Friday, March 16, 2007

போய்விட்டனவா பொடாவும் தடாவும்?

போய்விட்டனவா பொடாவும் தடாவும்?
சுப.வீ.

தடா, பொடா சட்டங்களெல்லாம் போய்விட்டன என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சட்டங்களின் கீழ் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளன. அதைக்காட்டிலும் கொடுமையான செய்தி, அச் சட்டங்களின் கீழ்க் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் சிறைகளில்தான் உள்ளனர் என்பதாகும்.

வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட பலர் சிறைகளில் இருந்தபோது, அவர்களைப் பற்றிய செய்திகளையேனும் நாளேடுகளும், தொலைக் காட்சிகளும் வெளியிட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் பிணையில் வெளிவந்த பின்பு, தமிழகத்தில் பொடாவின் கீழ்க் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலையாகி விட்டனர் என்பது போன்ற ஓர் உணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் தருமபுரியில் கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் இன்றுவரை சிறையில்தான் உள்ளனர்.

18 வயது கூட நிரம்பாதவர்கள் என்னும் அடிப்படையில், பிரபாகரன், பகத்சிங் என்னும் இரண்டு சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களைத் தவிர பெண் தோழர்கள் அறுவர் பிணையில் வெளிவந்தனர். மற்றபடி இருபதுக்கும் மேற்பட்ட தருமபுரித் தோழர்களுக்கு பிணை கூட வழங்கப்படவில்லை. முழுமையாக 3 ஆண்டுகளை, விசாரணைக் கைதிகளாகவே அவர்கள் சிறையில் கழித்துள்ளனர்.

பிணையில் வெளிவந்துள்ள பெண்களும், தினந்தோறும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்னும் நிபந்தனைக்கு உட்பட்டே வெளியில் உள்ளனர். ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த வெளியூர்ப் பெண்களான அவர்கள், சென்னையில் தங்கி தினமும் காலையில் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வயதில் பொடாவிற்கு மூத்த தடாவின் நிலைமையும் இவ்வாறுதான் உள்ளது. தடாவில் கைது செய்யப்பட்ட இசுலாமியத் தோழர்கள் பலர் ஆண்டுகள் பலவாய் சிறையில் இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 250க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் மீது 35 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவை 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பிணையும் வழங்கப்படாமல், வழக்கும் நடத்தி முடிக்கப்படாமல் 12 ஆண்டுகளாக இவர்கள் சிறையாளிகளாக உள்ளனர்.

மதக்கலவரம், தீவிரவாதம் என்னும் அடிப்படையில் இவர்களின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மதக்கலவரம் என்றால், அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதுதானே பொருள். அவ்வாறாயின், ஒரு மதத்தினர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பது என்ன நியாயம்? மற்ற வகுப்பில் ஒருவர் கூட தவறே செய்யவில்லை என்று சொல்ல முடியுமா?

உள்ளே இருக்கும் சிறையாளிகளின் சிலர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டால் கூட, அது 10 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என்று வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்களோ 12 ஆண்டுகளாக உள்ளே இருப்பதோடு மட்டுமல்லாமல், வழக்குகள் எப்போது முடியும் என்பது கூட தெரியாத நிலையில் உள்ளனர். திசைதெரியாத இருட்டில் அவர்கள் வாழ்க்கை உள்ளே நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் குடும்பத்தினர் வெளியே தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தடாவும் பொடாவும் உண்மையாகவே நீக்கப்படும் காலம் எப்போது வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

2 comments:

said...

தோழர்
//மதக்கலவரம், தீவிரவாதம் என்னும் அடிப்படையில் இவர்களின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மதக்கலவரம் என்றால், அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதுதானே பொருள். அவ்வாறாயின், ஒரு மதத்தினர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பது என்ன நியாயம்? மற்ற வகுப்பில் ஒருவர் கூட தவறே செய்யவில்லை என்று சொல்ல முடியுமா?//

சரியான கேள்வி!!!

தங்களுடைய பதிவுகள் தமிழ்மணம் திரட்டியில் தெரிகின்றனவா? தமிழ்மண வட்டத்தில் இந்துமதவெறியும், தந்தை பெரியாரின் மீது வஞ்சமும் கொண்ட எழுத்துக்கள் பரவலாகவே எழுதப்படுகின்றன. அது போன்ற சூழலிலும் தளத்திலும் தங்களை போன்றோரின் எழுத்துக்களும் விவாதங்களும் மிக மிக அவசியமானவை.. அங்கு எப்படிபட்ட சூழல் நிலவுகிறது என்பதை காட்டுவதற்காக ஒரு இந்துமதவெறியனின் பதிவில் பெரியாரை குறித்து பயன்படுத்தப்பட்ட சொற்களை இங்கு உதாரணமாக அளிக்கிறேன்..

//ஈவெரா போன்றவர்கள் தம் இயல்பில் வக்கிரமான பாலியல் பிறழ்வு கொண்டவர்கள்//
//இவந்தான் ஈவெராமசாமி. இவன் தான் பகுத்தறிவு தந்தையாம். தூ. இப்படி சொந்த பொண்டாட்டியை கூட்டாளிக்கு கூட்டி கொடுக்க முயன்ற காமாந்தகாரனை தந்தை என சொல்லுகிற//
//பகுத்தறிவு பன்னாடை//
//ஈவெராத்தனமான வாழ்க்கை வாழுகிறவர்களுக்கு தாய்க்கும் தாரத்துக்கும் சகோதரிக்கும் என்ன வேறுபாடு தெரியப்போகிறது//
//மது எதிர்ப்பு என்றால் தென்னை மரத்தையே வெட்டுகிற மெண்டல் ஆசாமிதான் இவன். இவனெல்லாம் பகுத்தறிவு தந்தை என்றால் இவன் பெத்து போட்ட பகுத்தறிவு குஞ்சுகள் வேறு எப்படி இருக்கும்//

ஒடுங்கிகிடந்து தமிழர்களின் உதிரத்தில் தன்மான உணர்வை செலுத்திச்சென்ற பெரியாரை குறித்து எழுதப்பட்டிருக்கும் வரிகளிவை..

தோழமையுடன்
ஸ்டாலின்

Ravi kumar said...

எனக்கென்னவோ இந்து வெறியனின் சொற்கள் கலகக்காரர் தந்தை பெரியாரின் சாதனையாகவே படுகிறது... அவர் சாதி ஆதிக்கத்துக்கெதிராக எவ்வளவு பணியாற்றி இருந்தால் இந்த முரண் ஒரு இந்து வெறிநாயின் நாவிலிருந்து வரும்... தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பிறந்தோம் என பெருமை கொள்வோம்.