Thursday, January 26, 2006

நெகிழ்ந்த நிகழ்வு

சென்னையில் 24122005 அன்று நடைபெற்ற திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அ னா ஆ வன்னா, பாலகாண்டம், கண் பேசும் வார்த்தைகள் என அவர் எழுதிய மூன்று நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், அறிவுமதி, பாலா, ஜெயமோகன், பிரபஞ்சன், சீமான், பாமரன், இளம்பிறை எனப் பேச்சாளர்களின் வரிசை மிக நீண்டதாய் இருந்தது. மூன்று அமர்வுகளில் விழா நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு விழா நிறைவடைந்தபோது, வீட்டிற்கு எப்படித் திரும்புவது என்ற கவலை பலரையும் பற்றிக்கொண்டது.

மூன்றாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பின்வரிசையில் என் அண்ணன் எஸ்.பி. முத்துராமன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மேடையில் இருந்த யாரும் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் சற்றுக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறார். இருக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டதால், கூட்டத்தோடு கூட்டமாய் நின்றபடியே விழா நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கவனித்த யாரோ, அவரை அழைத்து வந்து இரண்டாம் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். மிகச் சுருக்கமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் பாலா, தன் பேச்சின் முடிவில் ஒரு வேண்டுகோள் வைத்தார். மூத்த திரைப்பட இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் மேடைக்கு வந்து எங்களோடு அமர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். அதனை ஏற்று அண்ணன் மேடைக்குச் சென்றார்.

அப்போது மேடையில் கவிஞர் முத்துக்குமார், அவருடைய தந்தையார், கவிஞர் அறிவுமதி, திரைப்பட இயக்குனர்கள் சீமான், பாலா, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணன் மேடையில் ஏறிய போது, அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்றார்கள். முத்துக்குமார் அவருக்குச் சால்வை போர்த்தி வரவேற்றார். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. அந்த நிகழ்வில் நான் நெகிழ்ந்து போனேன் என்றுதான் கூறவேண்டும். அந்த மகிழ்ச்சி, அண்ணனுக்குக் கிடைத்த மதிப்பைக் கண்டு ஒரு தம்பி அடைந்த மகிழ்ச்சி மட்டுமன்று. பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.

தன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தியது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் தெரிந்து கொண்ட உலகில், தலைமுறை இடைவெளி எழுவதற்கு வாய்ப்பில்லை.

1 comment:

Anonymous said...

//பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.

தன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தியது.//

பண்பாடும், நாகரீகமும் நம் இளைஞனுக்கு கற்றுக் கொடுத்து வருவதில்லை., அது இயல்பு., கலப்படங்கள் சிலவற்றைச் சீரழித்தாலும்., பாலாவின் மண் பண்பாட்டின் விளைவிடம் அல்லவா?