Friday, June 01, 2007

அது ஒரு பொடா காலம்! (8)

அது ஒரு பொடா காலம்! (8)

சுப.வீரபாண்டியன்

அவ்வப்போது நாங்கள் பிணைக்கு மனுப் போடுவதும், அதனை நீதிமன்றம் மறுப்பதும் வழக்கமாகி-விட்டது.ஒவ்வொரு முறையும், நெடுமாறன் ஐயாவின் மகள் உமா எங்களைப் பார்க்க வரும்போது, ‘‘இன்னிக்கு நம்ம சந்துரு சார் (எங்கள் வழக்குரைஞர்) கடுமையா வாதங்-களை வெச்-சாரு. நீதிபதியும் நல்லா கேட்டாரு’’ என்று நீதிமன்றத்தில் நடந்தவற்றை எடுத்துச் சொல்வார். பரந்தாமனுக்கு அதில் நம்பிக்கை முழுமையாகப் போய்விட்டது. ‘‘ஆமா, தெனமும்-தான் நீதிபதிகள் நம்ம வாதங்களைக் கேக்குறாங்க. அப்புறம் ஜாமீன் இல்லேங்கிறாங்க. இதானே நடக்குது’’ என்பார்.

உமாவைப் போல ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது. தன் அப்பாவுக்காக மட்டுமின்றி, பொடாவில் அடைபட்ட எங்கள் அனைவருக்காகவும் உமா பட்ட துன்பங்கள் அதிகம். தினந்தோறும் வழக்குரைஞர்களைப் பார்ப்பது, வழக்கு நாள்-களில் நீதிமன்றம் செல்வது, சிறைக்கு வந்து எங்களைப் பார்ப்பது, பிறகு, எங்கள் குடும்பத்தினருக்குச் செய்திகள் சொல்வது என ஒன்றரை ஆண்டு காலமும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று அவர் ஆற்றிய பணிகளை எங்கள் வாழ்-நாளில் மறக்க முடியாது.

ஒருநாள், நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் பொடா மறு ஆய்வுக் குழு ஒன்றை அரசு அமைத்திருக்கும் செய்தியை உமா கொண்டுவர, சற்று மகிழ்ந்தோம். ஆனால், அந்தக் குழு இயங்கவே தொடங்கவில்லை. அந்தக் குழுவுக்கென்று ஓர் அறைகூட ஒதுக்கப்படாத செய்தியைச் சில நண்பர்கள் கூறினர். பிணை எதிர்-பார்ப்பு எங்களை விட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது.

ஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்து-விடமிருந்து கடிதம் வந்தது. ‘சிறை உங்களைச் சிதைக்காது; செதுக்கும்!’ என்று தன் கைப்பட எழுதியிருந்தார். சிறைத் துன்பங்களுக்கிடையிலும் அவர் தமிழ் இனித்தது.

கவிஞர் சிற்பிக்கு விருது கொடுக்-கப்படும் செய்தியை ஒருநாள் நாளேடு-களில் பார்த்துவிட்டு, ஒரு அறுசீர் விருத்தத்தை மட்டும் மடலில் எழுதி அனுப்பினேன்.


‘விருது ஓர் தமிழன் பெற்றான்
விரிந்தது மகிழ்வில் உள்ளம்
அருகிலே வந்து வாழ்த்த
அவாவினன் என்ற போதும்
இரும்பிலே செய்த கம்பி
ஏழெட்டு தடுப்ப தாலே
தருகிறேன் மடலில் வாழ்த்தை
தமிழ்மானம் வாழ்க வென்றே’ என்று நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தி கண்டு மகிழ்ந்து, உடன் அவரும் கவிதையிலேயே ஒரு விடை எழுதினார்.

‘தன்மானத்துக்குத் தடைகள் உண்டோ?
தமிழைத் தடுக்கச் சுவர்கள் உண்டோ?
அன்புக்கு ஏதும் தாழ்கள் உண்டோ?
அணையா நெருப்பே வாழ்க! நன்றி!’
என்று அவர் தந்த விடை, என் நெஞ்சை நெகிழச் செய்தது.

இலக்கிய வேட்கைக்குக் கிடைத் தது சில இரை இப்படியும் இலக்கியம் வளர்த்தது சிறை!
சிறைக்குப் புதிய புதிய ‘விருந்தாளிகள்’ வருவதும் போவதுமாக இருப்பர். எப்போதாவது சில முக்கிய விருந் தாளி-களை எங்கள் தொகுதிக்கு அனுப்புவார்கள். அப்படி வந்தவர் களில் ஒருவர்தான் ‘பங்க் குமார்.’

ஒருநாள், இரவு எட்டு மணி இருக் கும்... தொட்டியில் இருக்கும் நீரை ஒருவர் அள்ளிக் குளிக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார்குளிப் பது என்ற வியப்பில் எட்டிப் பார்த்தேன். உருவம் சரியாகத் தெரிய வில்லை. அருகில் இரண்டு காவலர் கள் நின்றனர்.

குளித்து முடித்ததும், அந்த மனிதரை என் பக்கத்து அறைக்கு அழைத்து வந்தனர். அவர் என்னை ஒரு மாதிரி யாக ஏற இறங்கப் பார்த்தார். அடுத்த அறைக்குப் போனதும், ‘‘ம்ஹ¨ம்... இங்க காத்தும் வரலை, ஒண்ணும் வரலை. பேசாம, என்னை மாடியில வெச்சுப் பூட்டுங்க’’ என்றார். அவர் கேட்டபடி, மாடிக்கு அழைத்துச் சென்று காலியாக இருந்த ஓர் அறையில் பூட்டிவிட்டுத் திரும்பினர்.

ஒரு காவலர் என் அறைக்கு அருகில் வந்து, ‘‘ஆளு எப்பிடி ஜம்முனு இருக்கான் பார்த்தீங்களா சார், இவன்தான் பயங்கர ரவுடி பங்க் குமார்’’ என்றார்.

‘பங்க் குமார்’ என்ற பெயரை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். நீதிமன்ற வாசலிலேயே பட்டப் பகலில் ஒருவரை வெட்டிக் கொன்றதாக அவர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளது. மேலும் பல வழக்குகளும் உள்ளன-வாம். இப்போது ஒரு குண்டு வெடிப்பு வழக்கு!

மறுநாள் காலையில் அறிமுகப்படலம். மோகனுக்கும் செல்வராஜுக்கும் பங்க் குமாரை நன்றாகவே தெரிந்திருந்தது. எங்கள் இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தனர். பார் வைக்கு மிகவும் சாதுவா கத் தெரிந்த குமாரை, ‘சாமி, சாமி’ என்று செல்வராஜ் அழைத்ததைப் பார்த்ததும், எனக்கு வியப்பாக இருந்தது. பிறகு தனியாகக் கேட்டேன்... ‘‘அது என்ன சாமி?’’

‘‘அவருக்கு ரொம்பப் பக்தி சார்! பாருங்க, இன்னும் கொஞ்ச நாள்ல இங்கேயே பெரிய பூஜை எல்லாம் ஆரம்பிச்சிடுவாரு. அதனால ‘சாமி’ன்னுதான் கூப்பிடு-வோம்!’’

எனக்கும் பரந்தாம-னுக்கும் உள்ளூரச் சிரிப்-பாக இருந்தது. அவருக்-கும் அறவே கடவுள் நம்பிக்கை கிடையாது. ‘‘என்னய்யா... குத்து, வெட்டு, கொலைனு அலையுறீங்க. அப்புறம் சாமி, கடவுள் பூஜை வேற பண்றீங்க’’ என்றார் பரந்தாமன்.

‘‘அது வேற, இது வேற நயினா’’ என்று விடை வந்தது செல்வராஜிடமிருந்து.

சில நாள்களுக்குப் பிறகு, பங்க் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் சதுரங்க விளையாட் டில் கெட்டிக்காரர் என்று மோகன் சொல்ல, ஒருநாள் குமாருடன் சதுரங்கம் விளையாடி னேன்.

பள்ளி, கல்லூரி நாள்களிலிருந்தே அந்த விளையாட்டில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதில் பல பரிசுகளையும் வாங்கியுள்ளேன். எனவே, குமாரை எளிதாக வென்றுவிடலாம் என்று விளை யாடத் தொடங்கினேன். ஆனால், குமார் வெற்றி பெற்றுவிட, அதிர்ச்சிக்குள்ளானேன். கவனமில் லாமல் விளையாடிவிட்டோமோ என்று எண்ணி, மறுபடியும் விளையாடினேன். தொடர்ந்து பல தடவை குமாரே வெற்றி பெற, எப்போதாவதுதான் எனக்கு வெற்றி கிடைத்தது.

அவ்வளவு புத்திசாலித்தனமும் நல்ல வழியில் திருப்பப்பட்டிருந்தால், பங்க் குமார் மட்டுமல்ல, நாடும் பயன்பெற்றிருக்கும்.

இரண்டு மாதங்களுக்குப் பின், பிணை கிடைத்து பங்க் குமார் விடுதலையானார். பிரியும்போது, மனம் மாறி வெளியில் செல்வதாகவும், படிக்க-வேண்டிய சில நல்ல புத்தகங்களின் பெயர்களை எழுதித் தருமாறும் கேட்டார். கொடுத்தேன்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சில மாதங்களுக்கு முன் நாளேடுகளில் ஒரு நாள், ‘ரவுடி பங்க் குமார் சுட்டுக் கொலை’ என்று செய்தி வந்திருந்தது.

நல்லவரோ, கெட்டவரோ... பழகிய அந்த நாள்கள் இப்போதும் என் நினைவில்!
\ (தொடரும்)

2 comments:

தமிழ். சரவணன் said...

//அவ்வளவு புத்திசாலித்தனமும் நல்ல வழியில் திருப்பப்பட்டிருந்தால், பங்க் குமார் மட்டுமல்ல, நாடும் பயன்பெற்றிருக்கும்.//


நம் நாட்டுக் காவல்நிலையத்தில் காலடிவைத்து விட்டால் அவர் மாகாத்மாவாக இருந்தாலூம் மனம் மாறிவிடும் அந்த அளவுக்கு அதிகார துஷ்பிரயோக கொடுமையும் மனிதத்தன்மையெ இல்லாமல் நடந்து கொள்வதும் சர்வசாதரணம்... இந்த வலியை நான் நன்கு உணர்ந்தவன் (இதில் விதிவிலக்காக சில மனிதத்தன்மை உள்ள காவலர்களும் உண்டு)

தமிழ். சரவணன் said...

//‘‘ஆமா, தெனமும்-தான் நீதிபதிகள் நம்ம வாதங்களைக் கேக்குறாங்க. அப்புறம் ஜாமீன் இல்லேங்கிறாங்க. இதானே நடக்குது’’ என்பார்.//

கீழ் கோர்ட்டுகளில் பினைகிடைப்பதென்பது அறிது அதவும் கிடைத்துவிட்டால் அதில் சுரிட்டிக்கு ஊரிலிருந்து அட்கள் கூட்டிவருது அதைவிட அரிது... இதைவிட கொடுமை சிறையில் இருந்து வந்த பிறகு தினமும் காவல்நிலையத்தில் போய்கையெழுத்து இடுவது