Friday, April 27, 2007

அது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்

அது ஒரு பொடா காலம் (பகுதி 3)

சுப.வீரபாண்டியன்


கூவம் நதியால் சூழப்பட்டு இருந்த சென்னை நடுவண் சிறையின், உயர் பாதுகாப்புத் தொகுதி 1&ல் அடைக்கப்பட்டேன். ஒருவனைப் பயங்கரவாதியாகச் சித்திரிப்பதற்கு அரசு மேற் கொள்ளும் உத்திகளில் ஒன்று, உயர் பாதுகாப்புத் தொகுதியில் சிறைவைப்பது. அந்தத் தொகுதியில் அடைக்கப்படுபவர்கள், பகல் நேரத்தில்கூட, அதனைவிட்டு வெளியில் வந்து பிற கைதிகளுடன் பேசவோ, பழகவோ இயலாது. கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போருக்கு இருக்கும் பகல் நேரச் சுதந்திரம்கூட என் போன்ற ‘பயங்கரவாதி’களுக்குக் கிடையாது.

அந்தத் தொகுதியில் கீழே நான்கும், மாடியில் நான்குமாக எட்டு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கழிப்பறை உண்டு. வெளியில் இரண்டு பொதுக் கழிப்பறைகளும், ஒரு நீர்த் தொட்டியும், கொஞ்சம் திறந்தவெளி இடமும் இருந்தன. மொத்த உலகம் இவ்வளவுதான்!

சிறையதிகாரி என்னை அங்கே அழைத்துக்கொண்டு போனபோது, எட்டு அறைகளுக்குமாகச் சேர்த்து இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். நான் மூன்றாவது ஆள். அவர்களில் ஒருவர் பெயர் மோகன். இன்னொருவர் செல்வராஜ்.


உள்ளே நுழைந்ததுமே மோகன் என்னிடம் அன்பாகப் பேசினார். ‘என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘பார்த்த மாதிரி இருக்கிறது’ என்றேன். அவர் விளக்கம் சொன்னபின், அந்தப் பழைய நிகழ்வு கள் நினைவுக்கு வந்தன.


விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 1996&ம் ஆண்டு இறுதியில் நான் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு நள்ளிரவில் அங்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஏற்கெனவே 53 பேர் அடைக்கப்பட்டு இருந்த, அந்த நீள் அறையில் 54&வதாக என்னை உள்ளே அனுப்பினார்கள்.


குறுக்கும் நெடுக்குமாகவும், தாறுமாறாகவும் எல்லோரும் படுத்திருக்க, நான் ஒரு ஓரமாகப் படுக்க இடம் தேடியபடி நின்றிருந்த போது, ஒரு ஆள் எழுந்து, என்னைப் பற்றி விசாரித்து, எனக்கு மரியாதை கொடுத்து, படுப்பதற்கு ஓர் இடத்தையும் ஒதுக்கித் தந்தார். அவர்தான் மோகன்.


மோகனைப் பற்றிய இன்னொரு செய்தி, அவர் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் தம்பி. அதே வழக்கில் கைதாகி உள்ளே இருக்கும் இன்னொருவர்தான் செல்வராஜ். வழக்குக் காரண மாக ‘ஆட்டோ’ செல்வராஜ். அவர்கள் இருவரும் மாடியில் உள்ள அறைகளில் இருக்க, நான் மட்டும் கீழ் அறை ஒன்றில், மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டேன்.


ஆளரவமற்ற அன்றைய இரவின் நிசப்தம், வாழ்க்கை என்னை எப்படிப் புரட்டிப் போட்டுள்ளது என்பதை எனக்கு உணர்த்திற்று. வீட்டிலும் உறுப்பினர்கள் அதிகம்; வெளியிலும் நண்பர்கள் அதிகம். கலகலப்பாகவே வாழ்ந்து பழகிய நான் தனிமையில், வராந்தாவில் எரியும் ஒரு சின்ன விளக்கின் வெளிச் சத்தில் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்தேன்.


ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளின் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துரைப்பதில் எப்போதும் நான் தயங்கியதில்லை. ஒருமுறை, ‘உங்கள் மீது விடுதலைப்புலி கள் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதே?’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி!’ என விடை எழுதியிருந்தேன்.


நாங்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த கூட்டத்தில் பேசும்போது, ‘எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. கருத்து வேறுபாடுகளுக்குரிய களமாக அமைவதுதான் ஜனநாயகம். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுவோர், தங்கள் கருத்தை ஊடகங்களிலும், மேடைகளிலும் வெளிப்படுத்த உரிமை இருக்கும்போது அவர்களைப் போராளிகள் என்று கருதும் எங்கள் கருத்தை வெளியிடுவது மட்டும் எப்ப டிப் பயங்கரவாத மாகும்?’ என்று நான் வினா எழுப்பினேன்.


எல்லாவற்றுக்கும் உலகில் ஒரு விலை உள்ளது. இது கருத்து உரிமைக்காக நாம் கொடுக்கும் விலை என்று எண்ணிக்கொண்டு இருந்தபோது, என்னையும் மறந்து உறங்கிவிட்டேன்.


அடுத்த நாள் காலைச் செய்தித்தாள்களில், நான் கைது செய்யப்பட்ட செய்தியோடு, என் வீட்டில் சோதனை (ரெய்டு) நடந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது. வீட்டில் சோதனை என்றால், மீண்டும் ஒரு பரபரப்பு அரங்கேற்றப்பட்டு இருக்கும். ஏன் இத்தனை பரபரப்பு? எதற்காக இவ்வளவு உருட்டலும், மிரட்டலும்?


ஜெயலலிதா அரசின் சர்வாதிகாரம் குறித்து, வைகோ தன் அறிக்கை ஒன்றில் மிகத் தெளிவாகக் குறிப் பிட்டு இருந்தார். ‘தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், தமிழகத்தின் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவும், அ.தி.மு.க. அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்து கிறது’ என்று வைகோ சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை!


இரண்டு நாள்களுக்குப் பின்னர், சிறையில் என்னைச் சந்திக்க என் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப் பட்டது. காரைக்குடியில் படித்துக் கொண்டு இருந்த என் இளைய மகன் பாரதிதாசன் கண் கலங்குவதைக் கம்பி வலைகளைத் தாண்டி என்னால் காண முடிந்தது.


‘சிறைச்சாலையைப் பூஞ்சோலை என்று பாடியவரின் பெயரை அல்லவா உனக்கு வைத்திருக்கிறேன். இப்படிக் கலங்கலாமா?’ என்று ஆறுதல் சொன்னேன்.


மனைவியிடம், வீட்டில் நடந்த சோதனை பற்றிக் கேட்டறிந்தேன். சில புத்தகங்களை மட்டும் எடுத்துச் சென்றார்களாம். ‘நீங்கள் வைத்திருந்த பிரபாகரன் படத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்’ என்று மனைவி கூற, ‘படமே வெடிகுண்டாய் அவர்களைப் பயமுறுத்தி யிருக்கும், விடு!’ என்றேன்.


25.08.02&ம் நாள் நாளேடுகளில், ஒரு வியப்பான செய்தி வெளியாகி இருந்தது. சிறீலங்காவின் மறு வாழ்வுத் துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தன, ‘செப்டம்பர் 16 அன்று, தாய்லாந்தில் தொடங்க விருக்கும் பேச்சுவார்த்தைக்கு வசதியாக, விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடை செப்டம்பர் 6 அன்று விலக்கிக்கொள்ளப்பட உள்ளது’ என்று அறிவித் திருந்தார்.


எந்த நாட்டில் சிக்கலோ, அந்த நாட்டிலேயே தடை நீக்கப்படும்போது, இந்த நாட்டில் தடை இருப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றிப் பேசி விட்டோம் என்று சொல்லி எங்களைப் பொடாவில் கைது செய்வதும் வேடிக்கை யான செய்தி அன்று; வேதனையான முரண்!


சிறையில் காலை நேரம் செய்தித்தாள்களில் கழியும். பிறகு, நான் கொண்டு சென்றிருந்த நூல்களைப் படிப்பேன். இருப்பினும் எவ்வளவு நேரம் படிக்க முடியும்! பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் போலிருக்கும். மோகன் அதிகம் பேசமாட்டார். செல்வராஜ், பேசுவதை நிறுத்தமாட்டார். அவரு டைய கதையை அவர் சொல்லச் சொல்ல, நானும் சுவைத்துக் கேட்கத் தொடங்கினேன். பின்னாளில் அதுவே, என்னால் எழுதப்பட்ட ‘இடைவேளை’ என்னும் தொடர்கதை ஆனது.


26&ம் தேதி காலை. ‘ஐயா! பாத்தீங்களா?’ என்று செய்தித்தாளை எடுத்துக் கொண்டு செல்வராஜ் ஓடி வந்தார். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திவிட்ட செய்தி பெரிதாக வந்திருந்தது.


எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. என் கவலை நாகப்பா பற்றியது மில்லை; வீரப்பன் பற்றியதுமில்லை. அப்போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு, கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஏதேனும் கலவரம் ஏற்பட்டு, அவருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று எண்ணி, மனம் கலங்கினேன். ஆனால், நல்லவேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.


அதே செய்தித்தாளின் பின் பக்கத்தில் ‘நெடுமாறன் கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைப்பு’ என்று இன்னொரு செய்தி வந்திருந்தது.


தமிழனத்தின் மீதும், தமிழின உணர்வாளர்களின் மீதும் ஜெயலலிதா வுக்கு ஏன் இத்தனை கோபம் என்று கேள்வி எழுந்தது. பரம்பரை யுத்தம் போன்று அவர் நடந்துகொண்டார்.


நாள்கள் நகர்ந்தன. உறவினர்களும் நண்பர்களும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் வந்து பார்த்துச் சென்றனர். அந்தச் சந்திப்புகள், விதவிதமான உணர்ச்சி களின் வெளிப்பாடாக இருந்தன.



நாள் தவறாமல் சிறைக்கு வந்து கொண்டு இருந்த இலெனின், 30.08.02 அன்று விரவில்லை. என் அண்ணன் செல்வமணியும், நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.


‘இந்துவுக்குக் காலையிலிருந்து இடுப்பு வலியாக இருக்கிறதாம். அதனால்தான் இலெனின் வரவில்லை’ என்று அண்ணன் சொன்னார். ‘தலைப் பிரசவம்.... எல்லோருமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.



மீண்டும் சிறையில் அறைக்குத் திரும்பிய பின், மகளின் நினைவு மனத்தை வாட்டியது. ‘வந்தது, வந்தது ஞாபகம் & மகளே, வாடாத பூப் போன்ற உன் முகம்’ என்னும் அறிவுமதியின் பாடல் வரிகளை வாய் முணு முணுத்தது.


அன்று வெள்ளிக்கிழமை. அடுத்து இரண்டு நாள்களுக்கு எதையும் தெரிந்துகொள்ள முடியாது. திங்கள் கிழமை வரை நெஞ்சம் அதையே நினைத்துக்கொண்டு இருந்தது. நல்ல செய்திக்காகக் காத்திருந்தேன்!

\ (தொடரும்)

1 comment:

தமிழ். சரவணன் said...

//கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போருக்கு இருக்கும் பகல் நேரச் சுதந்திரம்கூட என் போன்ற ‘பயங்கரவாதி’களுக்குக் கிடையாது.//

நீங்கள் செய்த மிகப்பெரிய தப்பு இந்த மனிதனை அடித்து திங்கும் கூட்டத்திற்க்கு மத்தியில் மனிதத்தன்மையோடு இருப்பது இருந்து கொண்டிருப்பது...

நாகரிகம் என்ற பெயரில் அம்மனமாய் அலையும் கூட்டத்திற்க்கு மத்தியல் கோவணம் கட்டியவன் கதைபோல்


//ஜெயலலிதா அரசின் சர்வாதிகாரம் குறித்து, வைகோ தன் அறிக்கை ஒன்றில் மிகத் தெளிவாகக் குறிப் பிட்டு இருந்தார். ‘தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், தமிழகத்தின் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவும், அ.தி.மு.க. அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்து கிறது’ என்று வைகோ சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை!//

இந்த மேலே உள்ள கருத்தை தாங்கள் இப்பொழுது படித்தால் தங்களுக்கு ஒரு நகைச்சுவை படம் பார்த்த உணர்வு ஏற்படும்


//காரைக்குடியில் படித்துக் கொண்டு இருந்த என் இளைய மகன் பாரதிதாசன் கண் கலங்குவதைக் கம்பி வலைகளைத் தாண்டி என்னால் காண முடிந்தது.//

சிறையில் அடைபட்டுக்கிடக்கும் கொடுமையை எனது பொறியில் படித்த தம்பி 498A பொய்வழக்கின் மூலம் 31நாட்கள் புழல் சிறையில் அடைப்பட்டுக் கிடந்த பொழுது இதன் முலம் ஏற்படும் மனசாவுகளை நன்கு அறிவேன்... அறுதல் அறுதலுக்காக சொல்லிக்கொள்ளலாம்