Sunday, December 31, 2006

ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிக்கும் நிலைக்கு நாம் இன்னும் வந்துவிடவில்லை

சுப. வீரபாண்டியன்

அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படும் சுப. வீரபாண்டியன்.

உண்மைதான். அதற்காக தலித் அரசியல் போன்றவைகளை மறுக்க முடியாது. காரணம் இந்த ஒடுக்குமுறை பிறப்பின் அடிப்படையில், சாதியின் அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பது இந்தியா முழுமைக்கும் பொதுப்படையாகவே இருக்கிறது. எனவே அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்ப்பு என்பதும் ஒரு பொதுத் தன்மையோடு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அம்பேத்காரை மராட்டியத்தில் பிறந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. பூலேயும் மராட்டியத்தை சார்ந்தவர் என்று ஒதுக்கி விட முடியாது. சாகுமகராஜ், அம்பேத்கர், பூலே போன்றவர்கள் மராட்டியத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள்.பார்ப்பன ஆதிக்கமும் மராட்டியத்திலேதான் துளிர்த்தது. சித்பவன் பார்ப்பனர்கள் தான் இந்தியாவின் அரசியலை நெடுகவே கையாண்டு வந்து இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ன் தோற்றம் மராட்டியத்தில்தான் இருக்கிறது. திலகரிலிருந்து அது தொடங்குகிறது. வீரசவார்க்கரின் வழியில் வருகிறது. ஹெட்சுவாரிடமிருந்து அது தோற்றம் பெறுகிறது. எனவே இந்த ஒடுக்குமுறை என்பது பொதுவாக இருக்கிறபோது அதற்கான எதிர்ப்பு என்பதும் பொதுத்தன்மை உடையதாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் இதனை இந்திய தன்மை கொண்டதாகவே கொண்டு போக வேண்டும் என்ற தேவை இல்லை.

எதிர்ப்பில் ஒரு பொதுத்தன்மை இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒடுக்குமுறைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. தலித்திய சாதிகளுக்குள்ளும் வேறுபாடுகள் இருக்கின்றன. அம்பேத்கர் பிறந்த மகர் என்ற சாதி இங்கே இல்லை. இங்கே இருக்கிற சாதிகளின் பெயர்கள், தன்மைகள் வேறாக இருக்கின்றன. ஆகையால் இந்த தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவகையில் அந்தத் தலித்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை எடுத்துச் செல்வது சரியாக இருக்கும்.

தலித் என்ற சொல்லுக்கு தமிழில் பொருள் என்ன?

தலித் என்பது மராட்டியச் சொல், தலித் என்றால் மண்ணின் மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள் சிலர். எனக்கு சரியான பொருள் விளங்கவில்லை. இது அம்பேத்கரிடம் வந்த சொல் என்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அம்பேத்கர் இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அம்பேத்கர் அட்டவணைச் சாதி, தீண்டப்படாதவர்கள், ஒடுக்கப்பட்டோர் என்ற சொற்களைத்தான் பயன்படுத்துகிறார். பின்னால்தான் இந்த சொல் வந்திருக்கிறது. அந்த சொல்லின் சுருக்கம் கருதி இந்தியா முழுவதும் புகழ் பெற்றுவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நாம் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்ற சொல்லைத்தான், நீண்ட சொல்லாக இருந்தாலும் பயன்படுத்துகிறோம். அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று பயன்படுத்தலாம். ஆதி திராவிடர் என்ற சொல் இருக்கிறது. இனி ஆதி தமிழர்கள் என்ற சொல்லை பயன்படுத்தலாம்.

திராவிடம் என்ற சொல் இனி வேண்டாம் என்று கருதுகிறீர்களா?

பொதுவாக என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் தளங்களில் தமிழன் என்ற சொல்லை கூடுதலாகவும் சமூக நீதி தளங்களில் திராவிடன் என்ற சொல்லை கூடுதலாகவும் பயன்படுத்துகிறேன். திராவிடம் என்ற சொல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மக்களை உள்ளடக்கியதாக நான் கருதவில்லை. அவர்கள் யாரும் தங்களை திராவிடன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. திராவிடன் என்ற சொல்லே பார்ப்பனீய கருத்து நிலைக்கு எதிரான ஒரு போர்க் குணம் கொண்ட சொல்லாக இருக்கிறது. திராவிடம் தான் இந்த மண்ணில் பார்ப்பனீயத்தை எதிர்த்து இந்த நூற்றாண்டில் எழுந்த முதல் குரல் என்பது என் கருத்து.

சித்தர்களின் காலத்திலிருந்து அந்தப் பார்ப்பனீயர் எதிர்ப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தைத் தேடிப் பார்த்தால் கூட இருக்கிறது. அது ஒரு இயக்கமாகக் கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. வள்ளலாரிடமும் அடிகளாரிடமும் பார்ப்பன எதிர்ப்பு இருந்த போதிலும் கூட அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கட்டமைத்த பெருமை திராவிடத்திற்கு உண்டு. அதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் உருவாகி விட்டாலும் கால்டுவெல் காலத்திலிருந்து ஒரு பாரம்பரியமான வரலாற்று தொடர்ச்சியிருந்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பை கட்டமைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. எனவே திராவிடம் என்ற சொல் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைச் சொல்லாகவே பயன்படுத்த வேண்டும்.

இராகவ அய்யங்கார், கோபால அய்யர் போன்ற தமிழறிஞர்களின் பங்கை என்னவென்று சொல்வீர்கள்?

தமிழ்மொழியின் முன்னேற்றத்தில், இனத்தின் முன்னேற்றத்தில் கூட பார்ப்பனர்களின் பங்கு இருப்பதை மறுக்கவில்லை. எப்போதும் விதியை வைத்துத்தான் நாம் பேச முடியுமே தவிர விதி விலக்கை வைத்து அல்ல. எத்தனை பார்ப்பன அறிஞர்கள் அப்படிப் பாடுபட்டார்கள்? திரும்பத் திரும்ப உ.வே. சாமிநாதய்யரைப் பற்றிச் சொல்வார்கள். உ.வே.சாவுக்கு முன்பு பதிப்புத்துறையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த நாவலரும், சி.வை. தாமோதரம் பிள்ளையும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். அந்த வரலாறு மெதுவாக மறைக்கப்படுகிறது. உ.வே.சா. பதிப்பாசிரியர் என்பது உண்மைதான். ஆனால் இறுதி வரையில் அவர் பார்ப்பனீயக் கருத்துக்களை விடாதவராகவே இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களையும் தாண்டி இலக்கியத்துறையில் மட்டுமில்லாமல் பகுத்தறிவுத் துறையில் A.S.K. அய்யங்கார் போன்றவர்கள் இருந்து இருக்கிறார்கள். விதிவிலக்குகளை வைத்துக் கொண்டு விதிகளை வகுக்க முடியாது.

வேத மொழி சமஸ்கிருதம்தான் என்று கருதுவதோடு இன்னமும் அவர்கள் தங்களுடைய தாய்மொழி சமஸ்கிருதம் என்கிற மனோ நிலையிலிருந்து விடுபடவில்லை.

ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்தால் பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுவார்கள் என்று பெரியார் எச்சரிக்கை செய்து இருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் தமிழ்க் கல்வி வலியுறுத்தப்படுகிறதே...
அன்றைய பெரியாரின் எச்சரிக்கை என்பது மிகுந்த கவனத்துக்குரியது. பெரியார் தமிழைப் பற்றிக் கவலைப்பட்டதை காட்டிலும், தமிழனைப் பற்றிக் கூடுதலாகக் கவலைப்பட்டார். தமிழனின் முன்னேற்றத்திற்குத் தடையாக தமிழாகவே இருந்தாலும் பெரியார் அதனை எதிர்த்து இருக்கிறார். எனவே தமிழன் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில்தான் அவர் ஆங்கிலம் படிபடி என்று திரும்பத் திரும்ப சொன்னார். அவருடைய பழக்கம் ‘ஓங்கிச் சொல்லுதல்’. கொஞ்சம் ஓங்கிச் சொன்னால்தான் பத்துக்கு நாலு பழுதில்லாமல் போகும் என்று கருதினார்.

எனக்குத் தமிழ் மீது எந்த விரோதமும் இல்லை. நான் தமிழில்தான் பேசுகிறேன். தமிழில்தான் எழுதுகிறேன். எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். நான் தமிழ் மக்களுக்காகத்தான் பேசுகிறேன். அதை அறிவியல் மொழி ஆக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும் சொல்கிறேனே தவிர எனக்கு வேற ஒன்றும் கோபம் இல்லை என்று பெரியாரே எழுதி இருக்கிறார். ஆகையால் அன்றைக்கு அவர் சொன்ன அந்தச் சூழலில் நிச்சயமாக 60 களிலும் 70 களிலும் ஆங்கிலம் கற்காமல் தமிழர்கள் இருந்து இருந்தால் பார்ப்பனர்கள் மட்டுமே முன்னேறி இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. இன்றைக்குச் சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது.

இன்றைக்குக் கணிப்பொறி மொழி என்பது தமிழும் அல்ல. ஆங்கிலமும் அல்ல. எந்த மொழியும் அல்லாமல் தனி மொழியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே இன்றைக்கு நாம் பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கி இருக்கிறோம். ஆகையினால் ஆங்கிலம் படித்தால்தான் முன்னேற முடியும் என்ற நிலையிலிருந்து மாற்றமில்லை. ஆனால் ஆங்கிலத்தை புறக்கணித்து விடுகிற நிலைக்கு நாம் முன்னேறி விடவில்லை என்பதையும் ஏற்க வேண்டும்.

தமிழ்நாட்டில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில், நீதிமன்றங்களில், வழிபாட்டுத் தலங்களில், இசை அரங்குகளில் அனைத்தும் தமிழே இருக்க வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். அதே நேரத்தில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்றுக் கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறது.

தேசியம் என்பது கற்பிதமா?

தேசியம் என்பதே ஒரு கற்பிதம்தான் என்று தோழர் அ. மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த நூலில் கூட ஒரு இடத்தில் அது தேவையான கற்பிதம் தான் என்று கூறுகிறார். நீங்கள் கற்பிதம் என்று எடுத்துக் கொண்டால் குடும்பம் கூட கற்பிதம்தான். இயற்கையின் விளைபொருளல்ல. எந்த மனிதனும் குடும்பத்தினுடைய உள் அடக்கத்தோடு இயற்கையின் விளைபொருளாக உருவாக வில்லை. எந்தக் கற்பிதமும் இல்லாமல் இயற்கையாகவே இந்த உலகம் அமைய வேண்டும் என்றால் மீண்டும் குகைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் நேரும்.

கற்பிதங்கள் சில நேரங்களில் ஒழுங்கமைவுகளாகின்றன. புது ஒழுங்குக்காகச் சில தேவைகள் ஏற்படுகின்றன. அதிலும் மொழி எந்த விதத்திலும் கற்பிதம் அல்ல. அது இயற்கையின் விளை பொருள். எனவே மொழி சார்ந்த, மொழியின் அடிப்படையில் கட்டப்படுகிற ஒரு தேசியம் என்பது ஒரு ஒழுங்கமைவாகவும், தேவையாகவும் சரித்திரத்தில் சரியானதாகவும் இருக்கும்.

தேசியம் என்பது முதலாளித்துவ கருத்தின் வெளிப்பாடு என்கிற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. தமிழ்த் தேசிய சிந்தனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய இலக்கியங்களிலே இருக்கின்றன. ஆனால் பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகுதான் ஐரோப்பிய நாடுகளில் அப்படி ஒரு வடிவம் உருவானது. என் கருத்தில், குழந்தை எப்போதோ பிறந்து விட்டது, பெயர் வைப்பதற்கு 19 நூற்றாண்டுகள் ஆகி இருக்கலாம். ஆகையால் அது அப்படியே முதலாளித்துவத்தின் இறக்குமதி என்று நாம் கொள்ள வேண்டியதில்லை. இருந்தாலும் பிழை இல்லை. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு அந்தச் சிந்தனை வந்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்த எவ்வளவோ நல்ல விஷயங்களை நாம் பயன்படுத்தி இருக்கிறோம். தேசியம் என்பது அப்படிப்பட்ட நல்ல தேவையானவைகளில் ஒன்று.

தமிழ்த் தேசியம் என்பது....

தேசியங்களில் பல வகைகள் இருக்கின்றன. மதவழித் தேசியம், நிலவழித் தேசியம் மொழி வழித் தேசியம் எல்லா வழித்தேசியமும் உலகில் இருக்கின்றன. பாகிஸ்தான் மதவழி தேசியமாகத்தான் பிரிந்து போனது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் ஏன் பிரிந்து போனது என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் அங்கு மதவழி தேசியம் தோற்றது. எல்லோருக்கும் மதம் ஒன்றாக இருந்தாலும் உங்கள் மொழி வேறு. எங்கள் மொழிவேறு என்றுதான் முஜிபுர் ரகுமான் எழுந்தார். எனவே அங்கு மதவழித் தேசியத்தை மொழிவழித் தேசியம் வென்றது.

பொதுவாக நிலவழித் தேசியம்தான் சரி அல்லது மொழிவழித் தேசியம்தான் சரி என்று நான் குறிப்பிடவில்லை. மொழிவழித் தேசியம் தான் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது என்று நான் கருதினாலும் ஒரு மொழிக்கு ஒரு நாடு என்று ஆதித்தனார் சொன்னதைப் போல உலகத்தை எளிதாக வரையறுத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு மதத்துக்கு ஒரு நாடு என்றால் பத்து நாடுகள் தாம் இருக்க முடியும். நிலத் தொடர்ச்சியை ஒட்டி நாடுகள் பிரிக்கப்படால் ஐந்து அல்லது ஏழு நாடுகள்தான் பிரிக்க முடியும். மொழிக்கு ஒரு நாடு என்றால் குறைந்தபட்சம் ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாகும். ஆயிரத்துக்கு மேற்பட்ட நாடுகள் உருவாவதில் நமக்கு மறுப்பு இல்லை. அதற்கான காலம் தொலைவில் இருக்கிறது.

ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.

தமிழ்த் தேசியம் எந்த மாதிரி கட்டமைக்கப்பட வேண்டும்?

ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படும்போது அங்குச் சாதி செத்துப் போகும். வர்க்க அடிப்படையிலும், பால் அடிப்படையிலும், சமத்துவமும், சாதி அற்ற சமூகமான ஒரு தமிழ்த் தேசியமே நாம் விரும்புகிற கட்டமைப்பு.
இந்திய தேசியம் என்பது இந்துத்துவ தேசியம் என்ற கருத்து உண்டு. தமிழ்த் தேசியத்திற்கு எதை முன் மாதிரியாக வைத்துக் கொள்கிறீர்கள்....
இந்தி தேசிய இனம்தான் நம்மை ஒடுக்குகிறது என்கிற கருத்து இருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தேசியம் இனம் ஒடுக்கும் இனமாகவும், தமிழ் இனம் ஒடுக்கப்படுகிற இனமாகவும் இலங்கையில் இருப்பதைப் போல இங்கே இல்லை. இங்கே கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை structural oppression இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். எனவே தமிழ்த் தேசிய விடுதலை என்பது இந்துத்துவ பார்ப்பனீயத்திற்கு எதிரான ஒரு இலக்கைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

தமிழ்ச் சமூகம் சாதிய சமூகமாக பிரிந்து கிடக்கிறது. சாதியை எதிர்க்காமல் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க முடியாது. எனவே முதல் பகை சாதியியம். இன்னொரு பகை ஆணாதிக்கம். இப்பின்புலத்தில் இரண்டு இலக்குகள் உள்ளன. ஒன்று இந்திய இந்துத்துவ தேசியம். இன்னொன்று விரைந்து வளர்ந்து கொண்டிருக்கிற உலகமயமாக்கல். உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் போன்றவை தேசிய இனங்களை அழிக்க புறப்பட்டு இருக்கிற எதிர் பகைகள்.
இந்திய இந்துத்துவ தேசியத்தையும் உலக மயமாக்கலையும் எதிர்க்க வேண்டியது தமிழ் தேசியத்தின் அடிப்படை. இவைகளை எதிர்த்துக் கட்டமைக்கப்பட இருக்கிற தமிழ்த்தேசியம் எதனையும் முன் மாதிரியாகக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதல்ல. உலகில் பல தேசியங்கள் சரியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. நம்மைப் பொறுத்தவரை சாதிகளற்ற, பால்வேறுபாடு இல்லாத, வர்க்க வேறுபாடு இல்லாத உலகமயமாக்கலிருந்த விடுபட்டு நிற்கிற ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தில் வழிபாடு, சமயம் போன்றவைகள் இருக்குமா?

சமயம் வழிபாடு போன்றவைகள் தனிமனித நம்பிக்கைகளையும், தனி மனித அனுபவங்களையும், தனி மனித உரிமைகளையும் சார்ந்தவை. ஒரு அரசு அதில் தலையிட வேண்டியதில்லை. ஒரு அரசுக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களாகவோ, கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. அது அவரவர் தனிப்பட்ட விஷயம். லெனின் சொன்தைப் போல it is a private affair. ஆனால் எந்த விதத்திலும், எந்த மதத்திற்கும் அரசு ஊக்கமளிக்க வேண்டியதில்லை. எல்லா மதத்திற்கும் சார்பாக ஒரு அரசு இருக்கிறது என்பதுதான் secular என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த மதத்தையும் சாராமல் இருப்பது என்பதே சரி. எல்லாருக்கும் பொதுவானது என்பது எல்லோருக்கும் ஊக்கமளிப்பது ஆகும். அது அரசினுடைய வேலை அல்ல.
எந்த மதத்தையும் சாராமல், எந்த மதத்திற்கும் சலுகை காட்டாமல் எந்த மதத்தினுடைய விழாவையும் அரசு அங்கீகரிக்காமல் அது அந்த அந்த மதத்தின் அந்த அந்த மனிதர்களின் தனிப்பட்டவை என்று தலையிடாமல் இருக்கலாமே தவிர அதை ஆதரிக்க முடியாது. எனவே சமயம் வழிபாடு ஆகியவைகளைத் தமிழ்த் தேசியம் ஊக்குவிக்காது. தலையிடாது.

அம்பேத்கர் மதத்துக்குள் சமரசத்தை தேடினார். அதுபோலவே தமிழ்த் தேசியம் இருக்கிறதே?

நான் குறிப்பிடுகிற தமிழ் தேசியம் சமரசமானது அல்ல. நான் எல்லா மதத்தையும் ஏற்றுக் கொண்டே மதத்துக்குள் சீர்திருத்தம் என்றோ வரவில்லை. தமிழ் தேசியம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது. தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடாது என்பதுதானே தவிர அது சமரசம் இல்லை. தனிப்பட்ட நபர்களின் உரிமையை போற்றுகிற செயல். அதைத் தவிர எந்த விதமான சமரசமான தமிழ்த் தேசியத்தையும் முன் வைக்கவில்லை.
அம்பேத்கர் சமரசம் செய்து கொண்டார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்துத்துவத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் அவர் எதிர்த்தார் என்பதுதான் உண்மை. அவர் பௌத்த மார்கத்திற்கு மாறியது சமரசம் அல்ல. பௌத்தம் என்பது மதம் அல்ல. மார்க்கம் என்பதை உணர்ந்தார். அது மனித வாழ்க்கைக்கு தேவையான அறிவு மார்க்கம் என்று கருதினார். உண்மையில் புத்தன் சொன்ன நெறிகள் அத்தகையானவைதான். பிறகு நாகார்ஜூனன் என்ற பார்ப்பனன் உள்ளே நுழைந்த பிறகு அது இந்து மயமாக்கப்பட்டதே தவிர, அம்பேத்கர் சமரசமற்ற முறையில் இந்துத்துவத்தை எதிர்த்தார் என்பதே உண்மை.

இந்தச் சமூக அமைப்பில் உள்ள குறைகளைப் போராடிப் பெற முடியும் என்கிற மாதிரிதான் பெரியாரின் செயல்பாடுகள் இருந்தன...

ஒரு நிலவுடைமைச் சமுதாயம் வீழ்ச்சியுறும்போது முதலாளித்துவ சமூகம் தானாகவே எழும் என்பதுதான் மார்க்சியக் கோட்பாடு. பெரியார் நிலவுடைமை சமூகத்தோடு அதன் கொள்கையோடு எந்தச் சமரசமும் செய்துக் கொள்ளவில்லை. மதம், சாதி எல்லாம் நிலவுடைமை சமூகத்தின் எச்சங்கள். ஆணாதிக்கம் உட்பட அனைத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்தார். முதலாளித்துவச் சிந்தனையோடு பெரியார் முழுமையாக முரண்பட்டார் என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் அறிவியல் என்பது முதலாளித்துவ சமூகத்தின் விளைபொருளாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நவீனச் சமூகத்திற்குத் தேவையான பலவற்றை முதலாளித்துவச் சமூகம் ஈன்றெடுத்திருக்கிறது. எனவே முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சமன்மைச் சமூகம் (சோசலிச சமூகம்) நோக்கிப் போகிறபோதுதான் முதலாளித்துவ சமூகத்தின் குறைபாடுகளிலிருந்து முற்றிலுமாக விடுபடமுடியுமே தவிர, அரைநிலவுடைமை, அரை முதலாளித்துவச் சமூகமாக இருக்கிற ஒரு காலக்கட்டத்தில் முதலாளித்துவச் சமூகத்தோடு ஒரு சாய்வு தொடக்கத்தில் ஏற்படத்தான் செய்யும். அதுதான் பெரியாரிடத்திலே இருந்தது. அது காலத்தின் தேவை. சரியானது. அது ஒரு பிழையான பார்வை அல்ல.

மொழி என்பது கருத்து பரிமாற்றத்திற்கான கருவி என்ற மார்க்சியர்கள் கருத்து பற்றி...

இன்றைக்கு மார்க்சியத் தோழர்களிடம் கூட இந்தக் கருத்துப் பற்றி மாற்றங்கள் ஓரளவுக்கு வந்திருக்கின்றன. முன்பு அவர்கள் சொன்னதைப் போல மொழி ஒரு கருவி என்று சொல்லவில்லை. மொழிப் பற்றிய சிந்தனையில் மார்க்சியத் தோழர்களிடையே கருத்துக்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இருப்பினும் இன்னமும் அப்படிச் சொல்லுகிற தோழர்கள் இருக்கவேச் செய்கிறார்கள். மொழி ஒரு கருவி என்றும் அது சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் இருக்கிறது என்றும் கருதுகிற தோழர்கள் இருக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரைக்கும் இரண்டு கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை. அதாவது சாதி, மொழி என்பவையெல்லாம் மேல் கட்டுமானத்தைச் சார்ந்தவை என்பது ஒரு காலக்கட்டத்தில் பார்வை. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அவை அடித்தளத்திலும், மேற்கட்டுமானத்திலும் இரண்டிலுமாக இயங்குகின்றன. ஆலமரத்தின் விழுதுகள் மேலிருந்து கீழிறங்கும். கீழே இறங்கின பிறகு அடிமரம் ஆடிப்போன பிறகு விழுதுகள் தான் தாங்கி நிற்கும். மொழி என்பது இன்றைக்கு அடிமரமாக இருந்து கொண்டு இருக்கிறது. மொழி அடித்தளத்திலே இயங்குகிறது. சாதி அடித்தளத்திலும் மேற்கட்டுமானத்திலும் இயங்குகிறது. எனவே மொழி மேற்கட்டுமானத்தை சார்ந்ததல்ல. அடித்தளத்தைச் சார்ந்தது. ஏன் அடித்தளத்தைச் சார்ந்தது என்றால் பொதுவாக உற்பத்தி கருவிகள், உற்பத்தி உறவுகளை வைத்துதான் மார்க்சிய தோழர்கள் சொல்வார்கள்.

குரங்கிலிருந்து மனிதனாக மாறியபொழுது உழைப்பு வகிக்கிற பாத்திரத்தில் மொழிக்கு இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஏங்கெல்ஸ் சொன்ன கருத்தில் நாம் மொழியையும் சேர்க்க வேண்டும். மொழி ஒரு கருவி என்பது மொழியைச் சிறுமைப்படுத்துகிற கருத்தாகவே தோன்றுகிறது. கருவி எப்பொழுதும் உடலின் புறத்தே இருப்பது. ஒரு முறை இன்குலாப் கூட கூறினார். அது கருவியாகவே இருக்கட்டும். முகம் சவரம் செய்கிற கருவியைக் கூட நாம் சுத்தமாக வைத்திருக்கிறோம். கருவி கூர்மையாக இருக்க வேண்டாமா என்று சொன்னார். அடிப்படையில் மொழி என்பது வெளியிலிருப்பது அல்ல. உங்கள் மூளையில் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைக்கப்பட்டதாகவே மொழி இருக்கிறது. மொழி செயற்கையன்று. இயற்கை. மொழியில்லாமல் ஒரு மனிதனால், ஒரு சமூகத்தால் வாழ முடியாது. சிந்தனை என்பது மொழியின் பாற்பட்டது. எனவே மூளை இயங்குகிற வரையில் மொழி இயங்கும். ஆகையால் மொழி என்பது உள்ளும், புறமுமாக இயங்கிக் கொண்டிருக்கிற மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு கூறு. மொழியை ஒரு கருவி என்று சொல்வது அதனைக் கொச்சைப் படுத்துவதாகும்.

இடது சாரி தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று பெரியாரைக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இடது சாரிகளான சிங்காரவேலர், ஜீவா ஆகியோர்கள் பெரியாரோடு முரண்பட்டனரே?

தலைவர்கள் பலர், அவரோடு இணைந்து பணியாற்றிய காலமும், பிரிந்து போன காலமும் உண்டு. அவர்களுக்குள் குறிப்பிடத்தகுந்தவர்கள் சிங்காரவேலரும் ஜீவாவும். பெரியாரின் சுயமரியாதை சமதர்ம திட்டத்தினுடைய சிற்பிகள், சிங்காரவேலரும், ஜீவாவும். சுயமரியாதை வரலாற்றில் சிங்காரவேலருக்கு ஓரிடம் உண்டு. அவர்கள் பிரிந்து போனது ஒரே ஒரு கட்டத்தில்தான். 1932-ல் சோவியத் யூனியனுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளைப் பெரியார் முன் எடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் கொண்டு வந்ததும், மே தினத்தைக் கொண்டாடச் சொன்னதும், பிள்ளைகளுக்கு லெனின் ஸ்டாலின் என்று பெயர் வைக்கச் சொன்னதும் பெரியார்தான்.
1936க்கு பிறகு சர்.ஏ.டி. பன்னீர் செல்வத்தின் அறிவுரைப்படி ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டாம் என்கிற கணக்கில் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிங்காரவேலர் ஜீவா போன்றவர்கள் வெளியேறினார்கள் என்று படித்து இருக்கிறேன்.

அன்றைய முதன்மையான தேவையாக சம உரிமையை, பொது உரிமையைக் கருதுகிறார் பெரியார். ஆனால், சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் பொதுவுடமையைக் கருதுகிறார்கள். இது பற்றிய விவாதம் நீண்ட நெடிய விவாதமாக நடந்து கொண்டே இருக்கிறது. எனினும் பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னாரே தவிர, பொதுவுடமைக் கொள்கைகளை இறுதி வரை எதிர்க்கவில்லை. இறுதி வரை பெரியார் பொதுவுடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவே இருந்ததைப் பார்க்க முடிகிறது. 1948, 1949 ஆண்டுகளில் பொதுவுடமைத் தோழர்கள் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் மிகக் கொடுமையாக ஒடுக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம்தான். பெரியாருக்கு சிறையிலிருந்து வெளிவந்த எம். கலியாணசுந்தரமே இது குறித்து நீண்ட கடிதத்தை எழுதி இருக்கிறார்.

நீங்கள் செய்த உதவியைப் போல யாரும் செய்ததில்லை என்று பெரியாருக்கு எழுதி இருக்கிறார். பல தோழர்களுக்கு மறைமுகமாகத் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் திராவிடர் கழகத்தாரும் திராவிட இயக்கப் பற்றாளர்களும்தான். தோழர் ஜீவாவே நாகர்கோவிலில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டில்தான் தலைமறைவாக இருந்தார் என்பது பின்னாளில் அறியப்பட்ட செய்தி. அதே போல் சிங்காரவேலரும், ஜீவாவும் அவரிடமிருந்து பிரிந்து போனார்களே தவிர சுயமரியாதைக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. எதற்கு முன்னுரிமை என்பதிலேதான் கருத்து வேறுபாடு இருந்தது.

உங்களுடைய வாழ்க்கை போராட்டம், சிறை என்றே இருக்கிறது. உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பலன் கிடைத்து இருக்கிறதா?

என்னுடைய பொதுவாழ்க்கை போராட்டமும் சிறையுமாக இருந்தது என்பது மிகையான கூற்றுதான். ஒப்பிட்ட அளவில் நாம் இந்த சமூகத்திற்கு செய்திருக்கிற செயல்கள் குறைவானவை என்பது தன்னடக்கமான சொற்கள் அல்ல. இயல்பானவை. யதார்த்தம் அதுதான். ஆனாலும் கூட உழைப்பிற்கான பலன் இந்தச் சமூகத்தில் விளைந்திருக்கிறதா என்ற வினா சரியானது. ஆனால் கூட்டி கழித்து கணக்குப் பார்க்கிற இடத்திற்கு இன்னமும் நாம் வந்து விடவில்லை என்றே எனக்கு படுகிறது. சரியாய் சொல்ல வேண்டும் என்றால் முன்னேற்றமே இல்லை என்று சொல்லி விட முடியாது. நான் குறிப்பிடுவது நம்முடைய உழைப்பிற்கு ஏற்ற விளைபயன் இல்லை என்பதுதான்.
எந்த ஒரு தனி மனிதனுடைய உழைப்பும் குறிப்பிடத்தக்கதல்ல. தமிழ்த் தேசிய இயக்கங்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் இது வரை ஆற்றி இருக்கிற பணிக்கு ஈடாக சமூகத்தில் முன்னேற்றங்கள் விளைந்து விட்டன என்று கூறமுடியாது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும் சரியான பார்வை இல்லை. நாங்கள் செய்திருக்கும் செயல்கள் ஓரளவுக்குச் சரியானதுதான் என்றாலும் கூடுதல் அர்ப்பணிப்பு தேவையாக இருக்கிறது. நம்மிடம் தான் குறைகள் இருக்கின்றன. மக்களிடம் இல்லை.

Friday, December 29, 2006

"நான் தி.மு.க ஆதரவாளன் தான்"

"நான் தி.மு.க ஆதரவாளன் தான்" Print E-mail
சுப.வீரபாண்டியன் நேர்காணல்

தமிழகத்தில் இயங்கிவரும் தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் ஒருசிலத் தமிழ்த்தேசியவாதிகளில் சுப.வீரபாண்டியனும் ஒருவர். பேராசியராகக் கல்லூரியில் பணியாற்றியபோதே விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டவர். சென்ற ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர். பகத்சிங்கும் இந்திய அரசியலும், பெரியாரின் இடதுசாரித்தமிழ்த்தேசியம் ஆகியவை இவரது முக்கியமான நூல்கள் இனி, நந்தன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய சுபவீ தமிழ் தமிழர் இயக்கம், தமிழர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் ஆகிய இயக்கங்களிலும் களமாற்றியவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். அவரை நமது தமிழ்மணப்பூங்காவிற்காகச் சந்தித்தோம்.

ஆண்டன்பாலசிங்கத்தின் மறைவால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தொய்வு ஏற்படுமா?

ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவு உண்மையிலேயே ஈடுசெய்யமுடியாத இழப்பு. அது புலிகள் அமைப்புக்கு மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழ் மகக்ளுக்கான இழப்பு.
ஒரு போராட்ட இயக்கத்திற்கு ராணுவத்தளம் மட்டும் போதாது, அரசியல் தளமும் அவசியம். அத்தகைய தளத்தை அமைத்துத் தந்தவர் ஆண்டன் பாலசிங்கம்.
ஆனாலும் பாலசிங்கத்தின் மறைவால் விடுதலைப்போராட்டம் பின்னடைவைச் சந்திக்காது என்றே கருதுகிறேன். தொடக்ககாலமாக இருந்தால் ஒருவேளை அத்தகைய பின்னடவைச் சந்தித்திருக்கக் கூடும். ஏனென்றால் உலகநாடுகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியவர் பாலசிங்கம். அதனால் அவ்வாறு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் இப்போது உலகமெங்கும் புலிகள் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். உலக அரங்கில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவாகியிருக்கிறார்கள். எனவே விடுதலைப்போராட்டத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பே இல்லை.

முல்லைப்பெரியாறுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில், உலக அளவில் நதிநீர்ப்பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அவைகள் நதிநீர்த்தாவாச் சட்டத்திற்குட்பட்டுத் தீர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இங்கு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கூட போதுமான தீர்வு ஏற்படவில்லை. மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ நம் பக்கமுள்ள நீதியை உறுதி செய்யத் தயாராக இல்லை.

அண்டை மாநிலத்தோடு நாம் முரண்படமுடியாதுதான். ஆனால் இத்தகைய போக்குகள் தொடர்ந்தால் அநீதிக்கு எதிராக தமிழகமே திரண்டு குரல் கொடுக்கவேண்டி நேரிடும். காவிரிப்பிரச்சினையை விட முல்லைப் பெரியாறு பிரச்சினையில் வேறுசில தீர்வுகள் இருக்கின்றன. இங்கிருந்து கேரளத்திற்குச் செல்லும் உணவுப்பொருட்களைத் தடுத்தாலே கேரளம் அடிபணியும். ஆனால் அத்தகைய முடிவுக்கு நம்மைக் கேரளம் தள்ளிவிடக்கூடாது.

இப்போது நடக்கும் பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றால் நீதிமன்றத்தைத்தான் அணுகவேண்டும். நீதிமன்றம் நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதி வழங்கினால்தான் இந்தியா என்பது ஒரே நாடு என்ற எண்ணம் நமக்குத் தோன்றும்.

ராஜிவ்படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 26 தமிழர்களுக்காக தமிழ்த்தேசிய இயக்கங்கள் மரணதண்டனை ஒழிப்பு இயக்கம் நடத்தின. ஆனால் அதுபோல அப்சல் போன்றவர்கள் பாதிக்கப்படும்போது நடத்தவில்லையே?
அது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இப்போது அப்சலுக்காக குரல் கொடுக்கும் இஸ்லாமிய அமைப்புகளும் கூட அப்போது ராஜிவ் கொலைக்குற்றவாளிகளுக்காக குரல் கொடுக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் இரண்டு பிரச்சினைகளுக்குமே குரல் கொடுக்கவேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு. த.மு.மு.க நடத்திய கருத்தரங்கில் அப்சலுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்து ஒருமணிநேரத்திற்குமேல் பேசினேன். அது தமிழன் தொலைக்காட்சியில்கூட ஒளிபரப்பானது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரை அப்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையைத் தான் எதிர்க்கிறார்களே தவிர ஒட்டுமொத்த தூக்குத்தண்டனையை அல்ல. ஆனால் அவர்களும் ஒட்டுமொத்தமாக மரணதண்டனையை எதிர்க்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

இப்போது நீங்கள் ஆரம்பித்திருக்கும் இயக்கம் பற்றிச் சொல்லுங்களேன்..
திராவிட இயக்கங்கள் என்பவை காலத்தின் தேவை. ஆனால் இப்போது தமிழ்த்தேசிய அமைப்புகளிலும், தலித் அமைப்புகளிலும் ஒருசாரார் திராவிட இயக்கம் தேவையில்லையென்றும், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இது கிளைமரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. திராவிட இயக்கங்களே எல்லாம் செய்துவிட்டன, வேறு இயக்கங்கள் தேவையில்லை என்று நான் கருதவில்லை. ஆனால் திராவிட இயக்கம்தான் அடித்தளம். தமிழின மேம்பாடு என்பது அதன் மேல்மட்டத்தின் மீது எழுப்பப்படவேண்டியது. திராவிடம் என்பது வெறுமனே மொழி சார்ந்ததோ, நிலம்சார்ந்ததோ மட்டுமில்லை, அது சாதி ஒழிப்பிற்கான, பார்ப்பன எதிர்ப்பிற்கான அரசியல் குறியீடு.

தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.
எங்கள் அமைப்புக்கு மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.

1. தமிழின, தமிழ் மொழி மேம்பாடு
2. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை
3. உலகத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குக் குரல்
கொடுப்பது.


சனவரி 22 அன்று திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் தொடக்கவிழா சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. பேராசிரியர் அன்பழகன் கலந்துகொள்கிறார்.

தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி, நீங்கள் தி.மு.கவின் ஆதரவாளராக மாறிவிட்டீர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறதே..?
(சிரிக்கிறார்). ஆமாம். நான் எதையும் வெளிப்படையாகச் செய்பவன். மறைத்துப் பழகியவனில்லை. நான் தி.மு.க ஆதரவாளன் தான். இன்னும் சொல்லப்போனால் கலைஞர் ஆதரவாளன் தான். திமுகவையும் கலைஞரையும் கூட நான் ஒருகாலத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் இப்போது திமுக சரியான அமைப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. திமுகவில் குறைபாடுகளே இல்லையென்று சொல்லமுடியாது. கோட்பாடு இல்லாமல் நிறுவனமில்லை. ஆனால் நிறுவனமாகும்போது சில பிரச்சினைகள் வரும்.

அதேபோல திமுகவிற்கும் சில சறுக்கல்கள் வந்திருக்கின்றன. நாளை எங்கள் இயக்கத்திற்கும் கூட அப்படிப்பட்ட நிலை வரலாம். ஆனால் இப்போதுள்ள கட்சிகளில் திமுக சிறந்ததாக எனக்குத் தோன்றுவதால் நான் தி.மு.கவை ஆதரிக்கிறேன்.
சந்திப்பு : சுகுணாதிவாகர்

Wednesday, March 22, 2006

தம்பி பட விமர்சனம்

தம்பி பட விமர்சனம்

விமர்சகர் சுப.வீ.



மூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறவன் துறவி. சமூகத்திற்காகத் தன்னை எரித்துக்கொள்கிறவன் புரட்சியாளன். தம்பி இரண்டாவது வகை.

தம்பி பொழைச்சிட்டான் என்று முடிகிறது படம். தம்பி ஜெயிச்சிட்டான் என்று நினைக்கிறது மனம்.

முரட்டுத்தனத்திற்கு வீரம் என்று முடிசூட்டி இருக்கும் தேசத்தில், எது உண்மையான வீரம் என்பதை இப்படம் விளக்குகிறது. 'இன்னொருத்தன் உயிரை எடுக்கிறதில்லே வீரம். மத்தவங்களைக் காப்பாத்துறதுக்காகத் தன் உயிரையும் கொடுக்கிறதுதான் வீரம்.'

பட்டாசு கொளுத்திப் போட்டதைப் போல, படம் முழுவதும் உரையாடல் வெடி, ஆனால் தம்பி ஏற்படுத்தும் உணர்வோ ஒரு தாயின் மடி. இம்முரண் தரும் அழகில்தான், இப்படம் இணையற்ற வெற்றியைப் பெற்றுள்ளது.

கொள்கைப் படங்கள் என்றாலே வறட்டுத்தனமாய்த்தான் இருக்கும் என்ற வசை இப்படத்தினால் ஒழிந்தது. பாதி இருட்டில் படம் எடுப்பதும், வாய்க்குள்ளேயே வசனம் பேச வைப்பதும்தான் தேர்ந்த இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு என்னும் மாயையும் இப்படத்தினால் நொறுங்கியது. வெளிச்சமாகவும், இரைச்சலாகவும்தான் இருக்கிறது படம்.

இந்த வெளிச்சம் இருட்டில் வாழும் மக்களுக்குத் தேவையான வெளிச்சம்.

இந்த இரைச்சல் ஊமைச் சனங்கள் இனியேனும் ஓங்கி ஒலிக்க வேண்டிய இரைச்சல்.

ஓர் உணவகத்தில், கல்லூரி மாணவி களிடம் கயவர்கள் சிலர் கண்ணியமற்று நடந்து கொள்ள, அகிம்சையைப் போதிக்கும் அந்தக் கதாநாயகியின் முன்னால் போய் நின்று, இப்ப நான் என்ன செய்ய, இப்ப நான் என்ன செய்ய? என்று தம்பி இரைச்சலிட, 'அடி, அவனுங்கள அடி' என்று படம் பார்க்கும் மக்கள் திருப்பி இரைகின்றனரே, அங்கே இருக்கிறது படத்தின் வெற்றி.

கதாநாயகனின் காப்பகத்தில் தையல் வேலை செய்யும் பெண் ஒருத்தியிடம், உங்க அப்பா என்ன செய்யிறார்? என்று கதாநாயகி கேட்க, ஜெயில்ல இருக்காரு என்கிறாள் அவள். அடுத்த பெண்ணிடம் அதே கேள்வியைக் கேட்க, எங்க அப்பாவைக் கொன்னுட்டுதான், அவ அப்பா ஜெயில்ல இருக்கிறார் என்று விடை வருகிறது.

ல்லப்பட்டவனின் குடும்பம் மட்டுமன்று, கொலை செய்கிறவனின் குடும்ப¬ம் நாதியற்று நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும் என்பதை உணர்த்தும் இக்காட்சியைக் கொண்டே, இன்னொரு படத்திற்குத் திரைக்கதை எழுதலாம் போல் உள்ளது.

இரண்டு குடும்பங்களையும் காப்பாற்றும் தம்பி, மனித நேயத்தின் மற்றோர் உருவமாய் உயர்ந்து நிற்கிறான்.

பழிக்குப் பழி வாங்குவதைத்தான் நம் படங்கள் இதுவரை சொல்லி வந்துள்ளன. பழிக்குப் பழி வாங்குவதே வேலையா இருந்தா, பாதி உலகம் சுடுகாடாப் போயிடுமே என்னும் கவலையை இப்படம்தான் வெளிப்படுத்தியுள்ளது.

'எங்கப்பாவை நீ கொன்னுட்டே இன்னிக்கு நான் ஒன்னை வெட்டுவேன். நாளைக்கு ஒன் புள்ளை, கத்தியோட என்னைத் தேடி அலைவான். அப்புறம் என் மவன் அவனைத் துப்பாக்கியோட துரத்துவான். வேணாம்.... இந்த வேலையே வேணாம். யாராவது ஒருத்தர் எங்கயாவது நிறுத்தனும். இங்க... இப்போ... நான் நிறுத்திக்குறேன்' என்று வசனம் பேசிய கதாநாயகனை இதுவரை நாம் தமிழ்ப் படத்தில் பார்த்ததில்லை. இப்போதும் பார்க்காதவர்கள், தம்பியைப் போய்ப் பாருங்கள்.

சீமான் என்றொரு சிந்தனையாளனும், மாதவன் என்றொரு மாபெரும் நடிகனும், இப்படத்தைச் செதுக்கியுள்ள சிற்பிகளான உள்ளனர்.

ஒளிப்பதிவாளருக்கும் ஒரு பெரும் பங்கு உள்ளது. பாடல் வரிகளைத் தந்த முத்துக்குமார் விரல்களுக்கு மோதிரம் சூட்டலாம்.

சே குவேரா, பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் படங்கள் தம்பியின் வீட்டில்.

காரல்மார்க்ஸ், ஜென்னி, பகத்சிங் பற்றிய உரையாடல்கள் தம்பியின் பேச்சில்.

இப்படியொரு துணிச்சல், மார்க்சின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இயக்குனர் சீமானுக்குத்தான் வரும்.

அந்தத் துணிச்சலின் இன்னொரு வெளிப்பாடுதான், பெரியாருக்கும், பிரபாகரனுக்கும் இப்படத்தை அர்ப்பணிக்கிறேன் என்று, ஒரு வார இதழுக்கு அவர் வழங்கியிருக்கும் நேர்காணல்!

Friday, March 03, 2006

என் நாட்குறிப்பிலிருந்து...சுபவீ

என் நாட்குறிப்பிலிருந்து...

சுப.வீரபாண்டியன்


அந்த அதிகாலைப் பயணம் மிக இனிமையாகத்தான் தொடங்கியது.அதற்கு முந்தைய நாள் பொங்கல் நாள். ஆண்டுக்கொரு முறை அனைவரும் இணைந்து கொண்டாடுகிற வீட்டின் ஒரே விழா. பாலும் மகிழ்ச்சியும் சேர்ந்து பொங்கின. கரும்பும், பேத்தி ஓவியாவின் குறும்பும் சேர்ந்தே இனித்தன. சர்க்கரைப் பொங்கலின் சுவையும், அதை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுகிற நிலையும் நெஞ்சுக்கு நிறைவான மகிழ்வைத் தந்தன. அன்றிரவு என் மூத்த அண்ணன் முத்துராமன் வீட்டில் மொத்தக் குடும்பமும் ஒன்று கூடியபோது, சின்னத் திருவிழாவுக்கான முன்னோட்டம் அங்கே இருந்தது.

பெரியவர்கள் தொடங்கி, பிஞ்சுகள் வரையில் கேலியும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக இருந்த அந்தத் தருணங்களில்தான், வாழ்க்கை மிச்சப்பட்டுக்கிடப்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது. அன்றைய நாள் முழுவதும் ஒரு மகிழ்ச்சியான நாள் என்று சொல்ல வேண்டும். அதனுடைய தொடர்ச்சியாகவே அடுத்த நாள் காலைப் பொழுதும் இருந்தது.

மாட்டுப் பொங்கலன்று வீடுகளில் மாடுகள் இல்லையென்றாலும், பொங்கல் வைக்கின்ற மரபு நம் எல்லோருடைய இல்லங்களிலும் இருக்கிறது. ஆனாலும், அன்றைக்கு மாட்டுப் பொங்கலில் வீட்டில் இருக்க முடியாமல், நெய்வேலி நண்பர்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி, அவர்களுடன் சேர்ந்து அன்றைய திருநாளைக் கொண்டாடுவதற்காக நெய்வேலி புறப்பட்டோம். வாய்ப்பூட்டுச் சட்டம் இருக்கின்ற காரணத்தால், நான் பேச முடியாது என்கிற நிலையிலும், "எங்களோடு நீங்கள் இருக்க வேண்டும், தமிழர் திருநாள் விழாவிலே கலந்து கொள்ள வேண்டும். பரிசுகளை நீங்கள் வழங்க வேண்டும்' என்று நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நெய்வேலிக்கு அதிகாலையிலே நான் கிளம்பினேன்.

அன்று பேருரையாற்றுவதற்குப் பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் அவர்களை நண்பர்கள் அழைத்திருந்தார்கள். நானும் தோழர் பத்மாவதி அவர்களும் அவருடைய மகனும், மருமகளும் ஒரு மகிழ்வுந்தில் நெய்வேலிக்குப் புறப்பட்டுச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். அதன்படி, அன்று அதிகாலை 5.30 மணிக்கு, என் மகன் பாரதிதாசன் தன்னுடைய வண்டியிலே என்னைக் கோடம்பாக்கத்தில் இருக்கிற மீனாட்சி கல்லூரியிலே இறக்கிவிட்டார். 5 நிமிடத்திற்குள்ளாகவே, அவர்களும் வந்து சேர எங்களின் பயணம் தொடங்கியது.

நான் முதலில் குறிப்பிட்டதைப் போல, அந்த அதிகாலைப் பயணம் மிகவும் இனிமையாகத்தான் இருந்தது. பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் மகன் மருத்துவர் கோபிநாத் தன் மகிழ்வுந்தை ஒட்ட, அவருக்கு அருகில் முன் இருக்கையில் நான் அமர்ந்தேன். பின் இருக்கைகளில் பேராசிரியரும் அவருடைய மருமகளும் இருந்தார்கள்.

மருத்துவர் கோபியை, 2 மாதங்களுக்கு முன் நடந்த அவரது திருமணத்தில்தான் நான் முதலில் சந்தித்தேன். அதிகப் பழக்கமில்லை என்றாலும், நெருங்கிப் பழகியவர்களைப் போல அன்றைக்கு நிறைய பேசியபடி பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். பத்மாவதியின் கணவர் விவேகானந்தனும் நானும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலையில் எறத்தாழ சமகாலங்களில் படித்தவர்கள். அதனால், பழைய நினைவுகளும் இன்றைய நிகழ்வுகளுமாய்ப் பேச்சுகள் நடந்துகொண்டிருந்தன.

நெய்வேலியில் மதியம்தான் பொங்கல் விழா. ஆனாலும், காலையிலேயே புறப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. கோபிநாத்தின் மனைவி, போகிற வழியில் கடலூருக்கு அருகே இருக்கிற ஒரு ஆஞ்ச நேயர் கோயிலுக்குப் போகவேண்டும் என ஆசைப்பட்டதாகவும், அதனால் பயணத்தை விரைவாகவே தொடக்கிவிடலாமா என்றும் பத்மாவதி அவர்கள் முதல்நாளே கேட்டார்கள்.

"அங்கிள் கோயிலுக்கு வருவாரா?'' என்று கோபி கேட்டார். "எனக்கும் ஆஞ்சநேயருக்கும் எந்தப் பகையுமில்லை. போகிற வழியில் அவர்களை அவரைப் பார்த்துவிட்டு வரட்டும். அப்படியே போகலாம்'' என்று நான் சொல்ல, கடலூர் கோயிலையும் அவர்கள் விருப்பப்படி பார்த்துவிட்டு, மதிய உணவுக்கு நெய்வேலி சென்று விடுவது எனத் திட்டமிட்டிருந்தோம்.

திருவான்மியூர் தாண்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் திரும்பிய பிறகு, அந்தப் பயணம் மேலும் இனிமையாக ஆனது. அந்தக் காலை நேரம்கடற்கரைக் காற்றுகதிவரன் தோற்றம் என்று எல்லாம் இதயத்துக்கு மிக இதமாக இருந்தன.

ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரியைத் தாண்டுகிற போது, "இதுதான் நான் படித்த, இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிற கல்லூரி'' என்று கோபியின் மனைவி மருத்துவர் சுனிதா சொன்னார். தான் மீனாட்சி பல் மருத்துவமனையில் பணியாற்றுவதாகக் கோபி கூறினார். பிறகு, பல் மருத்துவம் பற்றியும், பல் மருத்துவரான என் அருமை நண்பர் தாயப்பன் பற்றியும் பேச்சுகள் திரும்பின.

இவை பற்றித்தான் பேசினோம் என்று சொல்ல முடியாது. போகிற போக்கில் கண்ணில் பட்டவை பற்றிப் பேசினோம். நெஞ்சில் தோன்றியவைகள் பற்றிப் பேசினோம். பேச்சு சுகமாக இருந்தது. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தச் சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.

மாமல்லபுரம் தாண்டி, சிறிது நேரத்திற்குப் பிறகு, "கோபி... எங்கேயாவது வண்டியை நிறுத்துங்களேன். ஒரு தேநீர் குடித்துவிட்டுப் போகலாம்'' என்று சொன்னேன். தேநீர் குடிப்பதென்பது, வெறும் தேவைகளில் ஒன்று மட்டுமன்று, சில நேரங்களில் அது என் மனநிலையை எட்டியதாகவும் இருக்கும். மாலை நேரங்களில், நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளைகளில், பொதுக்கூட்டங்களில் நான் பேசுவதற்குச் சற்று முன்பாக, ஒரு தேநீர் குடித்துவிட்டால் நன்றாக இருக்கும் போல என்று எனக்குத் தோன்றும். என் மனநிலையை அறிந்து வைத்திருக்கிற அய்யா நெடுமாறன் அவர்கள், பொதுக்கூட்ட மேடைகளிலே இருக்கிறபோது, கூட்ட ஏற்பாட்டாளர்களை அழைத்து "எனக்குத் தேநீர் வேண்டாமென்பதால் நீங்கள் சுப.வீக்கும் தேநீர் கொடுக்காமல் விட்டுவிட்டால் பிறகு எங்களுக்கு ஒரு நல்ல பேச்சு கிடைக்காது'' என்று சொல்லுவார்கள். தேநீர் அருந்துவது, உற்சாகமான மனநிலையின் அடையாளமாகவும் எனக்குப் பல நேரங்களில் இருந்திருக்கிறது.

கூவத்தூர் என்று நினைக்கிறேன். ஒரு தேநீரகத்தில் கோபி, வண்டியை நிறுத்த நாங்கள் அனைவரும் இறங்கினோம். காலை நேரக் காற்று முகத்தை வருட, சூடான தேநீர் அருந்தி முடித்தபின் மீண்டும் வண்டிக்குள் வந்து அமர்ந்தபோது மணி, 7.30 இருக்கலாம். இன்னும் 15 அல்லது 20 நிமிடங்களில் ஒரு மிகப்பெரிய விபத்தை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை அப்போது எங்களில் யார் அறிந்திருக்கக் கூடும்?

எங்களின் மகிழ்வுந்து பரமன்கேணி என்ற திருப்பத்திற்கு வந்து சேர்ந்தபோது, (அந்த இடம், பரமன்கேணி என்பதைக்கூட பிறகுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம்) ஒரு குறுகலான வளைவில், திருப்ப முடியாமல் கோபி சிரமப்படுவதையும், இரண்டு சக்கரங்கள், நான் அமர்ந்திருந்த பக்கத்தில் மேலே தூக்குவதையும் உணர்ந்தேன்.

"கோபி... என்னாயிற்று... என்னாயிற்று''' என்று பதற்றத்தோடு கேட்ட அந்த நொடிகள்தான், நினைவில் இப்போதும் மீதம் இருக்கின்றன. அதன்பிறகு, என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை நானும் மற்றவர்களும் வெறும் ஊகமாகத்தான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். ஒன்றே ஒன்றை எங்களால் உணர முடிந்தது.

சாலையில் இருந்து சரிந்து, வலது பக்கத்திலிருந்த 5 அல்லது 6 அடி பள்ளத்தில் எங்கள் மகிழ்வுந்து உருண்டு கொண்டிருக்கிறது என்பதை மாத்திரம்தான் உணர்ந்தோம். காருக்குள்ளே இருந்த நாங்கள் மேலே போவதும், கீழே விழுவதுமாக சுழற்றி அடிக்கப்படுகிற போது, பெரும் கூக்குரல்களும் ஒன்றும் புரியாத ஒரு நிலையும்தான் இருந்தது. என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அப்போது எங்களில் யாராலும் உணரமுடியவில்லை.

எல்லாம் சில நொடிகளுக்குள் நடந்து முடிந்துவிட்டன. இறுதியாக, சேறும் சகதியும் முள்ளுமாக இருந்த இடத்தில் மகிழுந்து வந்து விழுந்தது. வண்டியினுடைய கண்ணாடிகள் எல்லாம் உடைந்திருந்தன. 4 பேரும் நினைவு தப்பாமல் இருந்தோம் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி. வண்டியைவிட்டு அவர்கள் 3 பேரும் கண்ணாடிச் சன்னலின் வழியே வெளியே வந்துவிட்டார்கள். எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

அங்கே கிடந்த முட்களில், தன் காலை மிதித்துக் கொண்டு, கோபி என் கைகளைப் பற்றி வெளியே இழுத்த காட்சி இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது. அடுத்த நாள், விஜயா மருத்துவமனையில் அவருடைய பாதங்களில் நூற்றுக்கணக்கான முட்களை அந்த மருத்துவர்கள் வெளியே எடுத்தார்கள் என்பதை அறிந்தபோது, எனக்காகக் காயப்பட்ட அந்தக் கால்களை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். வண்டியை விட்டு வெளியே வந்தபோது என் நெற்றியிலிருந்தும் இடது கையிலிருந்தும் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ஏறத்தாழ உடம்பு முழுவதும் பல பகுதிகளில் வலியாக இருந்தது.

அந்தச் சூழலில் எனக்குத்தான் கூடுதலாகக் காயம் பட்டிருக்கிறது என்பதாக உணர்ந்த அவர்கள் மூவரும் தங்களைப் பற்றிக்கூட எந்தக் கவலையும் படாமல், எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிட வேண்டும் என்றே பதறினார்கள். ஆனால், அந்தச் சாலையில் ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் கிராமமோ, மக்களோ இல்லை. நாங்கள் மட்டுமே, கவிழ்ந்து கிடக்கும் வண்டிக்கருகில் நின்று கொண்டிருக்கிறோம்.

அப்போது, எங்கோ மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் ஓடி வந்து தன் தோளில் கிடக்கிற துண்டை எடுத்து, இரத்தம் வழிகிற என் நெற்றியில் இறுக்கிக் கட்டுகிறார். அதற்கு ஒரு 5 நிமிடங்களுக்குப் பிறகு சென்னையை நோக்கி ஒரு மகிழுந்து வந்து கொண்டிருக்கிறது. கீழே இருந்தே நாங்கள் கைகாட்டுகிறோம். அவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்குகிறார்கள். ஒட்டுநரும் மற்றொருவரும் மட்டும்தான் இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த அவர்கள்தான் எங்கள் உயிர்களைக் காப்பாற்றினார்கள். கோபியும், அவரது மனைவியும் அங்கே நின்றுகொண்டு, என்னையும் பேராசிரியரையும் அந்த அம்பாசிடர் மகிழுந்தில் எற்றி அனுப்பி வைக்கிறார்கள்.

முதலில் எதாவது ஒரு மருத்துவரைப் பார்த்து முதலுதவி செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து 9 கிலோமீட்டர் தாண்டியிருக்கிற கூவத்தூரை வந்து அடைகிறோம். அங்கே மருத்துவர் முருகேசனைச் சந்திக்கிறோம். அவர்தான், மிகுந்த அன்புடன் எங்களுக்கு எல்லா முதலுதவிகளையும் செய்கிறார். அந்த கிராமத்து மக்கள் தாயினும் சாலப்பரிந்து எங்களிடம் அன்பு காட்டுகிறார்கள். அன்று அவர்கள் காட்டிய அன்புக்கும் அவர்கள் செய்த உதவிக்கும் என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம் நாங்கள்.

பிறகு அங்கிருந்து சென்னையை நோக்கி அந்த மகிழுந்துப் பயணம் தொடங்குகிறது. ஏறத்தாழ 80 கிலோ மீட்டர் கடந்து நாங்கள் சென்னைக்கு வரவேண்டும். வீட்டில் தகவல் அறிந்தால் மனைவியும் பிள்ளைகளும் பதறிப்போய் விடுவார்களே என்கிற அச்சத்தில் என் அண்ணனுக்கும் மருத்துவர் முத்தையா அவர்களுக்கும் மட்டும் செய்தியைத் தொலைபேசி மூலம் சொல்லிவிட்டு, கோடம்பாக்கத்திலே இருக்கிற பெஸ்ட் மருத்துவமனையை நோக்கி நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கிறோம்.

அதே கடற்கரைச் சாலை, அதே காலை நேரக் காற்று, அதே கதிரவன், எல்லாம் இருந்தன. அனால் எதையும் ரசிக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை. மகிழ்ச்சியோடும் சுவையான பேச்சுகளோடும் முதலில் நடந்த பயணம், அதே சாலையில் வலியோடும் வேதனையோடும், சொட்டும் இரத்தத்தோடும் திரும்பவும் நடந்துகொண்டிருக்கிறது.

பாதை ஒன்றுதான். சாலைகள் ஒன்றுதான். மனிதர்களும் அதே மனிதர்கள்தாம். ஆனால் மனநிலை முற்றிலும் வேறுவேறாக மாறிப்போயிற்று. முதல் 2 மணி நேரப் பயணமும் அடுத்து நடந்த 2 மணி நேரப் பயணமும் நேர் எதிர்மறைகளை, வாழ்க்கையின் இரண்டு பக்கங்களை எங்களுக்கு சுட்டிக்காட்டின. எத்தனை மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கை, ஒரு நொடியில் இப்படி வலியும் இரத்தமுமாய் மாறிப்போயிற்று என்பதை எங்களுக்கு உணர்த்திற்று. கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையிலான எலும்பு எனக்கு முறிந்து போய்விட்டது. பேராசிரியருக்கு விலா எலும்பிலே விரிசல், கோபிக்கு முதுகுத்தண்டில் கீழ் பகுதியிலே அடிபட்டுவிட்டது. இன்னும் அவர் படுத்தப் படுக்கையாய் உள்ளார். அவருடைய மனைவிக்கு எராளமான ஊமைக்காயங்கள். எல்லோரும் உயிர் பிழைத்து விட்டோம் என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி.

"கடவுள்தான் எங்களைக் காப்பாற்றியுள்ளார்'' என்று பலர் கூறுகின்றனர். ஒரு புன்னகையோடு அதனைக் கேட்டுக்கொள்கிறேன்.

"நாட்டுக்கு எங்கள் தேவையும், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் இன்னும் நிரம்ப உள்ளன. அதனால்தான் காலம் எங்களைக் காப்பாற்றியுள்ளது'' என்கின்றனர் நண்பர்கள் சிலர். இப்போதும் புன்னகைக்கிறேன். இரண்டுமே மூட நம்பிக்கைகள்தாம். ஆனாலும், உயிர் உள்ளவரை, நம்மால் முடிந்தவைகளை இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இரண்டாவது கூற்று என்னுள் தூண்டுகிறது.

விரைவில் நலம் பெறுவேன். மீண்டும் உங்களோடு இணைந்து செயல்படுவேன்.

Thursday, January 26, 2006

ஒகேனக்கல் மண்ணை இழக்க மாட்டோம்!- சுபவீ

ஒகேனக்கல் மண்ணை இழக்க மாட்டோம்!

சுப.வீரபாண்டியன்


காவிரி ஆற்றில் தமிழர்களுக்கு உள்ள உரிமையை எப்போதும் மறுத்துவரும் கர்நாடகம், இந்த ஆண்டு பெருமளவு தண்ணீரை அனுப்பி வைத்தற்குக் காரணம் அதன் பெருந்தன்மையோ, ஞாயத்தைப் புரிந்துகொண்ட நிலைப்பாடோ அல்ல.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் இவ்வாண்டு ஏராளமான மழை பெய்துவிட்ட காரணத்தால் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள வழியில்லாமல் இங்கே அனுப்பி உள்ளது. அதன் லம் அங்கே வெள்ளம் வராமல் தடுத்துக்கொள்வதே கர்நாடகத்தின் திட்டம்.

கிருஷ்ணசாகர் அணை என்பது மிகப்பெரிய அணை. எளிதில் அந்த அணை நிறைந்துவிடாது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நிறைந்துள்ளது. இந்த நிலையைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றி, அதற்குச் சற்று முன்பு மேகதாது அணை ஒன்றைக் கட்டி விட்டால், ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வருவதைத் தடுத்துவிடலாம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் ஒகேனக்கல் சிக்கலைப் புதிதாகக் கர்நாடகம் கையில் எடுக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை இப்படியொரு முயற்சியில் கர்நாடகம் இறங்கியது. அப்போது அங்கு குண்டுராவ் முதலமைச்சராக இருந்தார். ஒகேனக்கலிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மேகதாதுத் திட்டம் அமையும் என்றும், அதனை உடனடியாகத் தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

அப்போதிருந்த தமிழக அமைச்சரவையும், சட்டமன்றமும் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று அதனை எதிர்த்தன. தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அதன் விளைவாக அத்திட்டத்தை அன்று குண்டுராவ் கைவிட்டார். மீண்டும் இன்று கர்நாடகம் அதைக் கையில் எடுக்கிறது.

எந்த ஆவணங்களும் சான்றுகளும் இல்லாமல், ஒகேனக்கல் எங்களுக்கே சொந்தம் என்று கர்நாடகம் சொல்லுவது எவ்வளவு பெரிய மோசடி!. பொய்யை மெய்யாக்குவதற்கு கன்னட வெறியர்களின் இயக்கங்களும், கர்நாடக அரசும் மிக விரைவாக வேலை செய்கின்றன.

தங்கள் கொடியை நாட்டுவதற்கு செங்கற்களோடும், சீமெந்தோடும் ஒகேனக்கல் பகுதியில் அவர்கள் குவிந்திருக்கிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் அதுபற்றிக் கவலை ஏதுமின்றி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி உள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்தின் ஊடகங்களுக்குத் திரைப்பட நடிகையைப் பற்றிய செய்திதான் பெரிதாய் இருக்கிறதே தவிர, இருக்கும் மண்ணையும் இழக்கப்போகும் அவலம் பெரிதாய்ப் படவில்லை.

கர்நாடகம் ஒகேனக்கல் பகுதியைக் குறிவைப்பதற்கு வேறு சில பொருளியல் காரணங்களும் உள்ளன. ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன்னால் ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டம் என ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.

2581961 அன்று மத்திய நீர் மற்றும் மின்சக்திக் குழுவிற்கு, கர்நாடகத்தில் உள்ள சிம்சா மின்நிலையத்திற்குக் கீழே ஒகேனக்கல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றைத் தொடங்குவதற்கான திட்டத்தைத் தமிழக அரசு அனுப்பி வைத்தது.

அத்திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும். முதலாவது அணை சுந்தர்பெட்டா மலையில் அமையும். அந்த அணையின் உயரம் ஆற்றுப் படுகையில் இருந்து 449 அடி ஆகும். அந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 6 மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

இரண்டாவது அணை ஒகேனக்கலுக்கு அருகில் அமையும். இந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 50 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன்படைத்த 4 மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதோடு, இதனால் ஏற்படும் பயன் இரண்டு மாநிலங்களுக்கும் உரியதாக இருக்கும். நீரிலிருந்து இம்மின்சார உற்பத்தி அமைவதால், நிலக்கரி பெருமளவில் மிச்சமாகும்.

அத்திட்டத்தின்படி கட்டப்படும் இரண்டு அணைகளில் தேங்கும் நீரும், மின்சார உற்பத்திக்கு மட்டுமே அன்றி வேறு பாசன நோக்கம் எதற்கும் பயன்படக்கூடாது என்பதும் திட்டத்தின் ஒர் அங்கமாகும்.

இந்த அணைகள் கட்டப்படுவதால் வெள்ள அபாயம் தடுக்கப்படுகிறது. அதனைச் சுற்றுலாப் பகுதியாக ஆக்குவதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இத்தனை நன்மைகள் கொண்ட இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. அத்திட்டத்தை இப்போதாவது நாம் வலியுறுத்திப் பெற வேண்டும்.

நம்டைய அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் அரசியல் பொருளியல் லாபங்களை ஈட்டுவதற்கு கர்நாடகம் முயற்சி செய்கிறது.

இது பகற் கொள்ளையைக் காட்டிலும் கொடுமையானது. தமிழகமே திரண்டெழுந்து இச் சதியை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இத்தருணத்தில் ஓரணியில் திரண்டு நின்று போர்க்குரல் எழுப்ப வேண்டும்.

ஏற்கனவே தமிழகத்தின் வளமான நிலப்பகுதி பலவற்றை நாம் இழந்து நிற்கிறோம். இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோர் கவனமும் இதிலே திரும்பட்டும். இயக்கங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து கிளம்பட்டும்.

ஒகேனக்கல் என்பது தமிழக மண். ஒரு நாளும் அதை இழக்கச் சம்மதியோம்.

இறுதிப் புயல் வீசும்- சுபவீ

ஈழத்தில் எந்த நேரத்திலும் போர் மூளக்கூடும் என்பது இங்கு பலருக்கு ஒரு செய்தி மட்டுமே. வேறு பலருக்கு அது ஒரு செய்தி கூட இல்லை. ஆனால் ஈழ மக்களுக்கு அது வாழ்வின் ஓலம், உயிரின் வலி.

"18 வயது இளைஞர்கள்
பழகிக் கொண்டார்கள்
ஈழத்தில் களமாடவும்
இங்கு வாக்களிக்கவும்''

என்று ஒரு கவிதையை நீண்ட நாட்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். இன்றைக்கும் அவ்வரிகள் பொருத்தமாக உள்ளன. போர் என்பது பேரழிவு. வாழும் நிலத்தைக் சுடுகாடாக்கும் வன்முறை, உலகின் எந்த மூலையில் உள்ள மக்களும் போரை விரும்ப மாட்டார்கள். ஆனால் தங்கள் மீது திணிக்கப்படும் போரை, ஈழத்துப் போராளிகளும், தமிழீழ மக்களும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்திற்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர்.

17122005 அன்று யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாக தர்சணி என்ற இளம்பெண் இலங்கைக் கடற்படையினரால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு உள்ளார். கல்லோடு கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நிலையில் அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இலங்கை ஆயுதப்படையினரால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் பொதுமக்களுக்கு எதிராகக் காட்டுமிராண்டித் தனமான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதை எதிர்த்து அங்கு உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமயில் இலங்கை மானிடரிங் மிஷன் என்ற அமைப்பிடம் மனுக் கொடுக்க ஊர்வலமாகச் சென்றார்கள். ஆனால், அவர்கள் இலங்கை இராணுவத்தால் தடுக்கப்பட்டு பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பேராசிரியர்களும், மாணவர்களும் இரத்தம் கொட்டும் அளவுக்குத் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தாங்கள் எச்சரிக்கை செய்வதற்காக வானில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை இராணுவம் கூறினாலும், பேராசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் துப்பாக்கிச் சூட்டால் காயம் எற்பட்டு உள்ளது என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவில் தேவாலயத்தில், சீறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர், மிகச் சிறந்த தமிழின உணர்வாளர், மனித நேயர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவி உட்பட 8 பேர் படுகாயப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்குப் பின்னால் சிங்கள இராணுவமும், துரோகக் கூட்டமும் ஒளிந்திருப்பதை எவராலும் எளிதில் உணரமுடியும்.

புலிகளை இடறும் முயற்சியில் இராணுவம் இறங்கி இருக்கிறது. அரசு அதற்குத் துணை போகிறது. விரைவில் அங்குப் போர் மூண்டால் அதற்குச் சிங்கள இனவெறியே காரணம் என்பதை அனைத்துலகச் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். போருக்கான நாளை, சிங்களர்கள் குறிக்கட்டும். வெற்றிக்கான நாளை, தமிழர்கள் குறிப்பார்கள்.

"விரைவில் இறுதிப் புயல் வீசும்
வேங்கைகள் ஆள்வார் தமிழ்த் தேசம்.''

நெகிழ்ந்த நிகழ்வு- சுபவீ

சென்னையில் 24122005 அன்று நடைபெற்ற திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அ னா ஆ வன்னா, பாலகாண்டம், கண் பேசும் வார்த்தைகள் என அவர் எழுதிய மூன்று நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், அறிவுமதி, பாலா, ஜெயமோகன், பிரபஞ்சன், சீமான், பாமரன், இளம்பிறை எனப் பேச்சாளர்களின் வரிசை மிக நீண்டதாய் இருந்தது. மூன்று அமர்வுகளில் விழா நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு விழா நிறைவடைந்தபோது, வீட்டிற்கு எப்படித் திரும்புவது என்ற கவலை பலரையும் பற்றிக்கொண்டது.

மூன்றாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பின்வரிசையில் என் அண்ணன் எஸ்.பி. முத்துராமன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மேடையில் இருந்த யாரும் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் சற்றுக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறார். இருக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டதால், கூட்டத்தோடு கூட்டமாய் நின்றபடியே விழா நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கவனித்த யாரோ, அவரை அழைத்து வந்து இரண்டாம் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். மிகச் சுருக்கமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் பாலா, தன் பேச்சின் முடிவில் ஒரு வேண்டுகோள் வைத்தார். மூத்த திரைப்பட இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் மேடைக்கு வந்து எங்களோடு அமர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். அதனை ஏற்று அண்ணன் மேடைக்குச் சென்றார்.

அப்போது மேடையில் கவிஞர் முத்துக்குமார், அவருடைய தந்தையார், கவிஞர் அறிவுமதி, திரைப்பட இயக்குனர்கள் சீமான், பாலா, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணன் மேடையில் ஏறிய போது, அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்றார்கள். முத்துக்குமார் அவருக்குச் சால்வை போர்த்தி வரவேற்றார். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. அந்த நிகழ்வில் நான் நெகிழ்ந்து போனேன் என்றுதான் கூறவேண்டும். அந்த மகிழ்ச்சி, அண்ணனுக்குக் கிடைத்த மதிப்பைக் கண்டு ஒரு தம்பி அடைந்த மகிழ்ச்சி மட்டுமன்று. பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.

தன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தியது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் தெரிந்து கொண்ட உலகில், தலைமுறை இடைவெளி எழுவதற்கு வாய்ப்பில்லை.

நெகிழ்ந்த நிகழ்வு

சென்னையில் 24122005 அன்று நடைபெற்ற திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அ னா ஆ வன்னா, பாலகாண்டம், கண் பேசும் வார்த்தைகள் என அவர் எழுதிய மூன்று நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், அறிவுமதி, பாலா, ஜெயமோகன், பிரபஞ்சன், சீமான், பாமரன், இளம்பிறை எனப் பேச்சாளர்களின் வரிசை மிக நீண்டதாய் இருந்தது. மூன்று அமர்வுகளில் விழா நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு விழா நிறைவடைந்தபோது, வீட்டிற்கு எப்படித் திரும்புவது என்ற கவலை பலரையும் பற்றிக்கொண்டது.

மூன்றாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பின்வரிசையில் என் அண்ணன் எஸ்.பி. முத்துராமன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மேடையில் இருந்த யாரும் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் சற்றுக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறார். இருக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டதால், கூட்டத்தோடு கூட்டமாய் நின்றபடியே விழா நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கவனித்த யாரோ, அவரை அழைத்து வந்து இரண்டாம் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். மிகச் சுருக்கமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் பாலா, தன் பேச்சின் முடிவில் ஒரு வேண்டுகோள் வைத்தார். மூத்த திரைப்பட இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் மேடைக்கு வந்து எங்களோடு அமர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். அதனை ஏற்று அண்ணன் மேடைக்குச் சென்றார்.

அப்போது மேடையில் கவிஞர் முத்துக்குமார், அவருடைய தந்தையார், கவிஞர் அறிவுமதி, திரைப்பட இயக்குனர்கள் சீமான், பாலா, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணன் மேடையில் ஏறிய போது, அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்றார்கள். முத்துக்குமார் அவருக்குச் சால்வை போர்த்தி வரவேற்றார். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. அந்த நிகழ்வில் நான் நெகிழ்ந்து போனேன் என்றுதான் கூறவேண்டும். அந்த மகிழ்ச்சி, அண்ணனுக்குக் கிடைத்த மதிப்பைக் கண்டு ஒரு தம்பி அடைந்த மகிழ்ச்சி மட்டுமன்று. பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.

தன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தியது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் தெரிந்து கொண்ட உலகில், தலைமுறை இடைவெளி எழுவதற்கு வாய்ப்பில்லை.

எது பொது ஒழுங்கு- சுபவீ

இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியின் மூலம், கருத்து அமைப்பின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெறுவதை அறிந்து, பார்வையாளனாய் அங்குச் சென்றிருந்தேன். கவிஞர் கனிமொழியும், கார்த்திக் சிதம்பரமும் வரவேற்க, நடிகர் சத்யராசும், இதழாளர் சித்ரா ரவீந்திரநாத்தும் உரையாற்றினார்கள். கருத்துரிமை பற்றிய அன்றைய உரைகளுக்கிடையே வழக்கம் போல் குஷ்புவும் வந்து போனார். கடந்த மூன்று மாதங்களாகக் குஷ்பு கற்பு பற்றிய விவாதங்களில் பங்கேற்காமல் நான் மௌனமாகவே இருந்து வந்தேன். எனினும் அது குறித்து நடை பெற்ற எதிரெதிர்க் கூட்டங்கள் அனைத்திலும் பார்வையாளனாக அமர்ந்திருந்தேன்.

ஒரு நண்பர், ஏன் இந்தக் கள்ள மௌனம் என்று கூடக் கேட்டார். இல்லையில்லை, இது நல்ல மௌனம் என்று நான் விடையிறுத்தேன். இரண்டு தரப்புகளிலும், எனக்கு உடன்பட்ட கருத்துக்களும் இருந்தன. மாறுபட்ட கருத்துக்களும் இருந்தன. சிலவற்றில் சிறிது குழப்பமும் இருந்தது. எனக்கே தெளிவு எற்படாதபோது, பிறருக்கு நான் என்ன சொல்வது என்பதால்தான் அந்த மௌனம். குஷ்புவின் கருத்துக்கு எதிராக எழுந்த குரல்களில் வேறு ஒரு கோபம் பின்புலமாக இருந்ததை அனைவரும் அறிவோம். தங்கர்பச்சான் என்னும் அரிய கலைஞர், நடிகர் சங்கத்தினரால் இழிவுபடுத்தப்பட்டதற்கு எதிர் வினையாக அது இருந்தது என்பதை மறுக்க முடியாது. இன்று குஷ்புவிற்காக குரல் எழுப்புவோர், அன்று தங்கர்பச்சானுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என்னும் கேள்வியில் நியாயம் உள்ளது. தன் கூற்றுக்காக அவர் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகும், நடிகர் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கட்டப் பஞ்சாயத்து செய்த அராஜகத்தை அனைவரும் கண்டித்திருக்க வேண்டும்.

அதே நேரத்தில், தங்கர்பச்சானை இழிவுபடுத்தியதற்காகவும், சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாகக் கட்டப்பஞ்சாயத்து செய்ததற்காகவும் நடிகர் சங்கத்தையும், குஷ்புவையும் எதிர்த்து நேரடியான போராட்டத்தைத் தொடங்கியிருந்தால், கற்பு மீதான விவாதமே எழாமல் போயிருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் உண்மைச் சிக்கல் திசைதிரும்பிப் போனதால், கற்பு பற்றிய பிற்போக்கான, ஆணாதிக்கச் சொல்லாடல்களும் அரங்கேறவே செய்தன. இந்தச் சூழலில்தான் நான் மௌனம் காத்தேன்.

ஆனாலும் அன்று கருத்து அமைப்பில் அது குறித்து நான் ஒரு வினாவை எழுப்பினேன். அவ்வினா, அடுத்த நாள் தினகரன், தினமணி ஆகிய நாளேடுகளில் அரைகுறையாக வெளியாகியிருந்தது. ஆதலால் அன்று நான் எழுப்பிய வினா என்ன என்பது குறித்தும், அதில் என் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பது குறித்தும் இப்போது விளக்கம் சொல்ல வேண்டிய கடமை எனக்கு எற்பட்டுள்ளது.

ஆங்கில ஏடுகளில் கட்டுரைகள் எழுதும், சித்ரா ரவீந்திரநாத் அன்று பேசும் பொழுது, அடுத்தவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமலும், பொது ஒழுங்கிற்குப் பங்கம் வராமலும், எல்லாவிதமான கருத்துகளையும் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை வேண்டும் என்று பேசினார். மற்றவர்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. இந்த இடத்தில்தான் என்னுடைய அடிப்படையான ஐயம் எழுந்தது. அதனை, பார்வையாளர்கள் நேரத்தில் நான் எழுப்பினேன்.

ஒரு கருத்தை மேடையில் பேசியதற்காகவே, ஒன்றரை ஆண்டு காலம் பொடாச் சிறையில் இருந்தவர்களில் நானும் ஒருவன். இன்று கருத்துரிமைக்காகக் குரல் கொடுக்கும் இந்து போன்ற நாளேடுகள், நாங்கள் கைது செய்யப்பட்டபோது வேறு விதமாகப் பேசின. வைகோவைக் கைது செய்த மறுநாள், அப்படிப் பேசுவது அவருடைய கருத்துரிமை, அவரை ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்டிருக்க வேண்டிய இந்து ஏடு, ஏன் இன்னும் நெடுமாறனையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டது. பிறகு, பொடா மறுஆய்வுக்குழு எங்கள் மீது சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை என்று சொன்னபிறகு, இந்து ஏடு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டாமா? இல்லை, அப்போது இந்து மௌனமாக இருந்தது. அதுதான் இந்து ஏட்டின் கருத்துரிமைக் கோட்பாடு. அதனை அன்று நான் எடுத்துச் சொன்னேன். அதற்குச் சித்ரா விடை சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை.

எங்களுக்கு எதிராகத் தலையங்கம் எழுதிய இந்து, கருத்துரிமை என்ற பெயரால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை அனுமதித்தால், சட்டமும் ஒழுங்கும் கெட்டுவிடும் என்று கூறியிருந்தது. துக்ளக் போன்ற ஏடுகளின் கருத்தும் அதுவாகவே உள்ளது. தமிழக அரசும் அதே பொது ஒழுங்கு சட்டம் என்பனவற்றைக் காரணம் காட்டியே எங்களைக் கைது செய்தது. கற்பு குறித்துக் கருத்துச் சொல்ல குஷ்புவிற்கு உரிமையில்லையா என்னும் கேள்வி இப்போது ஒரு பகுதியினரால் எழுப்பப்படுகிறது. உரிமை உண்டுதான். ஆனால் அது தமிழ்ப் பண்பாட்டையும், பொது ஒழுங்கையும் கெடுப்பதாக இருக்கிறது. அதனால் அதனை அனுமதிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினரிடமிருந்து விடை வருகிறது.

ஆக, பொது ஒழுங்கிற்குத் தீங்கு வராத கருத்துரிமையை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும், எது பொது ஒழுங்கு என்பதை வரையறுப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. பொது ஒழுங்கு என்பது அரசின் பார்வையில் ஒன்றாகவும், அமைப்புகளின் பார்வையில் இன்னொன்றாகவும், தனிமனிதர்களின் பார்வையில் வேறுவேறாகவும் உள்ளது. எனவே இதனை யார், எப்படி வரையறை செய்வது என்பதே அவ்வரங்கில் நான் எழுப்பிய வினா. மொத்தத்தில் பொது ஒழுங்கு என்பதை அவரவர் பார்வையில் முன்னிறுத்தி, கருத்துரிமைக்குத் தடை விதிக்கின்றோமோ என்பதே என்னுடைய அச்சமாக உள்ளது. நம்முடைய கருத்து வெளிப்பாடுகளால் சிதைந்து போகும் அளவிற்கு இந்நாட்டின் சட்டம் ஒழுங்கும், தமிழ்ப் பண்பாடும் பலவீனமாக உள்ளன என்று நான் கருதவில்லை.

எந்தக் கருத்து வேண்டுமானாலும் அரங்கிற்கு வரட்டும், வலியவை வாழும். பொருளற்றவைகளைக் காலம் புறந்தள்ளும். நமக்கு எதிரான கருத்துகளைக் கூடப் பிறர் வெளியிடும் உரிமைக்காகப் போராடுவதே கருத்துரிமைப் போராட்டம், அப்போராட்டமே இன்றைய தேவையாக உள்ளது என நான் உணர்கிறேன்.