப்படியிருக்கீங்க?’’ என்று நெடுமாறன் ஐயாவிடம் நான் கேட்க, ‘‘நல்லா யிருக்கேன். நல்ல ஓய்வு. ‘இந்திய தேசியம்: உருவாகாத கரு’ங்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதுறதுக்குக் குறிப்புகள் எடுத்துட்டு இருக்கேன். அது தொடர்பா உங்ககிட்டே ஏதாவது புத்தகங்கள் இருந்தாலும், கொடுத்தனுப்புங்க’’ என்றார்.


‘‘அந்த அம்மா அவ்வளவு சிரமப் பட்டு நம்மளையெல்லாம் உள்ளே போட்டிருக்குது. நீங்க ரெண்டு பேரும், ‘நல்ல ஓய்வு, புத்தகம் எழுத லாம்’னா பேசிக்கிறீங்க?’’ என்று கிண்டலடித்தார் பாவாணன்.


நானும் பாவாணனும் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். என்னைவிட ஓர் ஆண்டு இளையவர். குழிபிறை சிங்காரமாக இருந்து, தனித் தமிழியக்கப் பற்றின் காரணமாகத் தன் பெயரை புதுக்கோட்டை பாவாணனாக மாற்றிக்கொண்டவர். படிக்கும் காலத்தில் நான் அவரிடம் பார்த்த மாணவத் தீ இன்னும் அணையாமலே உள்ளது.


வைகோ உட்பட எல்லோருக்கும் முன்பாக, ஜூலை மாதம் 4&ம் தேதியே கைது செய்யப்பட்டவர் அவர்தான். முதலில் சாதாரணச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு, பிறகு பொடா வழக்குக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன் னொரு சிறப்பையும் அரசு வழங் கியது. கவுந்தப்பாடி கூட்டத்தில் பேசியதற்கு ஒரு வழக்கு, சென்னைக் கூட்டத்தில் எங்களோடு பேசியதற்கு ஒரு வழக்கு என அவர் மீது இரண்டு பொடா வழக்குகள்! இரண்டு தங்கப் பதக்கங்கள் வாங்கிய மாதிரி அவர் முகத்தில் ஒரு பெருமை தென் படும்.


சிறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்ட நிலையிலும், இரவு நேரப் புழுக்கத்தைத் தாள முடியா மல் தவித்தார் பரந்தாமன். ‘‘பொடா கைதிகள் மின் விசிறி வெச்சுக் கிறதுக்குச் சட்டத்தில் இடம் இருக் காமே?’’ என்றார். ‘‘கேக்கிறதுக்குக் குளுமையாத்தான் இருக்கு’’ என் றேன். ‘‘நான் விளையாட்டுக்குச் சொல்லலை. நாளைக்கு வக்கீல் கிட்ட கேப்போம்’’ என்றார்.


அப்படியே சட்டத்தில் இடம் இருந் தாலும், நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் தாண்டி வருவதற்குச் சில மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் குளிர் காலமே வந்துவிடும். மின் விசிறி எதற்கு என்று தோன்றியது. அடுத்த கோடைக் காலத்துக்கும் இங்குதான் இருக்கப் போகிறோம் என்பதை அப்போது நான் உணரவில்லை.


ஆனாலும், சிறைக்கு வந்த மறுநாளே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, பரந்தாமன் மேல் தளத்துக்குச் சென்று விட்டார். அங்கே கொஞ்சம் காற்று வரும் என்பது அவருடைய நம்பிக்கை. மீண்டும் கீழ்த்தளத்தில் நான் மட்டுமே.


ஒரு நாள் இரவு அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த வேளையில், யாரோ காலின் பெருவிரலைச் சுரண்டுவது போலிருந்தது. சட்டென்று காலை உதறிவிட்டு, மீண்டும் உறங்கினேன். சற்று நேரத்தில் மறுபடியும் சுரண்டல். தூக்கம் கலைந்து எழுந்தேன். மங்கிய வெளிச்சத்தில் உற்றுப்பார்த்தபோது, ஒரு மூலையில் கறுப்பாக ஓர் உருவம் தெரிந்தது. உர்ரென்று உறுமியது. அடடா, பெருச்சாளி! என்ன செய்வ தென்று புரியவில்லை.


பகலில் சில வேளைகளில் எலிகள், பெருச்சாளிகள் ஓடுவதைப் பார்த்திருக் கிறேன். இரவில் இப்படி அறைக்குள் வந்து காலைச் சுரண்டும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மணி என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. அருகில் ஓடுகிற மின் தொடர் வண்டி ஒலியை வைத்து ஓரளவு முடிவு செய்வோம். இப்போது எந்த ஒலியும் இலை. ஆகவே, இரவு 12 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் இருக்கிறோம் என்று பொருள்.

பக்கத்திலிருந்த செய்தித் தாளையும், புத்தகங்களையும் வைத்து அந்தப் பெருச்சாளியை விரட்டப் பார்த்தேன். எதற்கும் அசைந்து கொடுக்காத முரட்டுப் பெருச்சாளியாக இருந்தது அது.


வேறு வழியின்றிக் கம்பியின் வழியாகக் காவலரை அழைக்க முயற்சி செய்தேன். ‘‘வார்டர்’’, ‘‘வார்டர்’’ என்று ஓங்கிக் குரல் கொடுத்ததும், மேலேயிருந்து செல்வராஜ், ‘‘என்ன ஐயா?’’ என்று கேட்டார். சொன்னேன். ‘‘அது ஒண்ணும் பண்ணாது, சும்மா தூங்குங்க’’ என்றார். ‘‘எனக்கு ஆறுதல் வேண்டாம்; காவலர்தான் வேண்டும்’’ என்று சொன்னதும், அவரும் குரல் கொடுத்தார். அதன் பிறகு ஒரு காவலர் உள்ளே வந்து, தன் கையிலிருந்த தடியைக் கொடுத்தார். தடியால் பெருச் சாளி மீது ஓர் அடி போட, ஓட்டம் எடுத்தது. ‘அப்பாடா’ என்று ஒரு பெரு மூச்சு வந்தது. ஆனாலும், மறுபடியும் பெருச்சாளி வந்தால் என்ன செய்வது என்று புரியவில்லை. ‘‘சார், இந்தத் தடியை காலையில வந்து வாங்கிக்குங்களேன்’’ என்றேன். ‘‘ஒங்ககிட்ட தடி இருந்தா பெருச்சாளி போயிடும். ஆனா, என் வேலையும் போயிடுமே’’ என்றவர், ‘‘மறுபடி வந்தா கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டுத் தடியை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.


எவ்வளவோ முயற்சி செய்தும், அதன் பின், அன்று இரவு முழுக்க வரவே இல்லை & தூக்கம்!


மறுநாள் காலை, அதிகாரிகளிடம் நடந்ததைச் சொல்ல, அவர்கள் ஒரு கைதியை அழைத்து, கீழ்ப் பகுதிக்கு வலை அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள். அந்தப் பையன் என்னைப் பார்த்து, ‘‘எங்க பிளாக்குக்கு இந்தப் பெருச்சாளி வர மாட்டேங்குதே சார்! வந்துச்சுன்னா மறு நாள் மட்டன் சாப்பாடுதான்’’ என்றான். எலிக் கறிக்கு அங்கே ஏகப்பட்ட போட்டி!


இயல்பான உரிமைகள்கூட எங்களுக்கு மறுக்கப்பட்டன. இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும், அவருடைய துணைவியாரும் கடலூர் சிறைக்கு வந்தபோது, நெடுமாறன் ஐயா வைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தித்தாள்களில் ஒரு செய்தி வெளியாகி யிருந்தது. சென்னைச் சிறையிலும், சிறை அதிகாரி அறையில் அமர்ந்து என்னையும் பரந்தாமனையும் சந்திக்க, விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் திருமா வளவன் அனுமதி கோரி, அது மறுக் கப்பட்டதால் திரும்பிச் சென்றுவிட் டார் என்று சில காவலர்கள் கூறினர்.


எல்லாவற்றுக்கும், ‘மற்ற சட்டங்கள் வேறு, பொடா வேறு’ என்பது மட்டும்தான் எங்களுக்கு விடையாகச் சொல்லப்பட்டது.


வலைத் தடுப்புகளின் வழியே பார்வையாளர்களைச் சந்திப்பது என்பது, சில நேரங்களில் முற்றிலும் பயனற்றதாகப் போய்விடும். கூடுதல் கண்காணிப்பாளரின் அறையில் நாங்கள் நிறுத்தப்படுவோம். வலைக் கம்பிகளைத் தாண்டிக் கொஞ்சம் இடைவெளி. அதன் பிறகு அங்கே வலைக் கம்பித் தடுப்பு இருக்கும். அதற்கு அப்பால் பார்வையாளர்கள் நிற்பார்கள். இந்தப் பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பத்து பேர் நின்றால், அந்தப் பக்கம் நாற்பது பார்வையாளர்கள் நிற்பார்கள். எல்லோரும் சத்தம் போட்டுப் பேசு வார்கள். யார் யாரோடு பேசுகிறார்கள் என்பதே சில நேரங்களில் புரியாது. இரைச்சலுக்கு இடையே, சில சொற் கள் செவிகளை எட்டும்.


இவற்றுக்கெல்லாம் என்ன மாற்று எனச் சிந்தித்துக்கொண்டு இருந்த வேளையில், மாலை எங்களைச் சந்திக்க வந்த எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரும் புருசோத்தமனும், பொடா சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று அறிவுரை கூறினர். கடலூர் சென்று நெடுமாறன் ஐயாவிடம் கருத்துப் பெற்று வந்துள்ளதாகக் கூறினார்கள். அதன் அடிப்படையில், ‘பொடா சட்டத்தின் பிரிவுகள் 1(4), 3&9, 14, 18&24, 26, 27, 29, 33, 36&53 ஆகியன, இந்திய அரசியல் சாசனச் சட்டத் துக்கு முரணானவை. எனவே, அவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என என் பெயரில், நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.


வழக்குரைஞர்கள் இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் கொண்டு வந்தனர். வேறு சிலரும்கூட பொடா வில் கைது செய்யப்படலாம் என்பதே அது!


அவர்கள் கூற்று, சில நாட்களில் உண்மையாகிவிட்டது. எங்கள் கூட்டத்தில் வரவேற்பு ஆற்றிய மருத்துவர் தாயப்பன், 03.10.2002 அன்று பொடாவில் கைது செய்யப்பட்டார்.

\ (தொடரும்)

Friday, May 11, 2007

அது ஒரு பொடா காலம்! (5)

அது ஒரு பொடா காலம்! (5)

சுப.வீரபாண்டியன்

என்னைப் பார்த்ததும், துப்பாக்கி ஏந்திய இருபது காவலர்கள், தடதடவென்று ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்டார் கள். ஒருவர் என் கைகளைப் பிடித்து விலங்குகளை மாட்டத் தொடங்கினார். சட்டென்று நான் கைகளைப் பின்னிழுத்துக் கொண்டேன். ‘‘என்ன இதெல்லாம்’’ என்று கேட்டேன். ‘‘விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதுதான் சட்டம்’’ என்றார்கள். ‘‘அந்தச் சட்டம் எங்கே இருக்கிறது?’’ என்றேன். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ‘‘நீங்க ஒத்துழைக்கலைன்னா, அப்புறம் நாங்க ஃபோர்ஸ் (யீஷீக்ஷீநீமீ) யூஸ் பண்ணவேண்டி வரும்’’ என்று மிரட்டலாகச் சொன்னார் காவல் அதிகாரி. ‘‘பண்ணுங்க’’ என்றேன். பிறகு சற்றுத் தணிந்த குரலில், ‘‘ஏன் இப்படி வம்பு பண்றீங்க?’’ என்றார்.

நான் விளக்கமாக விடை சொன்னேன். ‘‘நான் பேசுவது வம்பு இல்லை; சட்டம். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு, விலங்கு மாட்டிக்கொள்வதற்கு எல்லாம் வெட்கப்பட முடியாது. எங்கள் பாட்டன் செக்கே இழுத்திருக்கிறார். ஆனால், நீங்கள் சட்டத் துக்குப் புறம்பாக நடந்துகொள்கிறீர்கள் என்பதால்தான் நான் ஒத்துழைக்க மறுக்கிறேன்’’ என்று கூறிவிட்டு, சிறப்பு அனுமதி பெற்ற வழக்குகளைத் தவிர பிறவற்றில் எந்த ஒரு கைதிக்கும் கைவிலங்கு போடக் கூடாது என்று அறிவித்த உச்சநீதிமன்ற ஆணையை, அதன் எண், வருடம், மாதம், தேதியோடு சொன்னேன். ‘‘நான் இவ்வளவு ஆதாரத்தோடு சொன்ன பிறகும், எனக்கு நீங்கள் விலங்கிட்டு அழைத்துச் சென்றால், நீதிமன்றத்தில் இது குறித்துக் கண்டிப்பாக முறையிடுவேன்’’ என்றேன்.

இப்போது அவர்களின் வேகம் குறைந்திருந்தது. அதிகாரிகள் தனியாகப் போய் பேசிவிட்டுத் திரும்பி வந்தனர். ‘‘சரி, வாங்க போகலாம்’’ என்றார்கள். விலங்குகள் மாட்டப்படவில்லை.

ஆனால், இதற்கான எதிர்வினையை அவர்கள் நீதிமன்றத்தில் காட்டினார்கள். அங்கே உறவினர்களும் இயக்கத் தோழர் களும் நண்பர்களும் ஏராளமாகக் காத்திருக்க, யாரையும் என்னோடு பேசவிடாமல் கெடுபிடி செய்தனர்.

என் மகன் இலெனின் மட்டும், பேத்தி ஓவியாவைத் தூக்கிக்கொண்டு உள்ளே வர முயற்சித்தான். காவலர்கள் விடவில்லை. துப்பாக்கிகளைத் தாண்டி, பத்து மாதக் குழந்தையான என் பேத்தியின் முகம் தெரிந்தது. அந்தச் சூழலில் குழந்தையின் முகம் மிரண்டு போய்க்கிடந்தது. காவல் துறை வட்டத்தைக் விலக்கிக்கொண்டு, குழந்தையை நோக்கி நடந்தேன். வழி மறித்து, ‘‘அங்கே போகக் கூடாது!’’ என்றனர். ‘‘ஏன்?’’ என்றேன். ‘‘சட்டத்தில் அதற்கெல் லாம் இடமில்லை!’’

கோபம் கொள்ளுதல் என் இயல்பன்று. ஆனாலும், சில வேளைகளில் சினம், மனிதனின் அடையாளம். இப்போது எனக்குள்ளி ருந்து அந்த அடையாளம் வெளிப்பட்டது. உரத்துப் பேசினேன். ‘‘உங்கள் மிரட்ட லுக்குப் பயப்பட முடியாது’’ என்று சத்தம் போட்டேன். ‘‘வராந்தாவில் என்ன சத்தம்?’’ என்று கேட்ட நீதிபதி, செய்தியை அறிந்து என்னை உள்ளே அழைத்து வரச் சொன்னார்.

நீதிபதி முன் நிறுத்தப்பட்ட நான், விலங்கிட முயற்சித்த நிகழ்விலிருந்து எல்லாவற்றையும் கூறிவிட்டு, ‘‘குழந்தை யைக் கொஞ்சுவதற்குக்கூடவா பொடா சட்டம் தடை விதிக்கிறது?’’ என்று கேட் டேன். நீதிபதி என்ன சொல்லப் போகிறார் என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

வழிக்காவலர்களுக்குத் தலைமை ஏற்று வந்த உதவி ஆணையரை (ஏ.சி) நீதிபதி அழைத்தார். ‘‘ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்கள்?’’ என்று சற்று கடுமையாக அவர் கேட்ட கேள்விக்கு, விடையேதும் சொல்லாமல் நின்றிருந்தார் காவல் அதிகாரி. ‘‘இனிமேல் இங்கு அழைத்துவரப்படும் கைதிகள் யாருக்கும் என் அனுமதி இல்லாமல், விலங்கு பூட்ட முயற்சிக்க வேண்டாம்’’ என்ற நீதிபதி, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சு வதற்கு என்னை அனுமதிக்குமாறு அந்த அதிகாரிக்கு அறிவுறுத்தி னார்.

வீட்டில், தெருவில், பூங்கா வில் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு; உங்களுக்கும் இருக்கும். பரபரப்பான நீதிமன்ற நடை பாதையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நெருங்கி நிற்க, பல்வேறு வகையான மனிதர்கள் அந்தக் காட்சியை வேடிக்கை பார்க்க, போராடிப் பெற்ற அனுமதியின் பேரில் பேத்தியைக் கொஞ்சி மகிழும் ‘பெரும் பாக்கியம்’ எல்லோருக்கும் வாய்த்து விடாது.

ஆனாலும், மிரண்டு போயிருந்த குழந்தையின் முகம் பார்த்தபின், முதலில் அந்த இடத்திலிருந்து குழந்தையை மட்டுமாவது ‘விடுதலை’ செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. இலெனினிடம், ‘‘தம்பி! ஓவியாவை நாளைக்குச் சிறைக்கே தூக்கிட்டு வா! இங்கே வேணாம். பாவம், பயப் படுது’’ என்று சொல்லி விட்டு, ஊர்தியை நோக்கி நடந்தேன்.

வழக்கத்துக்கு மாறாக, அன்று கைதிகள் பலர், சிறையில் மகிழ்வுடன் காணப்பட்டனர். நான் உள்ளே வந்து ஒரு மாதத்தில் அன்றுதான் அப்படி ஒரு முகமலர்ச்சியைப் பலரிடம் பார்த்தேன்.


காலை ‘படி’யாகச் சப்பாத்தி கொண்டுவந்த ஓர் இளைஞன், ‘ஐயா, நாளையிலேருந்து உங்க ளுக்கு இன்னொருத்தன் சப்பாத்தி கொண்டு வருவான்யா’’ என்றான்.

‘‘ஏம்ப்பா, நீ..?’’

‘‘விடுதலைங்கய்யா..! பத்து வருஷமாச்சு. நாளைக்கு ராத்திரி சாப்பாடு வீட்டுல தானுங்கய்யா. எங்க ஆத்தாகிட்ட மீனு வாங்கி கொழம்பு வைக்கச் சொல்லியிருக்கேன்.’’

‘‘அப்படியா! மகிழ்ச்சி ராஜா, தொடர்ந்து வீட்டுச் சாப்பாடே சாப்பிடு. மறுபடியும் சிறை சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டுடாதே!’’

அவன் சிரித்தான். ‘‘போதுங்கய்யா, இனிமே இங்க வர மாட்டேன்’’ என்றவன், ‘‘அந்தப் பையன்கிட்ட சொல்லியிருக்கேன். இதே மாதிரி நல்ல சப்பாத்தி போட்டுத் தருவான்’’ என்றான்.

விடுதலை ஆகப்போகும் அவன் என்னைப் பற்றியும் அக்கறை காட்டுகிறானே என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ‘இதே மாதிரி நல்ல சப்பாத்தி’ என்றானே, அங்குதான் ஒரு பேரச்சம் என்னைப் பற்றிக்கொண்டது.

எல்லாக் கைதிகளுக்கும், மூன்று வேளையும் ‘பட்டைச் சோறு’தான்! ஒரு நீளமான தட்டில் வைத்து நான்கு பேர் அதைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். பார்ப்பதற்குக் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கும்.

முதல் வகுப்புக் கைதிகளுக்கு மட்டும் சப்பாத்தி. ‘அடடா, அது ஒரு பெரிய வரம்’ போல முதலில் தோன்றும். சிலர் பகலிலும்கூடச் சப்பாத்தி கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் சலித்துப் போகும். ‘காலையில் சப்பாத்தி, கடும் பகல் சப்பாத்தி, மாலையில் சப்பாத்தி, மறுபடியும் சப்பாத்தி’ என்றால் யாருக்குத்தான் வெறுத்துப் போகாது! அதிலும் இரவுக்கான சப்பாத்தியை மாலை 5 மணிக்கே கொண்டுவந்து தந்து விடுவார்கள். இரவு எட்டு மணிக்கு அதை உண்ணும்போது, அட்டையைப் பிய்த்துத் தின்பது போல அவ்வளவு ‘மென்மை’யாக இருக்கும்.

இந்த இளைஞன் கொண்டுவரும் சப்பாத்தியோ பகலிலேயே கனமாய் இருக்கும். அதே மாதிரி தொடர்ந்து வரும் என்று எனக்கு ‘ஆறுதல்’ கூறிவிட்டு அவன் விடைபெற்றான்.

மதியப் ‘படி’யாகச் சோறு கொண்டுவந்த பெரியவரிடமும் ஒரு சுறுசுறுப்பு மகிழ்ச்சி! ‘என்ன... ஒங்களுக்கும் நாளைக்கு விடுதலையா?’’ என்று வேடிக்கையாகக் கேட்டேன். ‘‘அட! ஆமாங்கய்யா, எப்படிக் கரெக்கிட்டா சொல்லிப் போட்டீங்க?’’ என்றார்.

எனக்கு வியப்பாக இருந்தது. அருகிலிருந்த மோகனிடம், ‘‘என்ன இது, ரொம்பப் பேர் நாளைக்கு விடுதலைங்கிறாங்களே?’’ என்றேன்.

‘‘நாளைக்கு அண்ணா பிறந்த நாள் இல்லீங்களா... பொதுமன்னிப்பில் போயிடுவாங்க’’ என்றார்.

‘‘எல்லாப் பயலும் பொறப்புடு றானுங்க. நமக்குத்தான் இந்தக் கதவு எப்பத் தெறக்கும்னு தெரியலே!’’ & செல்வராஜின் குரல் விரக்தியாக வெளிப்பட்டது.

அன்று மாலை, மனு பார்க்க வந்த தங்கள் உறவினர்களிடம் நூற்றுக் கணக்கான கைதிகள் தம் உடைகள் மற்றும் பொருள்களை எல்லாம் கொடுத்து அனுப்பினர்.

நாளைக்கு வெளியே போகும் போது, அணிந்து செல்ல ஒரு நல்ல உடையை மட்டும் வரவழைத்துக் கொண்டனர். மற்றபடி, கை வீசிச் செல்ல வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.

செப்டம்பர் 15 & அண்ணா பிறந்த நாள் வந்தது. ‘காவலர்கள் வருவார்கள்; அழைத்துச் செல்வார்கள்; அடை யாளங்களைச் சரிபார்த்து அனுப்பி வைப்பார்கள்... அவ்வளவுதான்! சிறகை விரிக்கலாம், வானில் பறக்கலாம்’ என்று கனவுகளோடு கைதிகள் பலர் காத்திருந்தனர்.

ஆனால், சிறையில் ஓர் அசைவும் தென்படவில்லை. மாலை ஆனவுடன், கைதிகளிடம் அச்சம் பரவத்தொடங் கியது. அதிகாரிகளிடம் ஓரிருவர் நேரடியாகவே கேட்டனர். ‘‘அரசாங் கத்துல இருந்து ஒரு உத்தரவும் வரலியே, நாங்க என்ன பண்றது?’’ என்று அவர்கள் கைவிரித்த பின்புதான், நிலைமை புரிந்தது.

இருள் கவிந்த வானம் போல் இருண்டது சிறை! எல்லோரும் வழக்கம் போல் அவரவர் அறைகளில் வைத்துப் பூட்டப்பட்டனர். அங்கே வீடுகளில் மீன்குழம்போடு காத்திருக்க, இங்கே இவர்கள் பட்டைச் சோறும் வேண்டாமென்று படுத்து உறங்கி னார்கள்.

அடுத்த நாள் காலையிலிருந்து, ‘ஏன், ஏன் இப்படி’ என்ற வினாக்கள் அலைமோதின. அண்ணாவின் பிறந்த நாளில், ஆண்டுகள் பலவாய்ச் சிறையில் இருப்போருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது நெடு நாளாக இருந்துவரும் மரபு. இந்த ஆண்டில் மட்டும் என்ன நேர்ந்தது என்று வாதங்கள் நிகழ்ந்தன.

‘‘அந்த அம்மா விடாதுடா நம்மளை யெல்லாம்..!’’

‘‘ஏன் விடாது? போன வருஷம் விடலையா?’’

‘‘இல்லையில்ல... நான் விசாரிச்சுட்டேன். இனிமே அண்ணாவுக்குப் பதிலா, அந்த அம்மாவின் பொறந்த நாளுக்குதான் விடப் போறாங்களாம்!’’

‘‘அப்படியா, அது பிப்ரவரி மாசம்ல வரும்! அதுவரைக்கும் இங்கேயே கெடக்க வேண்டியதுதானா?’’

இவையெல்லாம் அன்று எங்கள் செவிகளில் விழுந்த உரையாடல்கள். ஆனால், எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போயின. யாரு டைய பிறந்த நாளிலும் பொதுமன்னிப்பு வழங்கப் படவே இல்லை.

ஆட்சி மாற்றம் ஏற் பட்ட பின், 2006&ம் ஆண்டு தான் மீண்டும் அந்த செப்டம்பர் 15 வந்தது.

அன்று காலை குளித்து முடித்த பின், ஒரு கருஞ்சட்டையை எடுத்து அணிந்துகொண்டேன்.

கறுப்புதான் எனக்குப் பிடித்த வண்ணம். வெயிலில் உழைப்பவர்கள், வியர்வையில் நனைபவர்கள், சூரியனை முதுகில் சுமப்பவர்கள் கறுப்பாகத்தான் இருப்பார்கள். எனவே, அது உழைப்பின் நிறம்; உயர்வின் நிறமும்கூட!

ஆனால், கறுப்புச் சட்டை அணிவது என்பது, சிறையில் ஏதோ எதிர்ப்பைக் காட்டுவது என்று பொருளாம். எனக்கு அது தெரியாது. காலையில் என் அறைக்குத் தற்செயலாக வந்த சிறைக் கண்காணிப்பாளர், ‘‘என்ன, இன்னிக்குக் கறுப்புச் சட்டை, எதுவும் பிரச்னையா?’’ என்றார்.

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. இன்று நம் அய்யா பெரியாரோட பிறந்த நாளாச்சே! அதைத் தனிமையில் நானா கொண்டாடுறேன்’’ என்று சொல்லிச் சிரித்தேன்.

ஒவ்வொரு நாளும், மாலை ஆறு மணிக்கு உள்ளே வைத்துப் பூட்டப்படும்போது, இன்னும் 12 மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்ற கவலை ஒட்டிக்கொள்ளும். அன்றைக்கும் தொற்றிக்கொண்டது.

அப்போது... வெளிக்கதவு திறக்கும் சத்தம்! கம்பிகளின் வழியே பார்த்தேன். சிறை அதிகாரி யும், அவரைத் தொடர்ந்து வெள்ளை முழுக்கைச் சட்டை, வேட்டி அணிந்த ஒரு நெடிய உருவமும் உள்ளே வந்தனர்.

‘‘துணைக்கு ஆள் வேணும்னு கேட்டீங்களா... ஒங்க கட்சிக்காரர் இன்னொருத்தரையும் அனுப்பி வெச்சிருக்காங்க’’ என்று சிரித்துக்கொண்டே சிறை அதிகாரி சொல்ல, பின்னால் நிற்பவரைக் கவனித்தேன்.

‘‘என்ன சுபவீ, எப்படி இருக்கீங்க?’’ என்று கேட்ட அவர், எங்கள் இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமன். ‘‘இன்னிக்கு அதிகாலையில மானாமதுரைக்கு வந்து என்னையும் பொடாவில் கைது பண்ணிட்டாங்க’’ என்றார்.

வருத்தம் என்பதைவிட, துணைக்கு ஒரு நண்பர் கிடைத்த மகிழ்ச்சிதான் என்னுள் மேலோங்கி நின்றது.

\ (தொடரும்)

Friday, May 04, 2007

அது ஒரு பொடா காலம் (பகுதி-4)

அது ஒரு பொடா காலம் (பகுதி-4)

சுப.வீரபாண்டியன்

‘சிறை மொழி’ என்றே ஓர் அகராதி தயாரிக்கலாம். விதவிதமான சொல்லாடல்கள். உள்ளே போய்ச் சில நாள்களில் நமக்கும் புரிந்துவிடும். மனு, ஆல்டி, டர்க்கி, ரைட்டன், படி என்று பல சொற்கள் அங்கு புழங்கும். நண்பர்களோ, உறவினர்களோ நம்மைப் பார்க்க வந்துள்ளனர் என்பதை ‘மனு வந்திருக்கு’ என்றுதான் சொல்வார்கள். முதல் வகுப்பில் கைதிகளாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படும் இன்னொரு கைதியின் பெயர் ‘ஆல்டி’. (ஆர்டர்லி என்னும் ஆங்கிலச் சொல்லே அப்படித் திரிந்துவிட்டதாகப் பிறகு அறிந்தேன்.)

எப்போதும் போதையிலேயே இருப்பவன், ‘டர்க்கி’; ஒரு தொகுதியில் எத்தனை கைதிகள் இருக்கின்றனர் என்பதைக் கணக்கெடுப்பதில் காவலர்களுக்கு உதவுகிற கைதியின் பெயர் ‘ரைட்டன்’; உணவின் மறு பெயர் ‘படி’. வேளாவேளைக்குப் படி அளப்பார்கள்.

அன்று காலை, எனக்கு மனு வந்தது. மகிழ்வோடும், கூடவே ஒருவித அச்சத்தோடும் நடந்தேன்.

30.08.02 இரவே பேரன் பிறந்துவிட்ட செய்தியையும், மகள் நலமுடன் உள்ள செய்தியையும் ‘மனு’வில் அறிந்து மகிழ்ந்தேன். ஏற்கெனவே மகன் வழியில் ஒரு பேத்தி ஓவியா; இப்போது மகள் வழியில் ஒரு பேரன்.

‘பிள்ளைகள், பேரன், பேத்தி பெறற்கரும் அரிய பேறும் அள்ளவே குறைந்தி டாத அன்பையும் உலகில் பெற்ற’ மகிழ்வோடு மறுபடியும் என் தொகுதிக்குத் திரும்பினேன்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஒரு மாலையில், எங்கள் தொகுதியில் காலியாக உள்ள மற்ற அறைகளையும் சுத்தப்படுத்தினர். யாரோ வருகிறார் கள் என்று பொருள். யாரென்று கேட்டேன். காவலர்களுக்குத் தெரிய வில்லை. அதிகாரிகள் சொல்ல வில்லை. வழக்கம் போல, மாலை 6 மணிக்கு அறையில் வைத்து எங்களைப் பூட்டிவிட்டார்கள்.

இரவு 8 மணியளவில், வெள்ளைச் சட்டை, கட்சிக் கரை வேட்டியுடன் இருவரைக் காவலர்கள் அழைத்து வந்தனர். அருகில் வந்தவுடன் முகம் தெரிந்தது. எங்களுக்கு முன்பே பொடாவில் கைதாகி, வெவ்வேறு சிறைகளில் உள்ள ம.தி.மு.க. நண்பர் களே அவர்கள்! ஈரோடு கணேச மூர்த்தியும், புலவர் செவந்தியப்பனும், மதுரைச் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறிது நேரத்தில் திருச்சி சிறையிலிருந்து சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.மணியம், வழக்குரைஞர் அழகுசுந்தரம், மதுரை கணேசன், திருமங்கலம் நாகராஜன் ஆகியோர் வந்தனர். இறுதியாக சேலம் சிறையிலிருந்து வீர.இளவரசன், பூமிநாதன் வந்து சேர்ந்தார்கள்.

பதினைந்து நாள்களுக்குப் பிறகு, இரவில் மனித நடமாட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சி. கம்பிகளுக்கிடையில் கை நீட்டி அவர்களை வரவேற்றேன். சிறை மறந்து எல்லோரும் மகிழ்ச்சி யாக இருந்தோம். ஒருவரையருவர் விசாரித்துக்கொண்டோம். எப்படித் தெரியுமா... ‘‘ஒங்க சிறை எப்பிடி யிருக்கு?’’, ‘‘திருச்சியைவிட மதுரை ஜெயில் பரவாயில்லையா?’’ இப்படி!

அடுத்த நாள், அவர்களுக்குப் பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்தில் வழக்கு. அதற்காக முதல் நாள் இரவு இங்கு கொண்டுவந்துள்ளனர். இது வெறும் இரவுத் தங்கல். பொழுது விடிந்தால் வேடந்தாங்கல் கலைந்து விடும் என்று தெரிந்ததும், என் மகிழ்ச்சி வடிந்துவிட்டது. மீண்டும் அவர்களைச் சந்திக்க ஒரு மாதம் ஆகலாம்!

பொதுவாக எந்த ஒரு கைதியை யும், 15 நாள்களுக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. அப்படி அழைத்துச் செல்லப்படும்போது ஊரை, உலகைப் பார்க்கலாம் என்பதோடு, நீதிமன்றத்தில் உறவினர் களையும் பார்க்கலாம்.

வழிக்காவல் (escorts) வருகிறவர் அனுமதியோடு வீட்டு உணவையும் ஒரு வேளை சுவை பார்க்கலாம். வழக்கிலும் சில முன் நகர்வுகள் ஏற்படலாம். இப்படிப் பல நன்மைகள் உள்ளதால், நீதிமன்றம் செல்லும் நாளை விசாரணைக் கைதிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

பொடா கைதிகளுக்கு அதிலும் ஒரு மாற்றம். ஒரு மாதத்துக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் சென்றால் போதும் என்கிறது பொடா சட்டம்.

பொடா (POTA-prevention of Terrorist Act 2002) போன்ற சட்டங்கள் இந்தியாவுக்குப் புதியவை அல்ல. ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டபோது, இதுபோன்ற பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது. அவற்றுள் குறிப் பிடத்தக்கது, ரௌலட் சட்டம்.

வெள்ளைக்கார நீதிபதி ரௌலட்டும், சென்னையில் நீதிபதியாக இருந்த சி.வி.குப்புசாமி சாஸ்திரியும் சேர்ந்து அந்தக் கொடுமையான சட்ட முன் வடிவை அரசுக்கு அளித்தனர். அதனை அப்போது சென்னை, திலகர் பவனில் (இப்போது ‘சோழா’ ஓட்டல் இருக்கு மிடம்) தங்கியிருந்த காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். அன்னி பெசன்ட், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, எஸ்.சுப்பிரமணிய அய்யர், ஜி.ஏ.நடேசன் ஆகியோர் ஆதரித்தனர்.

இறுதியில் 1919&ம் ஆண்டு அச்சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. அதனை எதிர்த்து பஞ்சாப், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் 1919 ஏப்ரல் 13 அன்று பல்லாயிரக்கணக் கான மக்கள் கூடினர். அவர்களைக் கலைக்க ஆங்கில அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் (1650 ரவுண்டுகள்) 800&க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

விடுதலை பெற்ற இந்தியாவிலும் ரௌலட்&சாஸ்திரி சட்டத்தின் மறுபதிப்புகள் வந்துகொண்டே இருந்தன. ‘டி.ஐ.ஆர்’ (D.I.R- Defence of Indian Rules) சட்டத்தின் கீழ்தான் 1965-&ல் கலைஞர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

1971&ம் ஆண்டு ‘மிசா’ (Maintenance of Internal security Act-MISA) சட்டமும், 1985&ம் ஆண்டு ‘தடா’ (TADA- The Terrorist and Disruptive Activities prevention Act) சட்டமும் நடைமுறைக்கு வந்தன. அந்தச் சட்டங்களின் மறு பதிப்பும் மலிவுப் பதிப்பும்தான் பொடா!

ஆகவே, மற்ற சட்டங்களின் கீழ் பெறக்கூடிய இயல்பான உரிமைகளைக்கூட, நாங்கள் இழக்க வேண்டி யதாயிற்று. அச்சட்டத்தின் பெயரால், எத்தனை விதமான ஒடுக்குமுறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை 13.09.2002 அன்று நான் நேரடியாகவே உணர்ந்தேன்.

அன்றுதான், நான் கைது செய்யப்பட்ட பிறகு முதன்முறையாகச் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறேன். மற்ற கைதிகளைப் போல, எனக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி இருந்தது. காலை 10 மணிக்குச் சிறையைத் தாண்டிக் காலடி எடுத்து வைத்த நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.

\ (தொடரும்)

Friday, April 27, 2007

அது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்

அது ஒரு பொடா காலம் (பகுதி 3)

சுப.வீரபாண்டியன்


கூவம் நதியால் சூழப்பட்டு இருந்த சென்னை நடுவண் சிறையின், உயர் பாதுகாப்புத் தொகுதி 1&ல் அடைக்கப்பட்டேன். ஒருவனைப் பயங்கரவாதியாகச் சித்திரிப்பதற்கு அரசு மேற் கொள்ளும் உத்திகளில் ஒன்று, உயர் பாதுகாப்புத் தொகுதியில் சிறைவைப்பது. அந்தத் தொகுதியில் அடைக்கப்படுபவர்கள், பகல் நேரத்தில்கூட, அதனைவிட்டு வெளியில் வந்து பிற கைதிகளுடன் பேசவோ, பழகவோ இயலாது. கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போருக்கு இருக்கும் பகல் நேரச் சுதந்திரம்கூட என் போன்ற ‘பயங்கரவாதி’களுக்குக் கிடையாது.

அந்தத் தொகுதியில் கீழே நான்கும், மாடியில் நான்குமாக எட்டு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கழிப்பறை உண்டு. வெளியில் இரண்டு பொதுக் கழிப்பறைகளும், ஒரு நீர்த் தொட்டியும், கொஞ்சம் திறந்தவெளி இடமும் இருந்தன. மொத்த உலகம் இவ்வளவுதான்!

சிறையதிகாரி என்னை அங்கே அழைத்துக்கொண்டு போனபோது, எட்டு அறைகளுக்குமாகச் சேர்த்து இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். நான் மூன்றாவது ஆள். அவர்களில் ஒருவர் பெயர் மோகன். இன்னொருவர் செல்வராஜ்.


உள்ளே நுழைந்ததுமே மோகன் என்னிடம் அன்பாகப் பேசினார். ‘என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘பார்த்த மாதிரி இருக்கிறது’ என்றேன். அவர் விளக்கம் சொன்னபின், அந்தப் பழைய நிகழ்வு கள் நினைவுக்கு வந்தன.


விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 1996&ம் ஆண்டு இறுதியில் நான் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு நள்ளிரவில் அங்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஏற்கெனவே 53 பேர் அடைக்கப்பட்டு இருந்த, அந்த நீள் அறையில் 54&வதாக என்னை உள்ளே அனுப்பினார்கள்.


குறுக்கும் நெடுக்குமாகவும், தாறுமாறாகவும் எல்லோரும் படுத்திருக்க, நான் ஒரு ஓரமாகப் படுக்க இடம் தேடியபடி நின்றிருந்த போது, ஒரு ஆள் எழுந்து, என்னைப் பற்றி விசாரித்து, எனக்கு மரியாதை கொடுத்து, படுப்பதற்கு ஓர் இடத்தையும் ஒதுக்கித் தந்தார். அவர்தான் மோகன்.


மோகனைப் பற்றிய இன்னொரு செய்தி, அவர் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் தம்பி. அதே வழக்கில் கைதாகி உள்ளே இருக்கும் இன்னொருவர்தான் செல்வராஜ். வழக்குக் காரண மாக ‘ஆட்டோ’ செல்வராஜ். அவர்கள் இருவரும் மாடியில் உள்ள அறைகளில் இருக்க, நான் மட்டும் கீழ் அறை ஒன்றில், மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டேன்.


ஆளரவமற்ற அன்றைய இரவின் நிசப்தம், வாழ்க்கை என்னை எப்படிப் புரட்டிப் போட்டுள்ளது என்பதை எனக்கு உணர்த்திற்று. வீட்டிலும் உறுப்பினர்கள் அதிகம்; வெளியிலும் நண்பர்கள் அதிகம். கலகலப்பாகவே வாழ்ந்து பழகிய நான் தனிமையில், வராந்தாவில் எரியும் ஒரு சின்ன விளக்கின் வெளிச் சத்தில் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்தேன்.


ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளின் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துரைப்பதில் எப்போதும் நான் தயங்கியதில்லை. ஒருமுறை, ‘உங்கள் மீது விடுதலைப்புலி கள் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதே?’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி!’ என விடை எழுதியிருந்தேன்.


நாங்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த கூட்டத்தில் பேசும்போது, ‘எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. கருத்து வேறுபாடுகளுக்குரிய களமாக அமைவதுதான் ஜனநாயகம். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுவோர், தங்கள் கருத்தை ஊடகங்களிலும், மேடைகளிலும் வெளிப்படுத்த உரிமை இருக்கும்போது அவர்களைப் போராளிகள் என்று கருதும் எங்கள் கருத்தை வெளியிடுவது மட்டும் எப்ப டிப் பயங்கரவாத மாகும்?’ என்று நான் வினா எழுப்பினேன்.


எல்லாவற்றுக்கும் உலகில் ஒரு விலை உள்ளது. இது கருத்து உரிமைக்காக நாம் கொடுக்கும் விலை என்று எண்ணிக்கொண்டு இருந்தபோது, என்னையும் மறந்து உறங்கிவிட்டேன்.


அடுத்த நாள் காலைச் செய்தித்தாள்களில், நான் கைது செய்யப்பட்ட செய்தியோடு, என் வீட்டில் சோதனை (ரெய்டு) நடந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது. வீட்டில் சோதனை என்றால், மீண்டும் ஒரு பரபரப்பு அரங்கேற்றப்பட்டு இருக்கும். ஏன் இத்தனை பரபரப்பு? எதற்காக இவ்வளவு உருட்டலும், மிரட்டலும்?


ஜெயலலிதா அரசின் சர்வாதிகாரம் குறித்து, வைகோ தன் அறிக்கை ஒன்றில் மிகத் தெளிவாகக் குறிப் பிட்டு இருந்தார். ‘தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், தமிழகத்தின் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவும், அ.தி.மு.க. அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்து கிறது’ என்று வைகோ சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை!


இரண்டு நாள்களுக்குப் பின்னர், சிறையில் என்னைச் சந்திக்க என் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப் பட்டது. காரைக்குடியில் படித்துக் கொண்டு இருந்த என் இளைய மகன் பாரதிதாசன் கண் கலங்குவதைக் கம்பி வலைகளைத் தாண்டி என்னால் காண முடிந்தது.


‘சிறைச்சாலையைப் பூஞ்சோலை என்று பாடியவரின் பெயரை அல்லவா உனக்கு வைத்திருக்கிறேன். இப்படிக் கலங்கலாமா?’ என்று ஆறுதல் சொன்னேன்.


மனைவியிடம், வீட்டில் நடந்த சோதனை பற்றிக் கேட்டறிந்தேன். சில புத்தகங்களை மட்டும் எடுத்துச் சென்றார்களாம். ‘நீங்கள் வைத்திருந்த பிரபாகரன் படத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்’ என்று மனைவி கூற, ‘படமே வெடிகுண்டாய் அவர்களைப் பயமுறுத்தி யிருக்கும், விடு!’ என்றேன்.


25.08.02&ம் நாள் நாளேடுகளில், ஒரு வியப்பான செய்தி வெளியாகி இருந்தது. சிறீலங்காவின் மறு வாழ்வுத் துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தன, ‘செப்டம்பர் 16 அன்று, தாய்லாந்தில் தொடங்க விருக்கும் பேச்சுவார்த்தைக்கு வசதியாக, விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடை செப்டம்பர் 6 அன்று விலக்கிக்கொள்ளப்பட உள்ளது’ என்று அறிவித் திருந்தார்.


எந்த நாட்டில் சிக்கலோ, அந்த நாட்டிலேயே தடை நீக்கப்படும்போது, இந்த நாட்டில் தடை இருப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றிப் பேசி விட்டோம் என்று சொல்லி எங்களைப் பொடாவில் கைது செய்வதும் வேடிக்கை யான செய்தி அன்று; வேதனையான முரண்!


சிறையில் காலை நேரம் செய்தித்தாள்களில் கழியும். பிறகு, நான் கொண்டு சென்றிருந்த நூல்களைப் படிப்பேன். இருப்பினும் எவ்வளவு நேரம் படிக்க முடியும்! பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் போலிருக்கும். மோகன் அதிகம் பேசமாட்டார். செல்வராஜ், பேசுவதை நிறுத்தமாட்டார். அவரு டைய கதையை அவர் சொல்லச் சொல்ல, நானும் சுவைத்துக் கேட்கத் தொடங்கினேன். பின்னாளில் அதுவே, என்னால் எழுதப்பட்ட ‘இடைவேளை’ என்னும் தொடர்கதை ஆனது.


26&ம் தேதி காலை. ‘ஐயா! பாத்தீங்களா?’ என்று செய்தித்தாளை எடுத்துக் கொண்டு செல்வராஜ் ஓடி வந்தார். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திவிட்ட செய்தி பெரிதாக வந்திருந்தது.


எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. என் கவலை நாகப்பா பற்றியது மில்லை; வீரப்பன் பற்றியதுமில்லை. அப்போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு, கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஏதேனும் கலவரம் ஏற்பட்டு, அவருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று எண்ணி, மனம் கலங்கினேன். ஆனால், நல்லவேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.


அதே செய்தித்தாளின் பின் பக்கத்தில் ‘நெடுமாறன் கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைப்பு’ என்று இன்னொரு செய்தி வந்திருந்தது.


தமிழனத்தின் மீதும், தமிழின உணர்வாளர்களின் மீதும் ஜெயலலிதா வுக்கு ஏன் இத்தனை கோபம் என்று கேள்வி எழுந்தது. பரம்பரை யுத்தம் போன்று அவர் நடந்துகொண்டார்.


நாள்கள் நகர்ந்தன. உறவினர்களும் நண்பர்களும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் வந்து பார்த்துச் சென்றனர். அந்தச் சந்திப்புகள், விதவிதமான உணர்ச்சி களின் வெளிப்பாடாக இருந்தன.நாள் தவறாமல் சிறைக்கு வந்து கொண்டு இருந்த இலெனின், 30.08.02 அன்று விரவில்லை. என் அண்ணன் செல்வமணியும், நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.


‘இந்துவுக்குக் காலையிலிருந்து இடுப்பு வலியாக இருக்கிறதாம். அதனால்தான் இலெனின் வரவில்லை’ என்று அண்ணன் சொன்னார். ‘தலைப் பிரசவம்.... எல்லோருமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.மீண்டும் சிறையில் அறைக்குத் திரும்பிய பின், மகளின் நினைவு மனத்தை வாட்டியது. ‘வந்தது, வந்தது ஞாபகம் & மகளே, வாடாத பூப் போன்ற உன் முகம்’ என்னும் அறிவுமதியின் பாடல் வரிகளை வாய் முணு முணுத்தது.


அன்று வெள்ளிக்கிழமை. அடுத்து இரண்டு நாள்களுக்கு எதையும் தெரிந்துகொள்ள முடியாது. திங்கள் கிழமை வரை நெஞ்சம் அதையே நினைத்துக்கொண்டு இருந்தது. நல்ல செய்திக்காகக் காத்திருந்தேன்!

\ (தொடரும்)

Friday, April 20, 2007

அது ஒரு பொடா காலம் (பகுதி - 2)

அது ஒரு பொடா காலம் (பகுதி - 2)

சுப.வீரபாண்டியன்

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான் சென்னை ஐஸ் அவுஸ், நடேசன் தெருவில் உள்ள க்யூ பிரிவு காவல்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

அங்கே துணைக் கண்காணிப்பாளர் சில கேள்விகளைக் கேட்டார். அங்க அடை யாளங்களைக் குறித்துக்கொண்டார். பேச்சுவாக்கில், ‘‘நீங்கள் சிறைக்குப் போவது, இதுதான் முதல் முறையா?’’ என்று கேட்டார்.

‘‘இது முதல் முறை இல்லை’’ என்ற நான், சிறிய இடைவெளி விட்டு, ‘‘கடைசி முறையும் இல்லை’’ என்றேன். இந்த ‘அதிகப்பிரசங்கித்தனம்’ அவரிடமிருந்து ஒரு சிரிப்பை வரவழைத்தது. ‘திருத்த முடியாத ஆள் போலிருக் கிறது’ என்று நினைத்திருக்கக்கூடும். வேறு எதுவும் கேட்கவில்லை.

காவலர்களையும் ஆய்வாளரையும் பார்த்து, ‘‘உடனே புறப்படுங்க. கொஞ்ச நேரம் ஆச்சுன்னா விஷயம் தெரிஞ்சு பத்திரிகைக்காரங்க வந்துடுவாங்க’’ என்றார் துணைக் கண்காணிப்பாளர்.

மடமடவென்று வேலைகள் நடந்தன. என்னை அழைத்துக்கொண்டு எல்லோரும் புறப்பட்டனர். மாடிப்படிகளைவிட்டுக் கீழிறங்கி வந்தவுடன், அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி!

வாயில் கதவுகளுக்கு வெளியே புகைப்படக் கருவிகளுடன், ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி நண்பர்கள் தயாராக எங்களை எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

இதனைச் சற்றும் எதிர்பாராத காவலர்கள், எப்படி செய்தி கசிந்தது என்று விளங்காமல், என்னை அழைத்துக்கொண்டு பின்புறமாகச் சென்றனர். காவல் ஊர்தி பின்புறம் வரவழைக்கப்பட்டது. என்னை அதில் ஏற்றியதும், வாயில் கதவுகளைத் திறந்தார்கள். மின்னல் வேகத்தில், ஊர்தி அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டது.

பூவிருந்தவல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தை நோக்கி எங்கள் வாகனம் சென்றது.

இந்தப் பயணம் எங்கே தொடங்கியது என்று நான் நினைத்துப் பார்த்தேன்.

2002 ஏப்ரல் 7 அல்லது 8&ம் தேதியாக இருக்க வேண்டும். நானும், ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீதும், கோடம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்தபோதுதான், இதற்கான தொடக்கம் ஏற்பட்டது.

நண்பர் சாகுலுடன் அவ்வப்போது இப்படி உரையாடுவது வழக்கம். கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்புத் தென்னரசன் ஆகியோரும் சில வேளைகளில் இணைந்துகொள் வார்கள். பல நிகழ்ச்சிகள், அடுத்த கூட்டங்கள் முதலானவை அங்கு முடிவு செய்யப்படுவதுண்டு. குறிப்பிட்ட அந்த நாளில், நாங்கள் இருவர் மட்டுமே!

‘தமிழ் முழக்கம்’ சார்பில், ஒவ்வொரு மாதமும் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை சாகுல் நடத்திக்கொண்டு இருந்தார். அந்தக் கூட்டம், வடபழனியில் உள்ள ஒரு சிறிய திருமண மண்டபத்தில் நடக்கும். திருமண நாளாக இருந்தால் மண்டபம் கிடைக்காது என்பதால், ஒவ்வொரு மாதமும் ‘அஷ்டமி’யன்று கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தோம். பகுத்தறிவாளனாகிய நான், பஞ்சாங்கம் பார்த்து அஷ்டமி நாளை அவருக்குக் குறித்துக் கொடுப்பேன். அன்று, அடுத்த மாத ‘அஷ்டமிக் கூட்ட’த்தை எப்படி நடத்தலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.

முதலில், நூல்களுக்கான திறனாய்வுக் கூட்டமாகத்தான் அது நடந்தது. பிறகு, நல்ல திரைப்படங்களையும் திறனாய்வு செய்தால் என்ன என்று தோன்றியது. ‘அழகி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

ஏப்ரல் 8&ம் தேதி, எனக்குப் புதிய சிந்தனை ஒன்று தோன்றியது. 2002 பிப்ரவரி 22 அன்று, ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் ‘புரிதல் ஒப்பந்தம்’ ஏற்பட்ட பிறகு, ஏப்ரல் 10&ம் தேதியன்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உலகச் செய்தியாளர் களுக்கு, வன்னியில் பேட்டி அளிக்கப்போகிறார் என்னும் செய்தி, அன்று பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று ஆகும்.

‘அந்தப் பேட்டியை ஏன் இந்த முறை நாம் திறனாய்வு செய்யக் கூடாது’ என்று நான் சாகுலிடம் கேட்டதும், துள்ளிக்குதித்து விட்டார். அவருக்கு ஒன்று பிடித்து விட்டால், பிறகு வேறு எது குறித்தும் அவர் சிந்திக்க மாட்டார். அதைச் செய்து முடிக்கும் வரை, காரியமே கண்ணாயிருப்பார்.

அஷ்டமி, இடம் எல்லாம் மாறிப் போய்விட்டது. ஏப்ரல் 13&ம் தேதி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் திரையரங்கைப் பதிவுசெய்து விட்டார். நெடுமாறன் ஐயா, தேனிசை செல்லப்பா, புதுக்கோட்டைப் பாவாணன், கவிஞர் அறிவுமதி, வழக்குரைஞர் அருள்மொழி, மருத்துவர் தாயப்பன் அனைவரிடமும் அன்று மேடையில் பேசுவதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டார்.

நான்கே நாள்கள் இடைவெளியில் நண்பர் சாகுல் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அந்தப் பரபரப்பு, காவல்துறையிடம் ஓர் எச்சரிகை உணர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதனால், நெடுமாறன் ஐயா எழுதியுள்ள ‘தமிழீழம் சிவக்கிறது’ என்னும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாகச் சொல்லி, ஏப்ரல் 12&ம் தேதி மாலையே, சாகுலைக் காவல் துறை யினர் கைது செய்து விட்டனர். ஏறத்தாழ 1,000 புத்தகங்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்ட நூல் அன்று. ஏற்றுமதி, இறக்குமதிக்கு சாகுலிடம் முறையான உரிமமும் உள்ளது. ஆனால், அது பற்றி யெல்லாம் கவலைகொள்ளாமல், அவரைக் கைது செய்துவிட்டனர்.

அவரைக் கைது செய்துவிட்டால், விழா நடக்காது என்று அவர்கள் கருதியிருக்கலாம். விளைவு எதிர்மாறாக ஆகிவிட்டது.

மாலை 4 மணிக்கே, அரங்குக்குக் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. ஆறு மணியளவில் கூட்டம் தொடங்கிய போது, அந்த இடமே உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது.

அன்று காலைதான், ‘விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால், பொடா சட்டம் பாயும்’ என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஏறத்தாழ மூன்று மணி நேரம் மிகச் சிறப்பாகக் கூட்டம் நடந்தது. அன்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தற்காகவே நெடுமாறன் ஐயாவும், நானும் கைது செய்யப்பட்டுள்ளோம்.

ஏப்ரல் 8&ம் தேதி, ஒரு உணவகத்தில் விழுந்த விதை, ஆகஸ்ட் மாதம் மரமாக வளர்ந்துவிட்டது. அதே நேரம், அந்தக் கூட்டம் ஒருவேளை நடக்காமல் இருந் திருப்பினும், வேறு ஒரு கூட்டத்தைக் காட்டி எங்களை அந்த அம்மையார் கைது செய்திருப்பார் என்பதே உண்மை.!

இவ்வாறு பல்வேறு வகையான சிந்தனைகளில் மூழ்கியிருந்த நான், காவல் ஊர்தி பூந்தமல்லி நீதி மன்றம் வந்துவிட்டதை உணர்ந்து, எண்ணங்களிலிருந்து விடுபட்டேன்.

நீதிமன்ற வாயிலில் என்னை எதிர்பார்த்து பரந்தாமன், திருச்சி சௌந்தரராசன், பத்மநாபன் முதலான இயக்கத் தோழர்கள் பலரும், என் அண்ணன் சுவாமி நாதன், என் மகன் இலெனின் ஆகியோரும் காத்திருந்தனர். எவரும் என்னை நெருங்குவதற்குக் காவல்துறை அனுமதிக்கவில்லை.

ஏ.கே&47 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்னைச் சூழ்ந்து வர, நான் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்தக் காட்சியைப் பார்ப்பவர் களுக்கு, ஏதோ கார்கில் போரி லிருந்து, அந்நிய நாட்டுப் படை வீரனை அழைத்து வருவது போலிருக்கும்.

வழக்கைக் கேட்ட நீதிபதி, என்னை செப்டம்பர் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஆணையிட்டார். எங்கள் வழக்கறிஞர் புருசோத்தமன் கேட்டுக்கொண்ட தற்கிணங்க, மகனை மட்டும் அருகில் வந்து பேச அனுமதிக்குமாறு நீதிபதி கூறினார். விடைபெற்றேன். பெரியப்பா மூவரிடமும், அத்தை யிடமும், தம்பி பாரதிதாசனிடமும் செய்தியைக் கூறச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

‘க்யூ’ பிரிவு அலுவலகத்தில் ஏமாற்றமடைந்த இதழியலாளர்கள், இங்கு சரியாக வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டனர். ‘‘சொல்லுங் கள், என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்?’’ என்று தொடர்ந்து கேட்டனர்.

ஓரிரு நிமிடங்களில் நிதானமாக நான் எண்ணியதைச் சொல்லி முடித்தேன்.

‘‘அங்கும் போர் நடக்கவில்லை. இங்கும் கலவரம் ஏதுமில்லை. பிறகு ஏன் பொடா என்று தெரியவில்லை. இங்கே நடப்பது ஜெயலலிதா ஆட்சியா, சந்திரிகா ஆட்சியா என்றே சந்தேகம் வருகிறது. தமிழ் இங்கு கெட்ட வார்த்தையாகிவிட்டது. தமிழ் உணர் வாளர்களெல்லாம் இந்த அரசுக்குத் தீவிரவாதியாகத் தெரிகின்றனர். இந்நிலைமைகள் மாறியே தீரும். வரலாறு எங்களை விடுதலை செய்யும்’’ என்றேன்.

என்னை ஏற்றிக்கொண்டு ஊர்தி நகர்ந்தது. இயக்கத் தோழர்கள் முழக்கம் எழுப்பினர்.

எந்தச் சிறைக்குக் கொண்டுசெல் கின்றனர் என்று தெரியவில்லை. அப்போது வைகோ வேலூரிலும், நெடுமாறன் ஐயா கடலூரிலும், கணேச மூர்த்தி மதுரையிலும், பாவாணன் கோவையிலுமாகப் பல்வேறு சிறை களில் இருந்தனர். ‘நமக்குப் பாளையங் கோட்டையோ என்னவோ?’ என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

என் எண்ணத்துக்கு மாறாக, சென்னை நடுவண் சிறைக்கே என்னை அழைத்துச் சென்றனர்.

மதியம் 12.15 மணிக்கு நான் சிறைக்குள் நுழைந்தேன். நான் உள்ளே சென்றபின், அந்தப் பெரிய கதவுகள் அடித்து மூடப்பட்டன.

அவை மீண்டும் திறக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பது, எனக்கு அப்போது தெரியாது!

\ (தொடரும்)

நன்றி: ஆனந்த விகடன்

Tuesday, April 17, 2007

அது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1அது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1


பேரா. சுப. வீரபாண்டியன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் தனது பொடா சிறை அனுபவங்களை ‘அது ஒரு பொடா காலம்’ என்னும் தலைப்பில் தொடராக எழுத தொடங்கியுள்ளார்.

அவரின் அனுபவ பதிவுகள் இங்கே நண்பர்களுக்காக..


அறியாதவர்களும் என்னை அறிந்து கொள்ளும் வகை செய்த ஜெயலலிதாவுக்கு!

இரண்டாவது நன்றி & சிறையிலிருந்து மீட்டெடுத்து, மறுக்கப்பட்ட பேச்சுரிமையை மறுபடியும் வழங்கி, இப்போது பொடாவிலிருந்து முழுமையாகவே விடுவித்திருக்கும் கனிவு மிகுந்த கலைஞருக்கு!விகடனுக்கும் உங்களுக்கும் என் நன்றி எப்போதும்!இரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலை பேசி மணி ஒலித்தது.

இரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

‘‘சொல்லுங்க... என்ன செய்தி?’’ என்று கேட்டேன்.

‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28&ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு?’’ என்றார்.

எனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க?’’ என்றேன்.

‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார்.

என் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது & அதுவும் இந்த நள்ளிரவில் & ஏன் என்னும் வினா எனக்குள் எழுந்தது.

அவரே அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தினார்... ‘‘நாளைக்கு அதிகாலையில் உங்களை பொடாவுல கைது செய்யப்போறாங்கன்னு ஒரு தகவல் கிடைச்சுது. அப்பிடி நடந்தா, அதை உடனே படமாக்குறதுக்குத் தான், இப்பவே உங்க வீட்டைப் பார்த்து வெச்சுக்கலாம்னு வந்தோம்’’ என்று விளக்கினார்.

நான் அப்போது தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன். அவ்வியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பத்துப் பன்னிரண்டு நாள்களுக்கு முன்பு (2002 ஆகஸ்ட்&1) பொடாவில் கைது செய்யப்பட்டதி லிருந்து, நானும் இயக்கத்தைச் சார்ந்த வேறு பொறுப்பாளர்கள் சிலரும் கைது செய்யப்படலாம் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது. எனவே, தொலைக்காட்சி நண்பர் சொன்ன செய்தி, எனக்குள் பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்திவிடவில்லை.

ஏற்கெனவே ஏழு முறை சிறை சென்ற அனுபவமும் இருக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு சிறை வாழ்வும் ஒரு புதிய அனுபவம்!

சற்றுப் புரண்டு படுத்த நான், மீண்டும் தொலைபேசியை எடுத்து, என் மூத்த மகன் இலெனினுக்குப் பேசினேன்.

‘‘தம்பி, நாளைக்கு அதிகாலையில கொஞ்சம் வீட்டுக்கு வாப்பா!’’

‘‘ஏம்ப்பா, என்ன விஷயம்?’’

மெல்லிய குரலில், சற்று முன் வந்த தொலைபேசிச் செய்தியைச் சொல்லி முடித்தேன். ‘கிசுகிசு’ என்று மெதுவாகப் பேசும்போதுதான், அருகில் உள்ளவர்களுக்குச் சத்தமாகக் கேட்கும் என்பார்கள். முதலில் உரத் துப் பேசியபோது, நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த என் மனைவியும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த என் மகள் இந்துவும் இப்போது விழித்துக்கொண்டனர்.

‘‘என்ன.. என்ன..?’’ &அவர்கள் குரலில் பதற்றம்! இனி மறைத்துப் பயனில்லை என்று கருதி, செய்தியை மெள்ள மெள்ள எடுத்துச் சொன்னேன்.

‘‘என்னங்க இது... அமெரிக்காவில் இருந்து பொண்ணைப் பிரசவத்துக்குக் கூட்டிட்டு வந்திட்டு, இப்ப நீங்கபாட்டுக்கு ஜெயிலுக்குப் போயிட்டா, நான் ஒருத்தியா என்ன செய்யமுடியும்?’’ & மனைவியின் குரல் உடைந்து வெளிப்பட்டது.

‘‘பெரியவனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கலே. சின்னவனுக்குப் படிப்பு, ஹாஸ்டலுக்குப் பணம் அனுப்பணும். இருந்த வேலையையும் விட்டுட்டீங்க. பென்ஷனை மட்டும் வெச்சுக் கிட்டு எப்படிச் சமாளிக்கிறது?’’ என்று பொருளாதாரச் சிக்கல்களும் வெளிப்பட்டன.

‘‘தைரியமா இரு! நண்பர்கள் இருக்காங்க... அண்ணன்லாம் இருக்காங்க... பார்த்துக்குவாங்க!’’ என்று ஆறுதல் சொன்னேன். பிறகு பல செய்திகள் குறித்தும் பேசி முடித்து, நாங்கள் தூங்கியபோது, இரவு மணி இரண்டைத் தாண்டிவிட்டது.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம். அழைப்பு மணி எழுப்பியது. காவல் துறையினர்தான் என்று எண்ணிக் கதவைத் திறந்தபோது, மகன் இலெனின் நின்றிருந்தான்.

‘‘நம்ம தெரு முனையில கல்யாணி மண்டபத்துக்கிட்ட ரெண்டு டி.வி. வேன் மட்டும் நிக்குதப்பா!’’ என்றான்.

விரைந்து இயங்கி, குளித்து முடித்து, ஒரு பெட்டியில் தேவையான துணிகளையும், சில புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, சிறைப் பயணத்துக்குத் தயாரானேன்.

ஆறு, ஏழு, எட்டு மணியாகிவிட்டது. ஒருவரும் வரவில்லை. ‘‘நேத்து ராத்திரி வந்த செய்தி வதந்தியா இருக்குமோ?’’ என்றாள் இந்து. வதந்தியாக இருந்து விட வேண்டும் என்பது அவள் விருப்பம். மெள்ளச் சிரித்தபடி, ‘‘உண்மையா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம், பாக்கலாம்’’ என்றேன். இறுதியில் அது வதந்தியாகத்தான் போய்விட்டது. ஒன்பது மணி வரை காத்திருந்துவிட்டு தொலைக்காட்சி நண்பர்களும் ‘ஒருவிதமான விரக்தி யோடு’ விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.

நானும் மயிலாப்பூர் ‘தென் செய்தி’ அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்.

நானும் நெடுமாறன் ஐயாவின் மகள் உமாவும் சேர்ந்து, செய்தித் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டோம். கைது, அது குறித்த கண்டனங்கள், இயக்கம் நடத்தவிருக்கும் எதிர்வினை கள் என எல்லாவற்றையும் தொகுத்துக் கொண்டு இருந்தோம்.

ஐயா கைது செய்யப்பட்ட சில தினங்களிலேயே, மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்களைச் சென் னைக்கு வரவழைத்துக் கூட்டத்தை நடத்தினோம். கூட்ட முடிவில், ‘‘உங்கள் தலைவரைப் பொடாவில் கைது செய்துவிட்ட இன்றைய நிலையில், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?’’ என்று இதழாளர்கள் கேட்டபோது, ‘‘அவர்கள் அம்மண்ணின், மக்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை நாங்கள் எப்போதும் ஆதரிப் போம்’’ என்று உறுதிப்படக் கூறினோம். ஏறத்தாழ அப்போதே எங்கள் சிறைப் பயணம் முடிவாகிவிட்டது.

ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, ‘‘தொலைக்காட்சியைப் பாருங்கள், ஒரு அதிர்ச்சியான செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது’’ என்றார். ‘தமிழர் தேசிய இயக்கத்தைத் தமிழக அரசு தடை செய்துள்ளது’ என்பதே அச்செய்தி!

அடுத்து என்ன நடக்கும், யார் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள், அலுவலகம் இயங்க அனுமதிப் பார்களா என ஆயிரம் வினாக்கள் எழுந்தன. எங்கள் வழக்குரைஞர் சந்துருவைத் தொடர்புகொண்டு, பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். தடையைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டேன்.

தமிழர் தேசிய இயக்கம், 1908&ம் ஆண்டுக் குற்றவியல் திருத்தச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டிருந்தது. காந்தியடிகள் எதிர்த்துப் போராடிய சட்டங்களில் ஒன்று அது. அதன்கீழ் 1950&ம் ஆண்டு மக்கள் கல்வி இயக்கம் (றிமீஷீஜீறீமீs ணிபீuநீணீtவீஸ்மீ ஷிஷீநீவீமீtஹ்) எனும் ஓர் அமைப்பு மட்டுமே தடை செய்யப் பட்டது. அந்தத் தடையை எதிர்த்து, அவ்வமைப்பின் நிறுவனர் வி.ஜி.ராவ் நீதிமன்றம் சென்றார். தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகளில் அல்&உம்மாவும், தமிழ்த் தேசிய இயக்கமும்தான் தடை செய்யப்பட்டுள்ளன. மேற்காணும் விவரங்களையெல்லாம் என் அறிக்கையில் கூறியிருந்ததோடு, தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்றும் அறிவித்திருந்தேன்.

அடுத்த நாள், இந்திய விடுதலை நாளையட்டிக் கோட்டையில் கொடி ஏற்றிய முதல்வர், தமிழின உணர்வாளர்களுக்கு மறைமுகமாகச் சில எச்சரிக்கைகளை விடுத்தார். அவர் உரையில், ‘‘மொழி, இன, வட்டார உணர்வு என்ற போர்வையில், சில சக்திகள் தலைதூக்க முற்பட் டுள்ளன. அந்தப் பிற்போக்குச் சக்திகளுக்குப் பாடம் புகட்ட, இங்கே தடந்தோள்கள் உண்டு’’ என்று குறிப் பிட்டிருந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடுதலை நாள் உரை, அடுத்தடுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்பதையே உணர்த்தியது.

தென்செய்தி வேலையை முடித்து விட்டு தியாகராய நகரில் அறை எடுத்துத் தங்கியிருந்த, இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமனைச் சந்தித்தேன். அடுத்து இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்வது என்று குறித்து உரையாடினோம்.

‘‘நாளை காலையில் கடலூருக்குப் போய், சிறையில் தலைவரைச் சந்திச்சு அவருடைய யோசனைகளைக் கேட்டுக்கிட்டுப் பிறகு எல்லாத்தையும் முடிவு செய்யலாம்’’ என்றார் பரந்தாமன். எனக்கும் அதுவே சரி என்றுபட்டது.

அடுத்த நாள் (16.08.02) அதிகாலையிலேயே எழுந்து, கடலூர் புறப்படத் தயாரானேன். ‘‘தேநீராவது குடிச்சுட்டுப் போங்க’’ என்று மனைவி சொல்ல, ‘சரி’ என்று சொல்லிக் காத்திருந்தேன்.

சரியாகக் காலை 6.10&க்கு அழைப்பு மணி ஒலித்தது.

கதவைத் திறந்தால்...

காக்கிச் சட்டைப் பட்டாளமே காத்திருந்தது.

துப்பாக்கி ஏந்திய, துப்பாக்கி ஏந்தாத, சீருடை அணிந்த, சீருடை அணியாத, ஆண், பெண் காவலர்கள் பலரும் நின்றிருந்தனர். என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணையோடு காவல்துறை அதிகாரி யும் பிறரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

பொடாவின் அழைப்பைப் புன்னகையோடு வரவேற்றேன்!

Tuesday, April 03, 2007

பொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை

பொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை

பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து இன்று பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.

அம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.

பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், இன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

-சசி

Friday, March 16, 2007

போய்விட்டனவா பொடாவும் தடாவும்?

போய்விட்டனவா பொடாவும் தடாவும்?
சுப.வீ.

தடா, பொடா சட்டங்களெல்லாம் போய்விட்டன என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சட்டங்களின் கீழ் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளன. அதைக்காட்டிலும் கொடுமையான செய்தி, அச் சட்டங்களின் கீழ்க் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் சிறைகளில்தான் உள்ளனர் என்பதாகும்.

வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட பலர் சிறைகளில் இருந்தபோது, அவர்களைப் பற்றிய செய்திகளையேனும் நாளேடுகளும், தொலைக் காட்சிகளும் வெளியிட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் பிணையில் வெளிவந்த பின்பு, தமிழகத்தில் பொடாவின் கீழ்க் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலையாகி விட்டனர் என்பது போன்ற ஓர் உணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் தருமபுரியில் கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் இன்றுவரை சிறையில்தான் உள்ளனர்.

18 வயது கூட நிரம்பாதவர்கள் என்னும் அடிப்படையில், பிரபாகரன், பகத்சிங் என்னும் இரண்டு சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களைத் தவிர பெண் தோழர்கள் அறுவர் பிணையில் வெளிவந்தனர். மற்றபடி இருபதுக்கும் மேற்பட்ட தருமபுரித் தோழர்களுக்கு பிணை கூட வழங்கப்படவில்லை. முழுமையாக 3 ஆண்டுகளை, விசாரணைக் கைதிகளாகவே அவர்கள் சிறையில் கழித்துள்ளனர்.

பிணையில் வெளிவந்துள்ள பெண்களும், தினந்தோறும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்னும் நிபந்தனைக்கு உட்பட்டே வெளியில் உள்ளனர். ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த வெளியூர்ப் பெண்களான அவர்கள், சென்னையில் தங்கி தினமும் காலையில் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வயதில் பொடாவிற்கு மூத்த தடாவின் நிலைமையும் இவ்வாறுதான் உள்ளது. தடாவில் கைது செய்யப்பட்ட இசுலாமியத் தோழர்கள் பலர் ஆண்டுகள் பலவாய் சிறையில் இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 250க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் மீது 35 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவை 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பிணையும் வழங்கப்படாமல், வழக்கும் நடத்தி முடிக்கப்படாமல் 12 ஆண்டுகளாக இவர்கள் சிறையாளிகளாக உள்ளனர்.

மதக்கலவரம், தீவிரவாதம் என்னும் அடிப்படையில் இவர்களின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மதக்கலவரம் என்றால், அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதுதானே பொருள். அவ்வாறாயின், ஒரு மதத்தினர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பது என்ன நியாயம்? மற்ற வகுப்பில் ஒருவர் கூட தவறே செய்யவில்லை என்று சொல்ல முடியுமா?

உள்ளே இருக்கும் சிறையாளிகளின் சிலர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டால் கூட, அது 10 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என்று வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்களோ 12 ஆண்டுகளாக உள்ளே இருப்பதோடு மட்டுமல்லாமல், வழக்குகள் எப்போது முடியும் என்பது கூட தெரியாத நிலையில் உள்ளனர். திசைதெரியாத இருட்டில் அவர்கள் வாழ்க்கை உள்ளே நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் குடும்பத்தினர் வெளியே தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தடாவும் பொடாவும் உண்மையாகவே நீக்கப்படும் காலம் எப்போது வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா


திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் 22-01-2007 மாலை நடைபெற்றது
பல்லடம் தாய்த் தமிழ் பள்ளி சிறார்களின் கலைநிகழ்ச்சி


தொடக்க விழா : (இடமிருந்து வலம்) திரைப்பட இயக்குனர் செல்வபாரதி, அதியமான், கயல் தினகரன், பேரா. அன்பழகன் - நிதியமைச்சர், தமிழ்நாடு அரசு, நடிகர் சத்தியராஜ், திரைப்பட இயக்குனர் சீமான், நக்கிரன் ஆசிரியர் கோபால், தீரு. சுப.வீரபாண்டியன் - தலைவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
புத்தக நினைவு பரிசு


கலைவாணா அரங்கம் நிரம்பி வழிந்த கூட்டம்.