Thursday, January 26, 2006

எது பொது ஒழுங்கு- சுபவீ

இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியின் மூலம், கருத்து அமைப்பின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெறுவதை அறிந்து, பார்வையாளனாய் அங்குச் சென்றிருந்தேன். கவிஞர் கனிமொழியும், கார்த்திக் சிதம்பரமும் வரவேற்க, நடிகர் சத்யராசும், இதழாளர் சித்ரா ரவீந்திரநாத்தும் உரையாற்றினார்கள். கருத்துரிமை பற்றிய அன்றைய உரைகளுக்கிடையே வழக்கம் போல் குஷ்புவும் வந்து போனார். கடந்த மூன்று மாதங்களாகக் குஷ்பு கற்பு பற்றிய விவாதங்களில் பங்கேற்காமல் நான் மௌனமாகவே இருந்து வந்தேன். எனினும் அது குறித்து நடை பெற்ற எதிரெதிர்க் கூட்டங்கள் அனைத்திலும் பார்வையாளனாக அமர்ந்திருந்தேன்.

ஒரு நண்பர், ஏன் இந்தக் கள்ள மௌனம் என்று கூடக் கேட்டார். இல்லையில்லை, இது நல்ல மௌனம் என்று நான் விடையிறுத்தேன். இரண்டு தரப்புகளிலும், எனக்கு உடன்பட்ட கருத்துக்களும் இருந்தன. மாறுபட்ட கருத்துக்களும் இருந்தன. சிலவற்றில் சிறிது குழப்பமும் இருந்தது. எனக்கே தெளிவு எற்படாதபோது, பிறருக்கு நான் என்ன சொல்வது என்பதால்தான் அந்த மௌனம். குஷ்புவின் கருத்துக்கு எதிராக எழுந்த குரல்களில் வேறு ஒரு கோபம் பின்புலமாக இருந்ததை அனைவரும் அறிவோம். தங்கர்பச்சான் என்னும் அரிய கலைஞர், நடிகர் சங்கத்தினரால் இழிவுபடுத்தப்பட்டதற்கு எதிர் வினையாக அது இருந்தது என்பதை மறுக்க முடியாது. இன்று குஷ்புவிற்காக குரல் எழுப்புவோர், அன்று தங்கர்பச்சானுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என்னும் கேள்வியில் நியாயம் உள்ளது. தன் கூற்றுக்காக அவர் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகும், நடிகர் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கட்டப் பஞ்சாயத்து செய்த அராஜகத்தை அனைவரும் கண்டித்திருக்க வேண்டும்.

அதே நேரத்தில், தங்கர்பச்சானை இழிவுபடுத்தியதற்காகவும், சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாகக் கட்டப்பஞ்சாயத்து செய்ததற்காகவும் நடிகர் சங்கத்தையும், குஷ்புவையும் எதிர்த்து நேரடியான போராட்டத்தைத் தொடங்கியிருந்தால், கற்பு மீதான விவாதமே எழாமல் போயிருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் உண்மைச் சிக்கல் திசைதிரும்பிப் போனதால், கற்பு பற்றிய பிற்போக்கான, ஆணாதிக்கச் சொல்லாடல்களும் அரங்கேறவே செய்தன. இந்தச் சூழலில்தான் நான் மௌனம் காத்தேன்.

ஆனாலும் அன்று கருத்து அமைப்பில் அது குறித்து நான் ஒரு வினாவை எழுப்பினேன். அவ்வினா, அடுத்த நாள் தினகரன், தினமணி ஆகிய நாளேடுகளில் அரைகுறையாக வெளியாகியிருந்தது. ஆதலால் அன்று நான் எழுப்பிய வினா என்ன என்பது குறித்தும், அதில் என் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பது குறித்தும் இப்போது விளக்கம் சொல்ல வேண்டிய கடமை எனக்கு எற்பட்டுள்ளது.

ஆங்கில ஏடுகளில் கட்டுரைகள் எழுதும், சித்ரா ரவீந்திரநாத் அன்று பேசும் பொழுது, அடுத்தவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமலும், பொது ஒழுங்கிற்குப் பங்கம் வராமலும், எல்லாவிதமான கருத்துகளையும் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை வேண்டும் என்று பேசினார். மற்றவர்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. இந்த இடத்தில்தான் என்னுடைய அடிப்படையான ஐயம் எழுந்தது. அதனை, பார்வையாளர்கள் நேரத்தில் நான் எழுப்பினேன்.

ஒரு கருத்தை மேடையில் பேசியதற்காகவே, ஒன்றரை ஆண்டு காலம் பொடாச் சிறையில் இருந்தவர்களில் நானும் ஒருவன். இன்று கருத்துரிமைக்காகக் குரல் கொடுக்கும் இந்து போன்ற நாளேடுகள், நாங்கள் கைது செய்யப்பட்டபோது வேறு விதமாகப் பேசின. வைகோவைக் கைது செய்த மறுநாள், அப்படிப் பேசுவது அவருடைய கருத்துரிமை, அவரை ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்டிருக்க வேண்டிய இந்து ஏடு, ஏன் இன்னும் நெடுமாறனையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டது. பிறகு, பொடா மறுஆய்வுக்குழு எங்கள் மீது சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை என்று சொன்னபிறகு, இந்து ஏடு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டாமா? இல்லை, அப்போது இந்து மௌனமாக இருந்தது. அதுதான் இந்து ஏட்டின் கருத்துரிமைக் கோட்பாடு. அதனை அன்று நான் எடுத்துச் சொன்னேன். அதற்குச் சித்ரா விடை சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை.

எங்களுக்கு எதிராகத் தலையங்கம் எழுதிய இந்து, கருத்துரிமை என்ற பெயரால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை அனுமதித்தால், சட்டமும் ஒழுங்கும் கெட்டுவிடும் என்று கூறியிருந்தது. துக்ளக் போன்ற ஏடுகளின் கருத்தும் அதுவாகவே உள்ளது. தமிழக அரசும் அதே பொது ஒழுங்கு சட்டம் என்பனவற்றைக் காரணம் காட்டியே எங்களைக் கைது செய்தது. கற்பு குறித்துக் கருத்துச் சொல்ல குஷ்புவிற்கு உரிமையில்லையா என்னும் கேள்வி இப்போது ஒரு பகுதியினரால் எழுப்பப்படுகிறது. உரிமை உண்டுதான். ஆனால் அது தமிழ்ப் பண்பாட்டையும், பொது ஒழுங்கையும் கெடுப்பதாக இருக்கிறது. அதனால் அதனை அனுமதிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினரிடமிருந்து விடை வருகிறது.

ஆக, பொது ஒழுங்கிற்குத் தீங்கு வராத கருத்துரிமையை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும், எது பொது ஒழுங்கு என்பதை வரையறுப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. பொது ஒழுங்கு என்பது அரசின் பார்வையில் ஒன்றாகவும், அமைப்புகளின் பார்வையில் இன்னொன்றாகவும், தனிமனிதர்களின் பார்வையில் வேறுவேறாகவும் உள்ளது. எனவே இதனை யார், எப்படி வரையறை செய்வது என்பதே அவ்வரங்கில் நான் எழுப்பிய வினா. மொத்தத்தில் பொது ஒழுங்கு என்பதை அவரவர் பார்வையில் முன்னிறுத்தி, கருத்துரிமைக்குத் தடை விதிக்கின்றோமோ என்பதே என்னுடைய அச்சமாக உள்ளது. நம்முடைய கருத்து வெளிப்பாடுகளால் சிதைந்து போகும் அளவிற்கு இந்நாட்டின் சட்டம் ஒழுங்கும், தமிழ்ப் பண்பாடும் பலவீனமாக உள்ளன என்று நான் கருதவில்லை.

எந்தக் கருத்து வேண்டுமானாலும் அரங்கிற்கு வரட்டும், வலியவை வாழும். பொருளற்றவைகளைக் காலம் புறந்தள்ளும். நமக்கு எதிரான கருத்துகளைக் கூடப் பிறர் வெளியிடும் உரிமைக்காகப் போராடுவதே கருத்துரிமைப் போராட்டம், அப்போராட்டமே இன்றைய தேவையாக உள்ளது என நான் உணர்கிறேன்.

2 comments:

ஜோ/Joe said...

சுபவீ ஐயா,
தங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.

Anonymous said...

//ஒரு கருத்தை மேடையில் பேசியதற்காகவே, ஒன்றரை ஆண்டு காலம் பொடாச் சிறையில் இருந்தவர்களில் நானும் ஒருவன். இன்று கருத்துரிமைக்காகக் குரல் கொடுக்கும் இந்து போன்ற நாளேடுகள், நாங்கள் கைது செய்யப்பட்டபோது வேறு விதமாகப் பேசின. வைகோவைக் கைது செய்த மறுநாள், அப்படிப் பேசுவது அவருடைய கருத்துரிமை, அவரை ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்டிருக்க வேண்டிய இந்து ஏடு, ஏன் இன்னும் நெடுமாறனையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டது. பிறகு, பொடா மறுஆய்வுக்குழு எங்கள் மீது சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை என்று சொன்னபிறகு, இந்து ஏடு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டாமா? இல்லை, அப்போது இந்து மௌனமாக இருந்தது. அதுதான் இந்து ஏட்டின் கருத்துரிமைக் கோட்பாடு.//

அனுபவப்பட்டவர்கள் சொல்லாவது அம்பலம் ஏறுமா?. தமிழர் நலனுக்கு எதிரான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டியவை.